எம். எம். தீன்.
சிறுகதை ஆசிரியர்
அழகாலும் அளவாலும் ஆன்மாவை அழைத்துச் செல்லும் நடையாலும், நளினமானச் சொல்லாடலாலும்,
நவீன எண்ணத்தாலும் நன்னெறியாலும் உலகின் முன்னணி இலக்கியமாகத் திகழ்வது சிறுகதையே ஆகும். அதனால்தான் அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளர் ஓ’கானர்
“அமெரிக்காவின் தேசியக் கலை வடிவம்” என்று சொல்வார்.
உலகம் முழுவதும் எல்லா மொழிகளிலும் சிறுகதைகள் எழுதப்படுகின்றன. அதே போல் சிறுகதை ஆசிரியர்களும் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள். சிறுகதை ஆசிரியர்கள் தனது அனுபவம், அறிவு,
எண்ணம்,
இயக்கம் சார்ந்து ஒரு புதிய படைப்பாகச் சிறுகதையை மக்கள்முன் வைக்கிறார்கள். அது வாசகனை ஈர்த்து அவனது சிந்தனைகளை மேம்படுத்தப் பலவகையிலும் உதவி செய்கின்றன.
ஒரு தேர்ந்த சிறுகதை அதிகமான வாசகர்களைக் கவர்ந்து அவனை வேறொரு இடத்திற்கு நகர்த்தி விடுகிறது.
ஓ’ஹென்றி,
சாமர்செட் மாம் போன்றவர்களின் கதைகளைப் படிக்கிற வாசகன் அந்தச் சிறுகதைகளின் எண்ண வியலாதக் கடைசித் திருப்பத்தில் அதிசயத்து நிற்கிறான். அதன் திடீர் திருப்பம் அவன் தொடர் எண்ண ஓட்டத்தை அப்படியே திருப்பிப் போட்டு விடுகிறது. அதில் கிறங்கி, அந்த எழுத்தாளர்களின் ரசிகனாகி,
தொடர்ந்து அவர்களைத் தேடித் தேடி வாசிக்கிறான்.
அதேபோல் ரசியாவின் தேர்ந்த சிறுகதை எழுத்தாளர் ஆண்டன் செகாவின் சிறுகதைகள் நம்மை நுட்பமான அந்த காலத்திற்கும், அந்தக் காலநிலைக்கும்,
அங்குள்ள வாழ்வியல் முறைகள், பண்பாடு போன்றவற்றை எல்லாம் அறியத் தருகிறது. அது மட்டுமல்ல, மனிதனின் நுட்பமான மனது இயங்கும் தன்மைகளை மிகவும் அழகாக நம் கண்முன் வைத்து விடுகிறார். அது நமது கற்பனையை அவரது ருசிய நாட்டிற்கே எடுத்துச் சென்று விடுகிறது. ஆனால் நவீனச் சிறுகதைகள் நம்மை வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்று விடுகின்றன. அதன் தன்மைகளும்,
வரையறைகளும் பிரபஞ்சத்தைப் போல விரிந்து கொண்டே செல்லுகின்றன.
தமிழில் சிறுகதைகள் தோன்றி நூற்றாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. ஆங்கிலப் புலமைமிக்க வ.வெ.சு. ஐயர் புதுச்சேரியில் பாரதியைச் சந்தித்து பழகிய வருடம்
1910 ஆகும். இருவரும் தமிழை வளப்படுத்தும் பொருட்டு “சுதேசமித்திரன்”,
“இந்தியா”
போன்ற இதழ்களில் கதையும், கவிதையும்,
கட்டுரைகளும் எழுத ஆரம்பித்தார்கள்.
வ.வெ.சு.
அய்யர் ஆங்கிலப் படிப்பின் மூலம், தமிழில் முதன் முயற்சியாக “குளத்தங்கரை அரசமரம்” என்ற சிறுகதை எழுதத் தொடங்கினார். அரச மரத்தைப் பேச வைத்து ருக்குமணி என்ற பெண்ணின் துன்பக் கதையைச் சொல்கிறார்.
வ.வெ.சு.அய்யரைத் தொடர்ந்து பாரதியார் வேடிக்கையாகவும், தந்திரங்களாகவும் சில சிறுகதைக்ளை எழுதத் தொடங்கினார்.
அதன்பின்பு,
மணிக்கொடி இதழில் சிறுகதைகள் எழுதப்பட்டன. அதில் புதுமைப் பித்தன், கு.ப.ராஜகோபாலன், பி.எஸ்.ராமையா, மௌனி, பிச்சமூர்த்தி, ல.சா.ரா,
கல்கி போன்ற எழுத்தாளர்களை அது தமிழ் உலகத்திற்குத் தந்தது. மணிக்கொடி எழுத்தாளர்கள் அனைவரும் வெவ்வேறு பாணிகளில் சிறுகதைகளை எழுதத் துவங்கினர். ஒவ்வொருவர் நடையும், பாணியும் வெவ்வேறு முறையில் இருந்ததால் தமிழ்ச்சிறுகதை பல கணபரிமாணங்களோடு வெளிவர ஆரம்பித்தது.
புதுமைப்பித்தன் உலகச் சிறுகதைகளை தமிழில் மொழி பெயர்ப்பு செய்து வெளியிட்டார்.
மணிக்கொடி காலத்திற்குப் பிறகு சிறுகதை வேகமெடுக்கத் துவங்கியது. சிறுகதையாசிரியர்கள் வாழ்க்கையைப் புதிய கோணத்தில் பார்க்கத் துவங்கினர்.
வறுமை,
ஏழ்மை,
மூடநம்பிக்கைகள்,
வறட்டு கொளரவம், சாதீயம், மதவாதம் போன்றவற்றிற்கு எதிராக எழுதத் துவங்கினார்கள்.
வறுமைக்குத் தீர்வு, சமதர்ம சமுதாயம் என்று எழுத்தாளர் விந்தன் சிறுகதைகளில் சொல்லத் துவங்கினர்.
தஞ்சாவூர் பிராமண சூழ்நிலையில்,
தஞ்சை வட்டாரச் சொல்லாடல்களோடு எழுதினார் தி. ஜானகிராமன்.
காதலை அகிலனும், கரிசல் மொழியை கு. அழகிரிசாமியும் அவரைத் தொடர்ந்து கி. ராஜநாராயணனும் எழுதினார்கள். பின்னாட்களில் மானுட வசந்தத்தை,
எளிய மக்களின் வாழ்வை, அவர்களின் உணர்வை தனது கதைகளில் வரைந்தார் ஜெயகாந்தன். அதே போன்று வை.மு.கோதைநாயகி, அநுத்தமா போன்ற பெண் எழுத்தாளர்களும் பெண்ணின் வாழ்வை மையப்படுத்தி எழுதத் துவங்கினார்கள்.
தமிழ்ச் சிறுகதை பல்வேறு முகங்களோடு செழிப்பாக வளரத் துவங்கியது.
இன்றைக்கு உலகச் சிறுகதை இலக்கியமும், அதையொட்டிய இந்தியச் சிறுகதைகள், குறிப்பாகத் தமிழ் சிறுகதை பல்வேறு கட்ட வளர்ச்சி நிலையை நோக்கி நகரத் துவங்கியுள்ளது.
நவீன சிறுகதைகள் பல்வேறு கோட்பாடுகளுடன் வளரத் துவங்கின. மேலை நாட்டார் நனவோடை மனஉத்தி, சர்ரியலிசம்,
இருத்தலியல் வாதம், சார்பியல் வாதம் போன்ற கோட்பாடு ரீதியான கதைகளை எழுதத் துவங்கினர்.
ஞி.பி.லாரன்ஸ் உருவாக்கிய நனவோடை உத்தி சிறுகதை சொல்லும் பாணியை மிகவும் வித்தியசமாக மாற்றியது.
அதனையொட்டி சுந்தர ராமசாமி சிறுகதை எழுதத் தொடங்கினார். பொன்னிலன், தனுஷ்கோடி ராமசாமி, தமிழ்செல்வன், பூமணி போன்றோர் ருசியாவில் தோன்றிய சோசலிச யதார்த்த வாதம், சமதர்ம வாதம் போன்றவற்றைக் கொண்டு சிறுகதைகளைப் படைக்கத் துவங்கினர்.
இப்போது சிறுகதைகள் ªவ்வவேறு வடிவங்களை கொண்டு எழுதப்படுகிறது.
சமீபத்திய சிறுகதைகள் உத்தி முறையாலும், வடிவத்தாலும் மிகுந்த வேறுபாடுகளைக் கொண்டுள்ளன.
பின் நவீனத்துவம், வாழ்வியல் சிக்கல்களை அப்படியே வெளிப்படையாகப் பேசுகிறது. அதன் வடிவங்கள் மானுட வாழ்வின் காதல், வாழ்வு, அந்தரங்க உறவு, கொடும் மனது போன்றவற்றை அப்படியே வெளிப்படுத்திக் காட்டுகின்றது.
நவீனச் சிறுகதைகள் ஏற்கனவே சொல்லப்பட்ட எல்லா வரை விலக்கணங்களுக்கும் அப்பாற்பட்டு தன்னை வேறு ஒரு உலகத்திற்கு எடுத்துச் சென்று விட்டன. கதை சொல்லல் உத்திகளும் மாறிவிட்டன. சொல்லப் போனால் கதைகளே கூட கிடையாது நவீன கதைகளில் நவீனச் சிறுகதைகளில் மேஜிக்கல் ரியலிசம் என்ற புனைவியல் வாதத்தையும் தாண்டி எழுதப்படுகின்றன.
ஏற்கனவே சமூகத்தில் இருந்து வரும் விழுமியங்களை,
யதார்த்தத்தை கேள்விக்குள்ளாக்குகின்றன. மிகையுணர்ச்சி,
நன்னெறி போதிப்பவை என்ற அடிப்படையை விடுத்து பகடி, நகைமுரன், அங்கதம், புதிய சிந்தனை போன்றவற்றை முன் வைக்கின்றன. இயல்பான வாழ்வியல் யதார்த்தம் என்று சாருநிவேதிதா, தஞ்சைபிரகாஷ் போன்றவர்கள் மனதின் அந்தரங்க வாழ்வையும் அப்படியே எழுதித் தீர்க்கிறார்கள்.
தற்போது எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்றவர்கள் யதார்த்த வாழ்வியல் சூழ்நிலைகளை அப்படியே தங்கள் படைப்புகளில் முன்வைக்கிறார்கள். இதையும் தாண்டி வண்ணதாசன், வண்ண நிலவன், அசோக மித்திரன் போன்றவர்கள் தங்களின் உன்னத அனுபவங்களை தங்கள் எழுத்துக்களில் பதிவிடுகிறார்கள்.
அவர்களின் இனிய அனுபவம் அல்லது கண்ட யதார்த்தத்தை
மிக நுட்பமான நேர்த்தியோடு சொல்லிச் செல்கிறது.
சமீபத்தில் வெளியான வண்ணதாசனின்
“கமழ்ச்சி”
எனும் சிறுகதை தொகுப்பு மிக நுட்பமான வாழ்வியல் கணங்களைப் படம் பிடித்துக் காட்டுகிறது. அவரது “கமழ்ச்சி” சிறுகதையில் வாழ்வின் சித்திரிப்பு,
இயற்கையின் எழில் நுட்பம், வெயிலின் படிமங்கள், இசையின் பிரவாகம், மனப்பிறழ்வு வாழ்வினை அங்கீகரித்தல்,
மாயாவாதம் என எல்லாவற்றையும் பேசுகிறது. கதை முன்னும் பின்னுமாய் நகர்ந்து போகிறது. மனதில் வாழ்வின் மேன்மை உதிரும் தருணங்களை அவருக்கே உரிய மென் மனவோட்டத்துடன் கதையை நகர்த்திச் செல்கிறார்.
இந்த வகை நவீனச் சிறுகதைகளே எதிர்காலச் சிறு கதையின் வளர்ச்சியை தீர்மானிக்கின்றன.
இந்த இடத்தில் ஒரு சமூகத்தின் கதைகளாக, குறிப்பாக இசுலாமிய சமுதாயத்தினர் எழுதும் சிறுகதைகள் பற்றியும் குறிப்பிடப்பட வேண்டும். இசுலாமியச் சிறுகதைகள் இப்போது நீதிக்கதைகள் தளத்தைத் தாண்டி, தோப்பில் முகம்மது மீரான், களந்தை பீர்முகம்மது, மீரான்மைதீன், சல்மா போன்றவர்கள் நவீன சிறுகதை தளத்தில் நின்று எழுதி வருகிறார்கள்.
எதிர்காலச் சிறுதைகள் இன்றைய நவீன காலத்தின் வாழ்வால் சிக்கல்களைக் குறித்து பேசும் சிறுகதைகளாக வளரும். இந்த சமூகத்தின் போலித் தனத்தை தனது புதிய வகைச் சொல்லாடல்களால் பகடி செய்யும் அல்லது சாடி தட்டிக் கேட்கும்.
அதே போல வளர்ந்து வரும் நவீன விஞ்ஞானத்தின் கூறுகளையும் ஏற்றுக் கொண்டு புதிய நவீன வாழ்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தினைப் பதிவு செய்யும். எதிர்கால விஞ்ஞானக் கனவுகளை எழுதும் புதிய வகைப்பாணி, புதிய கோட்பாடு வகையிலான சிறுகதைகளை உருவாக்கும். அவைதான் எதிர்கால வாசகனை ஈர்க்கும்.
படிப்பு குறைந்து வரும் இந்த நாட்களில்,
எதிர்கால சிறுகதை என்பது புதியவாசகர்களை கவனப்படுத்தும்,
புதிய கருத்துக்களில் அமையும் என்பது உறுதியான ஒன்று.
பேரா.
கா.
சிவத்தம்பி சொன்னது போல, “தமிழின் மேன்மை, அதன் தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில் இருக்கிறது”
என்பது சிறுகதை இலக்கியத்திற்கும் பொருந்தும். எதிர்காலச் சிறுகதைகள் நூற்றாண்டுகள் கண்ட தமிழ்ச் சிறுகதையின் மேன்மைக்கும், வளர்ச்சிக்கும் அதன் தொடர்ச்சியான படைப்புகளே காரணியாக அமையும். அந்தத் தொடர்ச்சியின் வழியில் எதிர்காலச் சிறுகதைகள் பயணிக்கும். பல உன்னதச் சிறுகதைகளை தமிழ் மூலமாக உலகிற்கு வழங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக