தேசியப் பாவலர் த.மு.சா.காஜாமுகைதீன் எம்.ஏ.,எம்.ஃபில்., மேலப்பாளையம்
முன்னுரை
மக்களின் இன்ப துன்ப உணர்வுகளைச் சித்தரிப்பதாகச் சிறுகதை, புதினம் எதிர்காலத்தில் அமையும்; - அமைய வேண்டும். சிறுகதை,
புதினங்களை மக்கள் பெரிதும் விரும்பி வாசிக்கின்றனர்.
சமூகத்திற்கு இன்றும் என்றும் இன்றியமையாது வேண்டப்படும் மனித நேயம் சார்ந்த உணர்வுகளைக் கருவாகக் கொண்டச் சிறுகதை, புதினங்கள் கதை மாந்தர்களாக வாசிப்போர்களையும் மாற்றி விடுகின்றன.
சமூக நடப்பியல் (யதார்த்தம்) நோக்குள்ள படைப்புகளில் மிகைக் கற்பனைகளுக்கும்,
வருணனைகளுக்கும் இடமில்லை. சமூக நடப்பியல் அக்கதைகளின் ஊடகமாக அமைவதால் தமிழ் வழக்காறுகளைக் கதை உரையாடல்களில் காணமுடிகிறது.
இம்மொழி நடை தமிழுக்கும் வாசகனுக்கும் பாலமாக அமைகிறது.
கூறலும் உணர்த்தலும்:
கதை மாந்தர்களின் வழியே வெறும் கூற்றாகக் கதை நடப்பைக் கூறாமல் கூறும் முறையால் உணர்த்துவதாகவும் இக்கதைகள் அமைகின்றன,
அமைய வேண்டும். சிறுகதை - புதினங்கள் “காலங்களைக் கடந்தும் கருத்துக்களைக் கடந்தும் இன்றும் அவை ஏற்றமும் எழிலும் பெற்றுத் திகழ்வதற்குக் காரணம் அவ்விலக்கியங்கள் பெற்றிருக்கின்றப் பல்வேறு தனிச் சிறப்பியல்புகளேயாகும்.
கூறும் கருத்தால் மட்டும் அவை கவின் பெற்றுத் திகழ்வதில்லை.
உணர்த்தும் திறத்தாலும் அவை ஒளி பெற்றும் உயிர் பெற்றும் திகழ்கின்றன. இலக்கிய உணர்வு கூறும் பொருளில் இல்லை என்பர்” என்றார் இ.சுந்தர மூர்த்தி (நூல் நடையியல் அறிமுகம், பக்:
9,10)
பாச உணர்வு
:
“.....
அவருக்கு எதிரே நின்றிருந்தான் கேஸ் டெலிவரி பையன் செம கனமான சிலிண்டரைத் தோளில் சுமந்தபடி.
அத முதல்ல இறக்கிவையி தம்பி’ என்று துரிதப்படுத்தியதோடு,
அவனுக்கு ஒருகை கொடுத்துச் சிலிண்டரை இறக்கி வைக்க உதவினார்.
‘லிப்ட் வேலை செய்யலியே தம்பி, இந்தச் சிலிண்டரைச் சொமந்துக்கிட்டு அஞ்சு மாடிக்குப் படி ஏறியா வந்த?’ ‘ஒங்களுக்கு டெலிவரி கொடுக்கணுமே சார்’ ‘அதுக்கு கீழே நின்னு ஒரு ஃபோன் அடிச்சிருந்தா நா வந்து உனக்குக் கை கொடுத்திருப்பேனே தம்பி.
சாரி உள்ளே வா.’
சிலிண்டரை நகர்த்திக் கொண்டு போய் கிச்சனில் வை” காலி சிலிண்டரை எடுத்துவிட்டுக் காலி சிலிண்டரைத் தூக்கிக் கொள்ள முற்பட்ட போது இவர் தடுத்தார்.
‘அத அப்படியே வைதம்பி, இப்படி வந்து ஃபேனுக்கடில ஒக்காரு’ என்று அவன் கையைப்பிடித்து வழிநடத்தி வந்து ஷோபாஃவில் உட்கார்த்தி வைத்தார். போன வாரம் பழைய டெலிவரி ஆளோட வந்தது நீதானே தம்பி?’ ‘ஆமா சார். அப்ப ட்ரெய்னிங்ல இருந்தேன்.
இன்னிக்கித்தான் மொத நாள் டியூட்டி’ ‘மொத நாளே ஒன்னக் கஷ்டப்படுத்திட்டோமே தம்பி. இது ஸெகண்ட் சிலிண்டர் தான். எங்களுக்கு அவசரமே இல்ல இன்னிக்கிப்பாத்து லிஃப்ட் மக்கர் பண்ணிருச்சி பார், சாரி இப்ப நீ என்ன பண்ற, நம்ம வூட்ல சாப்டுட்டுப் போற, யம்மா!
இந்தப் பையனுக்குச் சோறு வச்சுக்குடேன்”, ‘இல்ல சார்,
வீட்டுக்குப் போகனும் வீட்ல அம்மா காத்துட்டிருப்பாங்க’
‘அம்மா காத்திட்டிருப்பங்களாக்கும்? அம்மா ஸெண்டிமென்ட் ஓர் அருமையான விஷயம் தான்’ இவர் புன்னகைத்துக் கொண்டிருந்தபோது உள்ளேயிருந்து சாச்சி வந்தாள். கையில் ஒரு கண்ணாடி டம்ளரோடு,
‘இந்த ஜுஸையாவது குடிச்சிட்டுப் போப்பா’ ஷோஃபாவின் விழும்பிலிருந்து எழுந்து கொண்டு ஜில்லென்றப் பழரசத்தை அனுபவித்துப் பருகினான்.
பிறகு,
பில்லுக்கானப் பணத்தைப் பெற்றுக் கொண்டு கிளம்பவிருந்தபோது சாச்சா , ஓர் இருபது ரூபாய்த் தாளையெடுத்து நீட்டினார் ‘தம்பி இத வச்சிக்க’ ‘வேண்டாம் சார்’ ‘சும்மா வாங்கிக்க தம்பி, எங்களுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருக்க’ டியூட்டி தானே சார்,’ டியூட்டிக்காக யார் தம்பி, இவ்வளவு மெனக்கிடு வாங்க! இந்தா வச்சிக்க,
‘வேண்டாம் சார் எங்கம்மாவுக்குப் பிடிக்காது’ ‘ஓ திரும்பவும் அம்மா ஸெண்டிமென்டா என்று அவர் கையை மடக்கிக் கொண்டார்..... (ஏ.ஏ.ஹெச்.கே.
கோரி,
மெல்லின மாந்தர் குறு நாவல், சிற்றேடு காலாண்டிதழ்,
ஜுலை செப்டம்பர் 2013)
இக்கதையில் கதையாசிரியர் உணர்த்தும் திறனைச் சிறப்பாக வெளியிட்டுள்ளார். உணர்ந்து கொள்ளும் பொறுப்பை வாசகர்களிடமே விட்டுள்ளார், கதைக் கட்டமைப்பில் கதையாசிரியரின் சிறந்த உத்திகளில் ஒன்று இது.
வட்டார வழக்குத் தமிழ்:
கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலத்திலும் நிலைக்கக்கூடியன வட்டார வழக்குத் தமிழ். தமிழை விட்டு வழக்காறுகளையும், வழக்காறுகளைவிட்டுத் தமிழையும் பிரித்துப் பார்க்க முடியாது. சிறுகதை,
புதினங்களில் வழக்காறுகள் பெரிதும் இடம்பெற்றுள்ளன. “எந்த ஸ்கூல்ல படிச்சானாம் “ஊட்டியில படிச்சானாம்” ... அதிருக்கட்டும் ‘நீர் ஏம்ப்பு’ பதிமூணாம் வாய்ப்பாடு சொல்லித் தரல’ ‘அட எனக்கே தெரியாதேப்பு நா படிக்கிற காலத்துல பதிமூணாம் வாய்ப்பாடு சொல்லித் தந்ததில்ல, அன்னிக்கிநா பள்ளிக் கூடத்துக்குப் போகலில்ல’
‘இளங்கண்ணன் குபுக்கென்று சிரித்தது பாண்டியனுக்கு மேலும் கடுப்பு. “கண்ணா! கிரி, நாளைக்கு மதியத்துல சோத்துக்கு வைஞ்சனம் இல்லன்னுட்டு திரும்ப நீ எங்கிட்டத்தான் வருவ. அப்பப் பேசிக்கிறாம்ப்பு”
(சிறுகதை,
கிரீடத்தைக் கழட்டி வை, ஏ.ஏ.ஹெச்.கே.கோரி சிறு கதைகள் தொகுதி 2:ப.70)
“எங்கட கலியாணத்துக்கு அவங்கட அம்மா அப்பவே எதிர்ப்புத் தான். இது ஒண்டும் எனக்குப் பெரிய அதிர்ச்சி இல்ல. ஆனால் சுவேதா இப்படி மனம்மாற ஏதோ ஒரு காரணம் இருந்திருக்கு.
அதைத்தான் என்னால புரிய முடியாமலிருக்கு” (அடுத்த கட்டப் போராட்டம் தெய்வீகச் சிறுகதை, விகடன் தடம், அக்டோபர்
& 2016, ப.64.)
இக்கதைகளின் ஆசிரியர்கள் வட்டார வழக்காறும் (மொழி நடையும், நடப்பியலும்
(யதார்த்தமும்)
பின்னிப் பிணைந்த நிகழ்வுகளைத் தேர்ந்து இவற்றுள் எவ்விதப் புதை பொருளும் (சஸ்பென்ஸ்) இல்லாமல் அப்பட்டமாகக் கதையோட்டத்தை நடத்திச் சென்றுள்ளனர். இவை வாசகர்களின் மனத்தைப் பற்றிப்பிடிக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
மனிதநேயம்:
புதினங்களில் சமூகப் புதினங்கள் மக்களின் மரபு, பண்பாடு,
நாகரிகம் தமிழர் அறநெறி, மொழி முதலியவற்றைப் பெரும்பாலும் கொண்டு திகழ்கின்றன,
ஏ.சு.
நல்லபெருமாள் எழுதியக் கல்லுக்குள் ஈரம் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றோடு சமூகப் பின்னணி கொண்டதாகவும் படைக்கப்பட்டுள்ளது. ர.சு.நல்லபெருமாள் இப்புதினத்துள் கற்பனை மாந்தருள் முதன்மைக் கதை மாந்தன் அரங்கமணி. இந்திய விடுதலைப்போர் காலத்தில் விடுதலை இயக்கத் தீவிர இளைஞர்களில் ஒருவனாக விளங்கியவன். விடுதலைப் போருக்கு எதிரான வெள்ளையர் மீது கடும் வெறுப்புக் கொண்டவனாகக் கதைப்பின்னலுக்கேற்ப அவனைக் கதையாசிரியர் சித்தரிக்கிறார்.
அவற்றினூடே,
“சுயேட்சைப் பத்திரிகையின் நிரூபர் என்னும் போர்வையில் தில்லி நகருக்குச் செல்கிறான் அரங்கமணி. இரயில் வண்டி நகரத் தொடங்கியது. அந்தச் சமயத்தில் அரங்கமணி இருந்தப் பெட்டியில் தொத்தி ஏற முனைந்தார் வெள்ளைக்காரர் ஒருவர். வெள்ளைக்காரர் அரங்கமணியைப் பார்த்து உதவி வேண்ட, ஒரு கையை நீட்டி அவரை வண்டிக்குள் பிடித்து இழுத்தான் பெட்டிக்குள். அவர் வந்ததும் அரங்கமணியைப் பார்த்து,
“மிக்க வந்தனம். நீங்கள் உதவி செய்யவில்லை என்றால் இந்த வண்டியை தவறவிட்டிருப்பேன். ஏன்? வண்டிக்குள் விழுந்து நசுங்கிக் கூடப்போயிருப்பேன்” என்று ஆங்கிலத்தில் கூறி நன்றி பாராட்டி தான் அமெரிக்கா நாட்டினைச் சேர்ந்தவன் என்றும் ‘மில்லர்’
என்பது தனது பெயர் என்றும் அறிமுகம் செய்து கொள்கிறார்”
(ர.சு.நல்லபெருமாள்,
கல்லுக்குள் ஈரம், பக்: 420)
இதில் பிறருக்கு உதவும் மனித மாண்பின் உளவியல் அரங்கமணியின் உதவிக் கரத்தின் மூலம் வெளிப்படுகிறது.
“இலக்கியம் உளவியலுடன் நெருங்கிய உறவுடையதாகும்” (தமிழண்ணல், ஒப்பிலக்கிய அறிமுகம், பக்:18)
ர.சு.நல்லபெருமாளின் கால வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படாத மொழிநடை சார்ந்த புதினங்களே தமிழில் இனிஎதிர் காலத்திலும் வரவேண்டும்.
“காலையில் எட்டு மணிக்கு முக்கிமுனகிக்கொண்டு ஒரு நீண்டப் பெருமூச்சுடன் மதுரை சந்திப்பில் வந்து நின்றது இரயில் வண்டி. சென்னையிலிருந்து இரண்டு நாட்களுக்குமுன் புறப்பட்ட அந்த வண்டி பயங்கரவாதிகளை எண்ணிப்பயந்து கொண்டே பல இடங்களில் நின்று நின்று ஒருவாறு மதுரைக்கு வந்து சேர்ந்து விட்டது. வண்டி நின்றதும் நெல்லிக்காய் மூட்டை அவிழ்ந்தது மாதிரி பிரயாணிகள் வெளியே உதிர்ந்தனர். (மேலது, பக்:1)
1947-க்கு முன்பு நடந்த இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றைச் சமூகப்பின்னணியோடு எழுதியுள்ளார் கதையாசிரியர். இப்புதினத்தின் மொழிநடை இன்றைய மக்களின் தமிழ்மொழி நடையாக இருக்கிறது. எதிர்காலத்தும் இத்தமிழ் மொழிநடை இருக்கும்;
இருக்க வேண்டும்.
“இன்றையத் தமிழ்ச் சமூக நாவல்கள் சமூகவியல் செய்திகளை விளக்கும் ஒரு சமூக வரலாற்று ஏடுகளாகவும் விளங்குகின்றன. நடப்பியல் தன்மை வாய்ந்த தமிழ் நாவல்களில் மக்கள் வாழ்வியல் எதிரொலிப்பதைக் காணலாம். வாழ்க்கை கற்பிக்கும் சமுதாய மதிப்புகளைத் தம் படைப்புகளில் நாவலாசிரியர்கள் காட்டுகிறார்கள்”
(ப.திலீப்குமார் கட்டுரை, மாதொருபாகன் நாவலில் மாறிவரும் சமூக மதிப்பு, காவ்யா, தமிழ் காலாண்டிதழ்,
ஜனவரி
& மார்ச் & 2013, பக்:64)
புதினங்களில் மனித இயல்பு:
ஒரு புதினம் தலைமுறை சில கடந்து (ஒரு தலைமுறை 25ஆண்டுகள்) நிலை பேறுடையதாகத் திகழ வேண்டுமெனில் மனித வாழ்க்கையை எதிரொலிப்பதாக இருக்க வேண்டும். மு.வரதராசனாரின் சமூகப் புதினங்கள் தமிழ்கூறும் நல்லுலகில் நிலைபேறுடையதாக இருக்கின்றன. குறிப்பாக அந்தநாள்,
மண்குடிசை,
அகல்விளக்கு,
மலர்விழி,
டாக்டர் அல்லி, கயமை, கரித்துண்டு, செந்தாமரை முதலியனச் சமூகத்தில் எத்தனை வகை மனிதர்கள் உண்டோ அத்தனை வகை மனிதர்களின் வாழ்க்கையையும் எதிரொலிப்பதாக உள்ளன.
புதினங்களின் மனித இயல்பு “மனிதர்களை அவர்தம் இயல்புகளை அடிப்படையாகக் கொண்டு இருபெரும் பிரிவுக்குள் அடக்கி விடுகிறார்,
மு.வ.
ஒன்று நல்லவர், இன்னொன்று கெட்டவர், அவருள் நல்லவர்களை மூவகையாகப் பிரிக்கிறார். ஒருவகை நல்ல எண்ணம் இருந்தும் தங்களைக் காத்துக் கொள்வதற்காக அஞ்சி அடங்கி நடந்து கொள்பவர்கள், பிறர் துன்பம் கண்டு ஐயோ பாவம் என்ற அளவில் நிற்பவர்கள்,
இரண்டாவது வகை நல்ல எண்ணம் இருந்தும் உள்ளம் அஞ்சாமலும்,
அடங்காமலும் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அஞ்சுவது போலவும், அடங்குவதுபோலவும் நடிப்பவர்கள். மூன்றாவது வகை தங்களுக்குப் பாதிப்பு இல்லாமல் மிக எச்சரிக்கையோடு பிறருக்கு உதவ நினைப்பவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் எண்ணமே இல்லாமல் நல்ல எண்ணத்தைச் செயல்படுத்த விரும்புவர்கள். இதைத்தவிர பொதுவான மனித இயல்பும் பேசப்படுகிறது. (சேதுமணி மணியன் கட்டுரை, கயமை நாவலில் வாழ்க்கைத் தத்துவம், நூல்:
மு.வ.கருத்தரங்கக் கட்டுரைகள் பக்: 24)
இப்புதினங்களில் மு.வ.தமிழை, தமிழ்ப் பெயர்களை, தமிழ் மரபை, பண்பாட்டை வாழ வைத்துள்ளார். தமிழில் இனி மு.வ.வழியில் படைப்பாளர்கள் மேலும் தோன்ற வேண்டும். அ.ச.ஞானசம்பந்தன் குறிப்பிடும் கருத்து இங்கே நினைவுகூரத்தக்கது, “உரை நடையுள் ஒன்றாகியப் புதினம் என்பது தோன்ற ஒரு சீரியக் காரணம் உண்டு. உலகிடை வாழும் மனிதன் மனத்தைக் கவர்ந்த பலவற்றுள் முக்கியமானது எதுவெனில் அவனைப் போன்ற மற்றைய மனிதர்களின் வாழ்க்கையேதான். மக்களின் மனத்தில் தோன்றும் உணர்ச்சிகள்,
போராட்டங்கள் முதலியவையே இப்புதினங்கள் முகிழ்க்க நிலைக்களங்களாயின பிற மனிதர்களுடைய வாழ்க்கைப் போராட்டத்தில் ஒருவன் ஈடுபாடு கொள்ளும் இயல்பே சிறந்த இலக்கியங்கள் தோன்றக் காரணமாயின.
(அ.ச.ஞானசம்பந்தன்,
இலக்கியக்கலை,
பக்:
345)
முடிவுரை
ஆங்கில மோகம், ஆங்கிலவழிக்கல்வி, தமிழ்யுகத்தைக் கணினி யுகம் என்று பெருமை பாராட்டும் போக்கு. இவை எதிர்காலத்தில் தமிழுக்கு அறை கூவலாகும். ஆட்காட்டி விரலால் மணலில் தமிழ் நெடுங்கணக்கை எழுதிய தமிழ் கல்வியுகம் மாறிவருவது தமிழர் நினைவிலிருந்து தமிழை மறக்கடித்து விடுமோ என்ற அச்சம். இவை,
தமிழின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளன.
இந்நிலையில்
‘வெகுஜன’
ஊடகமாகவுள்ள கதை, புதினங்கள் தமிழ், தமிழர்மரபு,
பண்பாடு,
நாகரிகம்,
வாழ்க்கை நெறி இவற்றை மீட்டெடுக்கும் சிறந்தக் கருவியாக உள்ளன. படைப்பாளர் கல்கி, ஜெயகாந்தன், பிரபஞ்சன், புதுமைப்பித்தன்,
அகிலன்,
வண்ணதாசன் போன்ற சிறுகதை, புதின படைப்பாளர்கள் எதிர்காலத்தில் உருவாக வேண்டும். உருவானால்
‘தமிழ்இனி’
தழைக்கும் வெல்லும்!
துணைநூல்பட்டியல்
1. சுந்தரமூர்த்தி. இ., நடையியல் அறிமுகம். அன்பு வெளியீடு, முதற்பதிப்பு.
10, பார்த்தசாரதிசாமி தெரு, சென்னை-
& 600 005
2. சுப்பிரமணியன் & சிவசு , சிற்றேடு காலாண்டிதழ்,
திருநெல்வேலி
& -627 002.
3. கோரி..ஏ.ஏ.ஹெச். கே.,சிறுகதை தொகுதி -2,
இருவாட்சி,
இலக்கியத் துறைமுகம், 41, கல்யாணசந்திரன் தெரு,
பெரம்பூர்,
சென்னை-
& 600011
4. கண்ணன். ரா, விகடன் தடம், திங்களிதழ்,
அக்டோபர்
2017, 757, அண்ணா சாலை, சென்னை- & 600002
5. நல்லபெருமாள். ரா.சு, கல்லுக்குள் ஈரம், வானதி பதிப்பகம், 1968, சென்னை & -600017
6. திலீப்குமார். ப, காவ்யாதமிழ் காலாண்டிதழ், ஜனவரி- & மார்ச்
& 2013, பெங்களுரூ
7. வேங்கடராமன். சு (பதிப்பாசிரியர்),
மு.வ.கருத்தரங்கக் கட்டுரைகள், மதுரை பல்கலைக் கழகம், பதிப்புத்துறை, மதுரை- & 625 021
8. தமிழண்ணல் ஒப்பிலக்கிய அறிமுகம், மீனாட்சி புத்தக நிலையம், 60, மேலக்கோபுர தெரு,
மதுரை&625001
9. ஞானசம்பந்தன். சு.ச., இலக்கியக்கலை (1999), சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை- 600018
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக