திங்கள், 18 டிசம்பர், 2017

கணிப்பொறிப் பயன்பாட்டில் எதிர்காலத்தமிழ்


வீ.கோவிந்தராஜ்
தமிழ் முதுகலை மாணவர்
புங்கம்பாடி மேல் பாகம்
அரவக்குறிச்சி

முன்னுரை

                இறந்தகாலத்தில் இறவாத நிலை பெற்ற அன்னைத் தமிழ் மொழி நம் விழிகளின் முன்பாக நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது, முத்தமிழோடு முதலில் உருவான மொழி இன்று ஐந்தமிழாக இலக்கிய அரணாக இதயங்களை ஆண்டு கொண்டிருக்கிறது, முத்தமிழ் என்பது இயல், இசை, நாடகம் ஆகியவைகளாகும், வளர்ந்த நவீன ஐந்தமிழ் இன்று அறிவியல் தமிழ், அயலகத்தமிழ், ஊடகத்தமிழ், இணையத்தமிழ், பயன்பாட்டுத் தமிழ் ஆகிய ஐந்தமிழாக ஐந்திணைகளிலும் தடம் பதித்துள்ளன.

  எட்டுத் திக்கிலும் தமிழர்கள் கொட்டில் அமைத்து தமிழைத் தொட்டிலில் தாலாட்டுகின்றனர். பிறந்த குழந்தையின் மழலை மொழியிலிருந்து இறந்த மூதாதையரின் சடங்குகள் வரை உலகளாவிய உளவியல் சிந்தனைகள் உருண்டு கொண்டிருக்கின்றன, அவற்றை அழியாமல் ஆவணப்படுத்துவதே இன்றைய அவசியமாகும். அணையா விளக்காக அறிவொளி ஏற்றிய தமிழ் அவசரமாகப் பயணிக்கிறது. அந்நிய மொழிகளின் படையெடுப்பால் ஆங்கிலத்தை அகில மொழியாக அறிவித்தது அரசு. அது குறைந்த எழுத்துகளாக இருந்ததால் விரைந்து வாசித்து விரும்பும் இடமெங்கும் விளம்ப வைத்துவிட்டார்கள். அதனால் தமிழ் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டடது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் போற்றி வளர்த்த தமிழ்மொழி புகழின் உச்சியில் இருந்தாலும் அது எதிர்காலத்தில் உருவெடுக்கும் நிலையை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். கண்களில் கண்ணீர் வரும் அளவுக்கு மொழிப்போர் தியாகிகளைப் புண்படுத்தினார்கள். மொழியின் விடுதலையே நம் வாழ்வின் வழித் தடங்களாகும். இறையுணர்வு ஊட்டிய தமிழ் நிறைகுடமாகவே நெஞ்சில் நீடித்திருக்கிறது. எதிர்காலத்தில் தமிழ் கணிப்பொறி, இணையத்தளம், வலைத் தளங்கள் போன்றவற்றில் உலா வரப்போகிறது.

கணிப்பொறிகளில் தமிழ்

   எதிர்காலத்தமிழ் வலைத்தளங்களிலும், கணிப்பொறி பயன்பாட்டு இணைய தளங்களிலும் இருக்கப் போகின்றன. தட்டச்சு இயந்திரங்களில் எழுத்துகளைப் பொறித்து அதன் மூலம் அச்சு எடுத்தக் காலங்கள் போய் இன்று மடிக்கணினி, கணிப்பொறியியல் எழுத்துகளை அச்சடிக்கவே செயலிகள், மென்பொருள்கள், கோப்புகள் செயல்பட்டுக் கொண்டு வருகின்றன. மென்பொருள்களைக் கணிப்பொறி இயந்திரத்தைத் திறந்து அதில் பதிவேற்றம் செய்து கொண்டால் நாம் எழுத்து வாயிலாகப் பதிவு செய்த தாள்களை அச்சாகக் காண முடியும். அச்சாக்கம் செய்த பின்பு அந்த ஆவணங்களைக் குறுந்தகட்டில், நெகிழ்வட்டில் சேமித்துக் கொள்ள முடியும். அதனைத் தேவைப்படும் போது மறுபதிப்பு செய்ய முடியும். நாம் சேகரித்த செய்திகளை இணையத் தளத்தில் தொகுத்து வழங்குவதற்கும் செயலிகள் உள்ளன. அவற்றைத் திறந்து தமிழ் எழுத்துகளை, எழுத்துருக்களை அதில் பதிவேற்றம் செய்து பொருத்திவிட்டால் அதிலே தொடர்ந்து எழுத்துகளை விசைப்பலகையில் உள்ள ஒவ்வொரு எழுத்துகளையும் தட்டச்சுச் செய்து கணிப்பொறியில் ஏற்றலாம். பின்பு அதனைத் சேமித்துக் கொள்ளலாம்

கணிப்பொறியில் நம் பெயரில் ஆவணம், கோப்புத் தொடங்கி அதில் பதிவுகளைச் சேமித்துக் கொள்ளலாம். தூது இலக்கியங்கள், கடித இலக்கியங்கள் மேற்கொண்டிருந்த வேலைகளை இன்று  விஞ்ஞானத் தொழில் நுட்பமானக் கணிப்பொறி செய்து கொண்டு வருகிறது, கடிதங்களை முற்காலத்தில் கைகளில் எழுதி அஞ்சலகங்களில் அனுப்பிக் கொண்டிருந்தோம். இன்று மின்னஞ்சல் வாயிலாக உடனுக்குடன் தகவல்களை அனுப்புகிறோம். வேகமான வளர்ச்சியின் காரணமாகப் புதுப்புது இயந்திரங்களைக் கண்டுபிடித்து அவற்றைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். நாம் முன்பு ஆவணங்களை, புத்தகங்களை, எழுத்துக் கட்டுக்களை வீட்டுப் பேழையில் அடுக்கிக் கொண்டு அவற்றைப் பாதுகாத்தோம். இன்று அவற்றை மின்னுருவாக்கம் செய்து கணிப்பொறி வலைத்தளங்களில் ஏற்றி விட்டு தேவைப்படும் போது இணையத்தளங்களைத் திறந்து அவற்றைப் படித்துக் கொள்ளலாம். வேறொரு பக்கத்தில் பிரதிகளாகவும் சேமிக்க முடியும்

மற்றவர்களுக்குத் தெரியாமல் அச்சுப்பிரதிகளை மறைத்து வைக்கவும் முடியும். எழுதிய கட்டுரைகளை, படைப்புகளை ஒளி அச்சாக்கம் செய்து கணிப்பொறியில் பதிவேற்ற முடியும். பின்பு அதனை வன்பொருளாகக் கண்களில் பார்க்க முடியும். தாள்களை வைத்து அச்சிட்டு அதற்கு வண்ணம் தீட்டவும், நிழற்படங்களை வரைந்து அச்சேற்றவும் முடியும். எத்தனைக் காலமானாலும் அழியாமல் இருக்க கணிப்பொறியில் மின் இதழ், இணையத் தளம் உருவாக்கி அவற்றில் சேமித்து வைக்க முடியும். கணிப்பொறி நிரல்களைக் கொண்டு இணையவழிப் பாடங்களைத் தமிழ் மொழியில் நடத்த  முடியும். தரவுகளை இணைத்துத் தகவல்களாகச் சேமிக்க முடியும். இன்று கணிப்பொறியில் ஒலிக்கோப்புகளாக, ஒளி ஆவணங்களாகவும் பதிவாளர்கள் கணிப்பொறியில் தகவல்களை உள்ளிடுகின்றனர். காணொளிகளும் இலட்சக்கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன

இன்று நாம் தேடும் காணொளிகளின் இணைப்புகள், இதழ்கள் அனைத்தும் மின்பரிமாண வடிவில் கிடைக்கின்றன. சீளிஹிஜிஹிஙிணி&ல் அனைத்து வகையான தமிழ்க் காணொளிகள் கிடைக்கின்றன. இன்று நாம் தேடும் கட்டுரைகள் கீமிரிமிறிணிஞிமிகி என்ற செயலியில் கிடைத்துவிடுகின்றன. நாம் தேடும் தமிழ் நூல்களை ஆவணப்படுத்துதல், மின்னுருவாக்குதல், பதிவேற்றுதல், படியெடுத்தல், மின்பதிப்பு நூல் செய்தல் போன்றச் செயல்பாடுகளில் பலர் விரும்பிய பெயர்களில் தனக்கான வலைப்பக்கங்களை, வலைப்பூக்களை உருவாக்கி அதில் தான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில்களையும், தொழில் ரீதியான விளம்பரங்களையும், உளவியல் ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றன


தொழில்நுட்ப அகராதிகள் இன்று பெருகிவிட்டன. நாம் சாதாரணமாகத் தேடும் வார்த்தைகள் துறை ரீதியாக வேறு பொருட்களில் வழங்கப்பட்டு வருகின்றன. கோப்புகளைக் கொண்டு செல்ல இணையத் தள ஊழியர்களும் செயல்படுகிறார்கள். அவர்கள் குறிப்பிட்ட பணம் பெற்றுக்கொண்டு தகவல்களை உலகெங்கும் வழங்குகிறார்கள். நாம் எதிர்காலத்தில் ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள், அரிய கையெழுத்துச் சுவடிகள், அகராதிகள், நிகண்டுகள் ஆகியவற்றைக் கணிப்பொறியில் மின்மயமாக்கப்பட்ட ஆவணமாகத்தான் காண முடியும். சில பல்கலைக்கழகங்கள், தமிழ்ச் சங்கங்கள், தொல்பொருள் மையங்கள் ஆய்வாளர்களை உருவாக்கினால் புதையுண்டதை, மறைந்து போனதை, அறியப்படாத ஆவணங்களை வெளியுலகிற்குக் கொண்டு வர முடியும்.

  இன்னும் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் தல புராணங்கள், திருப்பணிகள், தொல்பொருள் ஆய்வுகள் இல்லாமல் இருக்கின்றன.                       கோவில்கள் சில மக்களின் கண் பார்வையில் படாமல் இருக்கின்றன. அவற்றைத் தமிழ்க் கல்வெட்டுகள், தொல்பொருள் துறையினர் ஆய்வாளர்களின் துணையோடு மீட்டெடுக்க வேண்டும். கணிப்பொறியிலும் தனியாகவே தமிழுக்கெனத் தட்டச்சுப் பலகைகள், விசைப் பலகைகள் இருந்தாலும் வலைப்பொறியும், மின்னஞ்சலும் தமிழில் இருந்தால் இன்னும் தமிழ், பயன்பாடுகளுக்கு வசதியாக இருக்கும். விசைப்பலகையினை நிறுவி, தேர்ந்தெடுத்து ஆவணங்களைத் தட்டச்சுச் செய்யலாம். தட்டச்சு இயந்திரம் கூட இன்று மென்பொருளாகக் கிடைக்கிறது. வலைகளில் தேடுமிடத்தில் தமிழ் என்று உள்ளுருவாக்கம் செய்து தேடினால் நாம் தேடும் செய்திகள் தமிழில் கிடைக்கும். இன்று நாட்டுடைமையாக்கம் செய்யப்பட்ட நூல்கள் தமிழில் அரசின் இணையத்தளங்களில் கிடைக்கின்றன. தமிழ் உருப்பட நூல்கள் என்று தேடினால் புத்தகங்கள் அகரவரிசைப்படி கிடைக்கின்றன.

  அவற்றைப் பதிவிறக்கம் செய்து தாளில் அச்சிட்டு வாசிக்கலாம். இன்று பிறமொழி நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்து வாசிக்க முடிகிறது. தமிழ் மொழி பெயர்ப்பு செயலிகளைப் பதிவிறக்கம் செய்து எந்த மொழி கட்டுரையோ அதனை முழுவதும் தேர்வு செய்து மொழி மாற்றியில் நாம் விரும்பும் மொழியைத் தரவாகக் கேட்டால் அந்த மொழியிலேயே நாம் வாசிக்கும் ஆவணத்தை மாற்றிக் கொடுத்து விடும். எதிர்காலங்களில் தமிழ்ச் சமூக வலைத்தளங்களில்  அதிகமாக உலா வரப் போகிறது. முகநூல், புலனம் போன்றவற்றில் அதிகம் கவிஞர்கள், வாசகர்கள் இன்று கவிதைகளை, கருத்துகளை, படைப்புகளை உள்ளிடுகிறார்கள். மதிப்புரைகளைச் சேர்த்து வாசிக்கிறார்கள். புலனங்களில் தமிழ்க் குழுக்களை உருவாக்கித் தமிழ் முழக்கம் செய்கின்றனர். இன்று பொறியியல் துறை மாணவர்கள் பல தமிழ் ஆய்வுகளைத் தொழில் நுட்ப அளவில் கொண்டு சேர்க்கிறார்கள். தமிழ் நிகழ்ச்சிகளைத் தொகுத்துக் கலையுலகத்திற்கு அளிக்கிறார்கள். நிழற்படங்கள், கோப்புகள், ஆவணப்படங்கள் ஆகியவை எடுக்கப்பட்டு வரலாறுகள் மீட்டெடுக்கப்படுகின்றன


முன்பு அச்சிட்ட பழைய இதழ்கள், பழைய புத்தகங்கள், இன்றையப் புத்தகங்கள், நவீன இதழ்கள் உடனுக்குடன் மின் நகலாக்கம் செய்து மின் நூலாகவே கிடைக்கின்றன. உலகெங்கும் நடக்கும் தமிழ் சார்ந்த நிகழ்வுகளை இணையத்தில் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம். வெளிநாடுகளின் தமிழ்ப் பங்களிப்புகள், பிரசுரங்கள், சஞ்சிகைகள், பதிப்பக நூல்கள் ஆகியவற்றை நாம் இணையத் தளங்களில் காண முடிகிறது. அயலக இலக்கியங்கள், புலம் பெயர்ந்தோர் இலக்கியங்கள் ஆகியவற்றை வாசிக்க முடியும், அவர்களோடு இணையத்தில் உரையாட முடியும். மின் அஞ்சல் அனுப்பவும் முடியும். இனி வருங்காலங்களில் தமிழ் மொழியைத் தொலைக்காட்சி, வானொலிகளில் காணலாம். தமிழில் வெளியாகும் திரைப்படங்களில் பேச்சுத் தமிழைக் கேட்கலாம். எழுத்துத் தமிழுக்கு இணையத் தளங்கள், எதிர்காலத்தில் தமிழில் வட்டார வழக்குகளைத் தேடி பொருள் கண்டறிந்தால் இந்தியா முழுவதும் தமிழைக் கொண்டு சேர்க்கலாம். வெளி நாட்டு வாழ் வேறு மொழி பயில்பவர்களுக்கும் தமிழைக் கற்பித்துத் தர வேண்டும்.

கணிப்பொறிக் கல்விகளில் எதிர்காலத் தமிழ்

                இனி வரும் காலங்களில் தமிழ், கலை அறிவியல் கல்லூரிகளில் பன்னாட்டு, தேசியக் கருத்தரங்க ஆய்வுக்கோவைகளாக உலா வரப் போகிறது. மேலும் கவியரங்கம், பட்டி மண்டபம், நூல் வெளியீட்டு விழா, பல்கலைக் கழகங்களில் நடைபெறும் இலக்கியச் சொற்பொழிவுகள், அயல்நாட்டுத் தமிழ் இருக்கைகள், கல்லூரிகளில் ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட படிப்புகள், இளங்கலை, முதுகலைப் படிப்புகள் ஆகியவற்றால் வளர்ச்சி அடையப் போகிறது. பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்கள் கல்வி பயிற்றுவிக்கத் தேவைப் படுவதால் மாணவர்கள் விரும்பித் தமிழைக் கற்பர். அரசு வேலைகளுக்குத் தமிழ் முன்னுரிமை வழங்கப்படுகிறது. போட்டித் தேர்வுகளுக்குப் பயில்வோர் தமிழ் வழியையே அதிகம் விரும்புகின்றனர். தமிழர்கள் உலகளவில் பரந்து வாழ்ந்து கொண்டு வருகின்றனர். அவர்கள் வழிபடும் இறைவன், செல்லும் கோவில்களில் தமிழ் பண்பாடுகளே நிறைந்து காணப்படுகின்றன. தமிழன் முன்பு கண்டறிந்து இலக்கியங்களில் பதிவு செய்ததையே இன்று அறிவியலாளர்கள் தேடி நிரூபிக்கின்றனர். இன்று ஒலிப்பதிவுகளை உரைவீச்சாக, இசையுடன் வழங்குவதற்கும் மென்பொருள்கள் வந்துள்ளன. எனவே எதிர்காலத்தில் தமிழ், பள்ளி, கல்லூரிகளில் இணையத்தள பயிற்சிப் பட்டறைகளாக உருவெடுக்க உள்ளது. இன்றும் தமிழ் நாட்டில் பழமையான மரபுகளைத் தேடிக் கொண்டுதான் வருகிறார்கள். கீழடி ஆய்வுகள், கொடுமணல் ஆய்வுகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவைகள் எதிர்காலத்தில் பாடமாக வரப்போகின்றன. வரலாறு பாடத்தைப் படிக்கும் மாணவர்கள் உலகளாவிய படைகளை நிறுவிய தமிழ் மன்னர்களைப் படித்துத்தான் ஆக வேண்டும். சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, கனடா போன்ற நாடுகளில் தமிழ் இணையத் தொழில் நுட்ப மாநாடுகள் நடக்கின்றன. மொரீசியஸில் தமிழ் இலக்கியச் சொற்பொழிவுகள் நடக்கின்றன. தமிழ் மொழியின் திருக்குறள் இன்று ஏறக்குறைய 110 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது, எனவே தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கிறது, தமிழுக்கு நூல்கொடைகளையும், இலக்கியப் படைப்புகளையும் வெளி நாட்டவர்களும் வழங்கியுள்ளார்கள். இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து தமிழ் இலக்கண, இலக்கியம் பயின்றிருக்கிறார்கள். இப்பொழுதும் பயின்று வருகிறார்கள். அவர்கள் தமிழ் நாட்டில் உள்ள கோவில்களின் வரலாறுகள், குடும்ப விழாக்கள், நாட்டுப்புற வழக்குகள் ஆகியவற்றைக் களப்பணி மேற்கொண்டு பதிவு செய்கிறார்கள்.
தொகுப்புரை
                எதிர்காலத்தமிழ் பொலிவு பெற வரவேற்போம். பாரதி சொன்னது போல் தேமதுரத் தமிழோசை தெருவெங்கும் பரவச் செய்வோம். உலகமெங்கும் உள்ள கலைச் செல்வங்களைச் சேகரிப்போம். தமிழிலே எழுதிடவும், பேசிடவும் வழிகளை மேற்கொள்வோம். கணிப்பொறித் தமிழில் இலக்கியப் படைப்புகளை ஏற்றி எளிமையாகத் தமிழ் கற்போம்.
























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக