திங்கள், 18 டிசம்பர், 2017

எதிர்காலத் தமிழ்


முனைவர். ஜாய்ஸ் கென்னடி
       புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி,
                 கூட்டப்புளி

                'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
                                இனிதா வதெங்கும் காணோம்”1
என்று பாடினான் பன்மொழிப் புலவன், முண்டாசுக் கவி பாரதி.
                'கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
                 முற்றோன்றி மூத்த குடி.”2

என்பது புறப்பொருள் வெண்பாமாலை. இத்தகு சிறப்பு மிகுத் தமிழ்மொழி வாழ, தன்னையே கொடுத்த ஆன்றோர் பலர். இயல், இசை, நாடகம் என முப்பெரும் பாகுபாடுகளைக் கொண்ட தமிழ் இன்றைய அறிவியல் காலத்தில் அறிவியல் தமிழாகவும் வளம் கண்டது. என்றும் இளமை மாறா கன்னித்தமிழின் எதிர்காலம் நோக்கி எண்ணிப் பார்த்தால், 'மெல்லத் தமிழ் இனிச்சாகும்என அப்பேதை உரைத்தான் என்ற பாரதியின் கணிப்பு உண்மையாகிவிடுமோ என அஞ்சத் தோன்றுகிறது. மேடையில் முழங்கும் தமிழாக மட்டும் இராமல், நம் நாடி நரம்புகளில் கோலோச்சும் தமிழாக இருக்க வேண்டும்.

தாய்மொழியின் உயர்வு

                'திருத்திய பண்புஞ் சீர்த்த நாகரீகமும்
                 பொருந்திய தூய்மொழி புகல் செம்மொழியாம்”3
என்பது செம்மொழிக்குப் பரிதிமாற்கலைஞர் தருகின்ற இலக்கணமாகும். உலகில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் இருந்தாலும் இலக்கிய, இலக்கண வளமுடைய மொழிகள் மூவாயிரம். அவற்றுள் செம்மொழிகள் எனப் போற்றப்படுவன: தமிழ், சீனம், ஈப்ரு, இலத்தீன், சமஸ்கிருதம், கிரேக்கம்.

                ஒவ்வொருவருக்கும் அவரவர் தாய்மொழி மீது பற்று இருக்க வேண்டியது அவசியம். 'இமயமலை போலுயர்ந்த ஒரு நாடும் தன் மொழியில் தாழ்ந்தால் வீழும்”4 என்பதனை ஒவ்வொருவரும் உணர வேண்டும். வங்கப் பெருங்கவிஞர் தாகூர் ஆங்கிலம் அறிந்தவரே. “தமது பாடல்களை ஆங்கிலத்தில் நேரடியாக எழுதி இருந்தால் உடனே உலகப்புகழ் எய்தியிருக்கலாம். ஆனால் தமது கீதாஞ்சலியைத் தாய்மொழியான வங்கத்தில்தான் தந்தார். பின்னர்தான் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது”5 தாகூர் உலகப் புகழும் பெற்றார்; நோபல் பரிசும் பெற்றார்.

                அதுமட்டுமன்று, “தாய்மொழி மூலம் கல்வி பயிலும் ஜப்பான் இலக்கியத்தில் நோபல் பரிசு பெறுகிறது. தொழில்துறையில் அமெரிக்காவுக்கு நிகராக விளங்கும் விதத்தில் அறிவியல் வளர்ச்சி அடைந்திருக்கிறது. அவர்கள் தங்கள் தாய்மொழியைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்”6 என்பதனைத் தமிழர்களாகிய நாம் உணர்தல் வேண்டும்.

               
                'தமிழுயர்ந்தால் தான் தமிழன் உயர்வான்
                தமிழ்ப்பகை யாளனும் தானே பெயர்வான்”7
என்ற மேலான எண்ணம், கல்வியாளர்கள் உட்பட அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்பட வேண்டும். தாய்மொழி மீது கொள்ளும் பாசம் தாய் மீது கொள்ளும் பாசமாகும். இதனை இளம் தலைமுறையினருக்கு உணர்த்த வேண்டும்.

பயிற்றுமொழி

                “திங்களோடும் செழும்பரிதி தன்னோடும்
                விண்ணோடும் உடுக்களோடும்
                மங்குகடல் இவற்றோடும் பிறந்த தமிழ்
                உலகங்கள், உடுக்கள், கோள்கள் யாவற்றிற்கும் முந்தித் தோன்றியது தமிழ் என்று பாரதிதாசன் பாடுகின்றார்8. “ஒருமொழி நிலைத்து நிற்பதற்கு அதன் பழமையும் வளமையும் மட்டும் போதாது. அம்மொழி பேச்சு மொழியாக, எழுத்து மொழியாக, ஆட்சி மொழியாக, நீதிமன்ற மொழியாக, பயிற்று மொழியாக நிலை பெற்றிடல் வேண்டும்.”9

                தாய்மொழி மூலமே நமது இலக்கியத்தைப் படைத்த இரவீந்திரர்தெரியாத மொழியில் இசையை அனுபவிக்க எண்ணுவது மனைவியோடு வக்கீல் வைத்துப் பேசுவது போல”10 என்கின்றார்.

                தமிழ் பயிற்றுமொழி ஆகக்கூடாது, ஆங்கிலம்தான் நம் குழந்தைகளின் நாவில் நடம்பயில வேண்டும் எனப் பலரும் எண்ணுகின்ற காலம் இது. தமிழன் தலைநிமிர்ந்து வாழ, தமிழ் வாழ வேண்டும். தாய்மொழியின் தேவையை மாணவருக்கு உணர்த்த வேண்டும்.
                “இன்று உலகில் பல வழிகளில் முன்னேறியுள்ள ஜப்பான், தமிழில் இருக்கும் அளவுக்கு, பண்டைய இலக்கியச் செல்வம் பெற்ற மொழி அல்ல. சிக்கலான எழுத்துக்களைக் கொண்ட மொழி. அவர்கள் அந்த மொழியைப் பாட மொழியாகக் கொண்டிருக்கும்போது, தமிழ் பாடமொழி ஆக இயலாது”11 என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதா? பயிற்றுமொழி தமிழாக இருக்கும்போது மாணவர்தம் சிந்தனைத்திறன் வளமுற்று மேலோங்கும்.

அரசின் செயல்பாடு

                'நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
                                வாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர்!
                தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம்
                                பரவும் வகை செய்தல் வேண்டும்”12
                தமிழர், தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழரசு என்று கூறுகின்ற அனைவருக்கும் தமிழாட்சி குறித்த உயர்சிந்தனை வேண்டும். தமிழைப் பேசி, தமிழைக் காரணம் காட்டி, அரசியல் மட்டும் நடத்தக்கூடாது.
                “ஆங்கிலத்தைக் கற்கையிலும்
                                அயல்மொழியைக் கற்கையிலும்
                எந்த நாளும்
                தீங்கனியைச் செந்தமிழைத்
                                தென்னாட்டின் பொன்னேட்டை
                உயிராய்க் கொள்வீர்”13
                இந்தச் சிந்தனை அனைவர் உள்ளங்களிலும் வேரூன்ற வேண்டும்.

                1966ல் பாவாணர் வெளியிட்டஜிலீமீ றிக்ஷீவீனீணீக்ஷீஹ் சிறீணீssவீநீணீறீ லிணீஸீரீuணீரீமீ ஷீயீ கீஷீக்ஷீறீபீஎன்னும் நூல் உலக மொழிகள் அனைத்திற்கும் செம்மொழியானத் தமிழே தாய்மொழி என வாதிடுகின்றது. கமில் சுவலபில் மற்றும் மேலைநாட்டுப் பாதிரியார்களும் தமிழைச் செவ்வியல்மொழி என்கின்றனர். தமிழ் உலக மொழிகளோடு தொடர்புடையது என்பதற்குச் சங்க இலக்கிய வரிகளே சான்று. சங்க இலக்கியத்தின் 26,350 வரிகள் உலகின் ஒப்புயர்வற்ற செவ்வியல்மொழி எனச் சொல்லப் போதுமானது என்கிறார் கபில் சுவலபில்.14

                இத்தகு பெருமைக்குரிய செம்மொழியாம் தமிழ் தரம் தாழ்ந்து செயலிழந்து போக விடுவது, தமிழராகிய நமக்குத் தலைகுனிவு. உலகம் தோன்றிய நாள் முதல் உருவான தமிழினம் உலக அரங்கில் இல்லாமல் போய் விடும். மொழியை இழப்பது நம் விழியை இழப்பதற்குச் சமம். இன்று ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான ஏற்பாடு நடக்கும் சூழலில், அரசே இதனை முன்னடத்திச் செல்ல வேண்டும்.

                தமிழின் செவ்வியல் இலக்கியங்கள் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அப்போது உலகளாவிய அளவில் தமிழ் மொழியும், தமிழ் இலக்கியங்களும் விரிவான நிலையை அடைய முடியும். இதனை அரசுகள் செயல்படுத்துகின்றனவா! தாய் மொழியை வளர்த்தெடுக்க வேண்டிய அரசுப் பள்ளிகளே ஆங்கில வழிக் கல்வியைப் புகுத்துவது ஏற்றுக் கொள்ளக் கூடியதாகாது. அதே சமயம் தமிழ் வழிக்கல்வியில் மாணவர் தம் ஆங்கிலத் திறனை மேம்படுத்த சிறப்பாசிரியரை (ஆங்கிலம்) நியமித்துச் செம்மையுறச் செய்யலாம்.

                “வயிற்றுப் பிழைப்புக்காக வேற்றுமொழியை ஏற்றுக் கொள் என்று சொன்னாலும் மூளை வேற்று மொழி மூலம் பயில்வதை விரைந்து ஏற்றுக் கொள்வதில்லை. இஃது இயற்கை நியதி.”15

                இதைக் காந்தியடிகள் உணர்ந்து 42 ஆண்டுகளுக்கு முன்பே தமதுயங் இந்தியாஏட்டில் எழுதினார். “நமது குழந்தைகளின் மூளை வேற்றுமொழி மூலம் பயில்வதால் அயர்ச்சியுற்று விட்டது. மனப்பாடம் செய்வதால் சுய சிந்தனை மங்கி விட்டது. நமது நாட்டிலேயே ஓர் அந்நிய இனத்தவராக நம் குழந்தைகளை இவ்வேற்று மொழிப்பயிற்சி மாற்றி விட்டது. நமது மொழிகளின் வளர்ச்சியைத் தடுத்து விட்டது. எனக்கு அதிகாரம் இருக்குமானால் இன்றே இவ்வேற்று மொழிப் பயிற்சியை நிறுத்தி மாற்றம் காண்பேன்”16 இதனை அரசும், அரசு அதிகாரிகளும் கருத்தில் கொள்ள வேண்டும்.

                'வண்டமிழ் வாழ்கவென்று
                                வரைவதில் புதுமை இல்லை
                தொண்டு செய்து அழியாமல்
                                தமிழைக் காத்தலே புதுமை.”17
அப்போதுதான் எதிர்காலத்தில் தமிழ், தளர்வின்றி, தொய்வின்றி வளரும்.

                2016 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் பகுதி ஒன்றில் கட்டாயமாகத் தமிழில் மட்டுமே தேர்வெழுத வேண்டும் என்ற அரசு தேர்வுத் துறையின் ஆணைக்குப் பிறமொழி பயின்ற மாணவர்கள் உயர்நீதி மன்றம் வரை சென்று தடை பெற்று தாங்கள் விரும்பிய மொழிகளில் தேர்வெழுதியுள்ளனர்.

உயர்நீதிமன்றத்தில் அவர்கள் முன் வைத்த காரணங்கள் :
1)            எங்கள் பள்ளியில் எங்களுக்குத் தமிழைக் கற்பிக்கவில்லை.
2)            தமிழாசிரியரையும் நியமிக்கவில்லை.

                ஆனால் 2006-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழ் கட்டாயப்பாடச்சட்டம் (அரசாணை எண் : 13&2006 நாள் : 09.06.2006) இல், 2006- & 2007 ஆம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பிலும், 2007- & 2008 ஆம் கல்வியாண்டில் இரண்டாம் வகுப்பிலும் என்று தொடர்ந்து 2015 & -2016 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பிலும் தமிழ்ப்பாடம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளன. இந்த ஆணை திடீரென்று நடைமுறைப்படுத்தப் படவில்லை. மேலும் ஒவ்வொரு கல்வியாண்டிலும் இந்த ஆண்டு இந்தக் குறிப்பிட்ட வகுப்புவரைத் தமிழ்ப்பாடம் கற்றுத்தரப்படுகிறதா என்று கேட்டுப் பள்ளிக் கல்வித்துறையால் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு அனைத்துப் பள்ளிகளிடமும் ஒப்புதலும் பெற்றுக் கோப்பில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வரப்படுகிறது.

                தற்பொழுது தமிழ்மொழிப்பாடம் கற்றுத்தரப்படவில்லை என்ற பள்ளிகள் மீது அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன? தமிழாசிரியர்களையே நியமனம் செய்யாமல் பல பள்ளிகள் தமிழ் நாட்டில் இயங்கி வருகிற அவலம் உயர்நீதிமன்றத்தில் சான்றாதாரமாக வைக்கப்பட்டுள்ளது.

                “தமிழ் நாட்டில் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை என்ற நிலை மீறி, தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களிலேயே தமிழுக்கு இடம் இல்லை; தமிழாசிரியர்களுக்கும் இடமில்லை என்ற இழிநிலை உருவாகியுள்ளது”18 இது பயிற்றுமொழியில் மிகப்பெரிய சவாலாகத்தான் உள்ளது.

                “ஓர் ஆங்கிலேயனை 'எதை இழக்கச் சம்மதிப்பாய் - இங்கிலாந்தையா அல்லது ஷேக்ஸ்பியரையா? எனக் கேட்டால், இங்கிலாந்தை இழந்தாலும் கவலையில்லை, ஷேக்ஸ்பியரை இழக்க ஒருபோதும் இசையேன்என்பான். ஷேக்ஸ்பியர் அவர்களது மொழிப் பெருமையின் சின்னம். ஆங்கிலமொழி வாழ்ந்தால்தான் ஆங்கிலேயன் வாழ்வான் என எண்ணுவோர் ஆங்கிலேயர். ஆனால் இங்கே தமிழர் வாழ்ந்தால்தான் தமிழ் வாழும் என்ற குரல் ஒலிக்கிறது. சில ஓட்டைச் செவிகள் அதையும் கேட்டுக் கொண்டிருக்கின்றன”19

                இந்த நிலை தொடர்ந்தால் எதிர்காலத் தமிழின் நிலை கேள்விக்குரியதாகி விடாதா?
                “கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்
                உன்னுதரத் துதித்தெழுந்தே யொன்றுபல ஆயிடினும்
                ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
                சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.”20
என்று வாழ்த்துவதோடு மட்டுமல்லாது தமிழ் வாழ, தமிழ் சிறக்க ஆவன செய்ய முன் வர வேண்டும்.

                “இன்றளவும் புறங்கொடுக்காது உயர்தனிச் செம்மொழி என்று மொழியாராய்ச்சி வல்லுநரால் புகழ்ந்து போற்றப்பெறும் பெருமையுடன் திகழ்வது முன்னைப் பழைய மொழிகட்கும் முன்னைப் பழைய மொழியாகிய சீர்சால் தமிழ்மொழி ஒன்றே”21 என்பதனை இளமாணாக்கர்  நெஞ்சத்திலே உரமேற்றுவோம். இன்று படித்தவர் முதல் பாமரர் வரை அனைவரையும் ஆட்டிப் படைக்கும் சாதனம் திரைப்படம். திரைப்படங்கள் வாயிலாகத் தமிழுணர்வை ஊட்ட அனைவரும் சிந்திக்க வேண்டும். அதற்கானச் செயல் திட்டங்கள் அரசு செயல்படுத்த முன்னேற்பாட்டுத் திட்டங்களைத் தீட்ட வேண்டும்.

                “இலண்டனில் 27 பள்ளிகளில் தமிழ் கற்றுத் தரப்படுகிறது. ஜெர்மனியில் 4 பல்கலைக்கழகங்களில் தமிழ்ப் பாடப்பிரிவு உள்ளது. கனடாவில் உலகத் தமிழர்களுக்கென, கலை, - தொழில் நுட்பக் கல்லூரி இருக்கிறது. அங்குச் சனி, ஞாயிறு நாட்களில் தமிழ்ப் பாடம் கற்பிக்கப்படுகிறது”22
                இந்தியாவில் உள்ள எந்தவொரு மொழியும் வெளிநாடுகளில் அரசியல் தகுதி பெற்றிருக்கவில்லை. தமிழுக்கோ மலேசியா, சிங்கப்பூர், இலங்கை முதலிய இடங்களில் அரசு மட்டத்தில் தனி மதிப்பு. இலங்கையில் தனியே தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் அமைக்க அந்நாட்டு அரசு முன் வந்துள்ளது. அங்கே பல்லாண்டுகட்கு முன்பே பாதிரியார்கள் மருத்துவப் பள்ளியைத் தமிழில் நடத்தி இருக்கிறார்கள்.
                இத்தகு பெருமைக்குரிய செயல்பாடுகளை நாம் அனைவரும் உணர்ந்தாலே எதிர்காலத்தமிழ் ஏற்றம் பெற்று விளங்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
                தமிழுக்கும் அமுதென்று பேர் &- அந்தத்
                தமிழ் இன்பத் தமிழ் &- எங்கள்
                உயிருக்கு நேர்.
வாழ்க செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
அடிக்குறிப்புகள்
1.            பாரதியார் கவிதைகள், பாரதியார் :155

2.            புறப்பொருள் வெண்பா மாலை, ஐயனாரிதனார், :48

3.            செம்மொழித் தமிழ் சிறப்பும் வரலாறும், முனைவர் பெ.சுயம்பு, :37
4.            தமிழியக்கம், பாரதிதாசன், :49

5.            மீரா கட்டுரைகள், கவிஞர்மீரா, :20

6.            மேலது, :18

7.            வேங்கையே எழுக, பாரதிதாசன், :115

8.            செம்மொழித்தமிழ் சிறப்பும் வரலாறும், முனைவர் பெ.சுயம்பு, :67

9.            பத்தாம்வகுப்பு தமிழ்ப்பாடநூல், தமிழ்நாட்டுப்பாடநூல் நிறுவனம், :13

10.          மீரா கட்டுரைகள், கவிஞர்மீரா, :20

11.          மேலது, :18
12.          பாரதியார் கவிதைகள், பாரதியார், :155

13.          தமிழியக்கம், பாரதிதாசன், :35

14.          சங்கத்தமிழர் வாழ்வியல், முனைவர் தா.நீலகண்டப்பிள்ளை, :75

15.          மீரா கட்டுரைகள், கவிஞர் மீரா, :15

16.          மேலது, :15
17.          தமிழ்வளர்த்த மாமுனிவர் மங்கலங்கிழார், முனைவர்.ஆலந்தூர்                                                       கோ.மோகனரங்கன், :188.
18.          தமிழாசிரியர் முழக்கம், பாரதிதாசன், :4-5
19.          மீரா கட்டுரைகள், கவிஞர்.மீரா, :22
20.          மனோன்மணீயம், பேரா.சுந்தரம்பிள்ளை, :113
21.          கால்டுவெல் ஒப்பிலக்கணம், :184
22.          வாராந்தரி ராணி, :19
23.          மீரா கட்டுரைகள், :14

துணை - நூற்பட்டியல்
1.            கால்டுவெல் ஒப்பிலக்கணம், திருகாழி சிவ.கண்ணுசாமி பிள்ளை, பி., திரு.கா.அப்பாத்துரை பிள்ளை  எம்..எல்.டி, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை&9. 1941.

2.            சங்கத்தமிழர் வாழ்வியல், முனைவர்.தா.நீலகண்டப்பிள்ளை. செம்மூதாய் பதிப்பகம், சென்னை&64, 2012 முதற்பதிப்பு.

3.            செம்மொழித் தமிழ் சிறப்பும் வரலாறும், முனைவர்.பெ.சுயம்பு, பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை &- 14, 2011, இரண்டாம் பதிப்பகம்.

4.            தமிழ்வளர்த்த மாமுனிவர் மங்கலங்கிழார், முனைவர்.ஆலந்தூர் கோ.மோகனரங்கன், மாசறு, திருவல்லிக்கேணி- சென்னை-&5, 2006.

5.            தமிழியக்கம், பாரதிதாசன், செந்தமிழ் நிலையம், புதுக்கோட்டை, 1978

6.            பாரதியார் கவிதைகள், பாரதியார், லியோ புக் பப்ளிஷர்ஸ், சென்னை & -106, 2004.

7.            புறப்பொருள் வெண்பாமாலை, ஐயனாரிதனார், பாரி நிலையம், சென்னை & 1, 1963.

8.            பேராசிரியர் சுந்தரம்பிள்ளை, மனோன்மணீயம், பதிப்பாசிரியர் முனைவர்..இயேசுதாஸ், சிஷிமி.அச்சகம், மார்த்தாண்டம், 2000.

9.            மீரா கட்டுரைகள், கவிஞர்.மீரா, பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை & -14, 2008.

10.          வேங்கையே எழுத, பாரதிதாசன், பூம்புகார் பிரசுரம், சென்னை & -13, 1978.
இதழ்கள்

1.            தமிழாசிரியர் முழக்கம், தமிழகத் தமிழாசிரியர் கழகத் திங்கள் இதழ், 25.03.2016.

2.            வாராந்தாரி ராணி, வார இதழ், 04.07.2010.
பாடநூல்
1.                   பத்தாம் வகுப்பு- தமிழ்ப்பாடநூல், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், சென்னை- & 6.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக