திங்கள், 18 டிசம்பர், 2017

என்றும் வாழும் வளர்மொழி


.முத்துச்செல்வி,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
டி.ஆர்.பி.சி.சி.சி. இந்துக்கல்லூரி,
பட்டாபிராம், சென்னை

   “சோமன் வழிவந்த பாண்டிய நின் நாட்டுடைத்து நல்லதமிழ்”  என்று பாண்டிய மன்னனைப் புகழும் பொழுதும் தமிழைப் புகழ்கின்றனர் பண்டைய புலவர்கள், “இனிமையும், நீர்மையும் தமிழ் எனல் ஆகும்எனத் தமிழுக்கு விளக்கம் தருகின்றது பிங்கல நிகண்டு. உலகின் பழைமையான மொழிகளில் ஒன்றானத் தமிழுக்கு எழுத்துருவில் ஏறத்தாழ  இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகால வரலாறும்பேச்சுவடிவில் ஐயாயிரம் ஆண்டு வழக்கமுமுண்டு எனலாம். தொல்காப்பியம் மூன்று சங்கங்களிலும் அரங்கேற்றப்பட்ட இலக்கண நூல் என்பர். தொல்காப்பியமே தமிழில் உள்ள பண்டைய சிறந்த இலக்கண நூல்இத்தகைய சிறப்புமிக்க இலக்கண நூல் தோன்றுவதற்கு முன்பே தலைசிறந்த இலக்கிய நூல்கள் தோன்றியிருத்தலே தமிழின் வளமைக்குச் சான்றாகும்.

     “ஒரு மொழி வளம் பெறுவதும் வளமையுறுவதும் அம்மொழி பேசும் மக்களின் மன வளத்தை ஒட்டியதாகும். உலகின் பல மொழிகள் தோன்றி அழிந்தன. சில மொழிகளே இன்றளவும் நிலைபேறுடையனவாகத் திகழ்கின்றனஎன்கிறார் சி. சேதுராமன்இன்றளவும் நிலைபேற்றினை மட்டுமின்றி வளர்ச்சியும் பெற்றுள்ள மொழி தமிழ் எனலாம். அதற்குக் காரணம் என்னவெனில், “உலகின் பிற பகுதி மக்கள் நிலையான வாழ்வின்றி அமைதியற்று வாழ்ந்த காலத்தில் தமிழர்கள் செம்மாந்த வாழ்க்கையினை வாழ்ந்தனர். அவர்கள் நல்ல அரசியல் அமைப்பினையும் சமுதாய ஒருமைப்பாட்டினையும் வானிகச் சிறப்பினையும் இலக்கிய வளத்தினையும் பெற்று வாழ்ந்தனர்,” என்கிறார் சி.சேதுராமன். எனவே தமிழர்களின் மொழியாகிய தமிழும் நிலைபெற்று வளர்ந்தது என்பதே உண்மையாகும்.

                ஐயாயிரம் ஆண்டுகள் பழைமையான மொழியான  தமிழ் மொழி மெல்ல  இனி சாகுமா? வாழுமா? என்ற வினா  தமிழை விரும்புகின்ற அனைவரும் எதிர் நோக்குகின்ற ஒரு வினாவாகும். மாற்றம் ஒன்று தான் மாறாதது. அந்த மாற்றத்தை விரும்புகின்ற அனைத்தும் நிலைபெற்று வாழும் என்பதற்கு ஏற்ப தமிழ் என்றும் ஏற்றம் பெற்றே வாழும். “காலச்சூழல்களுக்கு ஏற்ப தமிழ் மொழி உயிர்ப்பையும் உணர்வினையும் பெற்று வளர்ந்து வருகின்றது. முத்தமிழ் என்றிருந்த நிலைமாறி அறிவியல் தமிழுடன் நான்காகி, அதனையும் மீறி இணையத்தமிழ் என ஐந்தமிழாக வளர்ந்து தன்னொளி பரப்பிவருவது குறிப்பிடத்தக்கதுஎன்ற சி. சேதுராமனின் கருத்துக்களை இங்கு கருத்தில் கொள்ளவேண்டும்.

     இவ்விருபத்தியோரம் நூற்றாண்டிலே ஊடகங்களே தமிழை வளர்க்கின்றன எனலாம்இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் போன்ற ஊடகங்கள் தமிழை இருபதாம் நூற்றாண்டில் வளர்த்தது போல, இன்று இணைய தளம், வலைப்பூக்கள், மின்னிதழ்கள், மின்னூல், முகநூல், சமூகவலைதளம் போன்ற ஊடகங்கள் மூலம் தமிழ் உலகளாவிய மொழியாகப் பலதுறைகளிலும் பரவி என்றுமுளத் தீந்தமிழாக வளர்ந்தே வருகின்றது.

    கணிப்பொறித் தொழில்நுட்பம் என்பது மனித வாழ்க்கைக்குப் புதிய எல்லைகளைக்காட்டியுள்ளது என்பது மிகையில்லை உண்மை. இணையத்தின் வரவு இன்று அன்றாட நடைமுறை வாழ்க்கையினை அப்படியே மாற்றியுள்ளது. விரல் நுனியில் இன்றுள்ள சீரிய கைபேசியிலேயே நாம் எந்த மின்னூலையும் பதிவிறக்கம் செய்து எளிமையாகப் படித்துப் பயன்பெறலாம்.

    கணினி கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் பணிகளுக்கு உதவும் ஒரு சாதனமாகத்தான் பயன்படுத்தப்பட்டதுஆனால் இணையத்தின் வருகை கணினியின் இலக்கணத்தையே மாற்றிவிட்டது.  1971 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட நுண்செயலியே கணினி வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தது எனலாம்

இன்றோ மூன்றாம் தலைமுறை, நான்காம் தலைமுறை, ஐந்தாம் தலைமுறை எனக் கணிப்பொறியியல் வளர்ந்து கொண்டே போகின்றதுஇவ்வறிவியல் வளர்ச்சி தமிழினையும் ஏற்றம் பெறவே செய்துள்ளது. ஏனெனில் முதலில் கணினியுள் சென்ற இந்திய மொழி என்ற பெருமை தமிழ் மொழிக்கே உண்டு. மேலும் உலக அளவில் ஆங்கிலத்திற்கு அடுத்து அதிக மென்பொருள் உடைய மொழி தமிழ் மொழியே ஆகும்.

    தமிழுக்கு இணையத்தை அறிமுகம் செய்தவர்கள் புலம் பெயர்ந்த தமிழர்களே ஆவார்சிங்கப்பூர் தமிழர் நா. கோவிந்தசாமியின் முயற்சியாலே தமிழ் இணைய தளம் உருவானது. சிங்கப்பூர், இலங்கை, கனடா, நார்வே, பிரான்சு, மலேசியா போன்ற தமிழர்கள் அதிகம் வாழ்கின்ற நாடுகளில் தங்களின் பயன்பாட்டிற்கென சில இணையதளங்களை அங்கு வாழும் தமிழர்கள் உருவாக்கினர். இன்றோ இணையம் இல்லாமல் தமிழ் ஆய்வுகளே இல்லை என்னும் காலச்சூழல் ஏற்பட்டுள்ளது.

    இணைய தளங்கள் மட்டுமின்றி இணைய இதழ்களும் பல்கிப்பெருகியுள்ளனஅவற்றில் ஆறாம் திணை, தமிழ் கூடல், தட்ஸ்தமிழ், கீற்று, வார்ப்பு, தமிழம் நெட், நிலாச்சாரல், அப்பால் தமிழ், தமிழோவியம், இன் தாம், ராயர்கிளப், முத்துக்கமலம், மூன்றாம் கோணம், கூடல்திணை, பதிவுகள், மரத்தடி, நெட் ஜால், போன்ற மின்னிதழ்கள் தமிழை வளர்ப்பதில் இன்று பெரும்பங்காற்றி வருகின்றன

  இவ்விதழ்கள் கவிதை, சிறுகதை, குழந்தை இலக்கியம், திறனாய்வு எனப் பலதுறைகளில் தமிழை வளர்த்து வருகின்றன. எளிதில் நினைத்த இடங்களில் நினைத்த நேரங்களில் மடிக்கணினி மூலமாகவோ அல்லது ஸ்மார்ட் போன் எனப்படுகின்ற கைபேசிகளிலேயே கூட இணையத்தினைப் பயன்படுத்தி இணைய இதழ்களைப் படிக்கலாம். மேலும் தேவையான செய்திகளை பின்னூட்டம் செய்தும் படிக்கலாம் என்பதே இணைய இதழ்களின்  இன்றைய வளர்ச்சிக்கு  காரணம் எனலாம்

  மேலும்அச்சு ஊடகங்களில் காண முடியாத அரசியல், சமூக கலாச்சார பிரச்சனைகள் பற்றிய விவாதங்கள், பற்றி நேரடியான கருத்து மோதல்கள் உடனடி எதிர்வினைகள் என்று இணையம் பன்மடங்கு வீரியமாகச் செயல்படுவதை உணர்ந்தவன் நான்என்ற எஸ். ராமகிருஷ்ணனின் கருத்தினை உண்மை என்று உணரலாம். தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் இலக்கியத்தின் மாற்றத்திற்கும்  இன்று இணைய இதழ்களே முக்கிய காரணியாக உள்ளன.

     முகநூல் 2004  ஆண்டில் தொடங்கப்பட்ட இணைய வழி சமுக வலை நிறுவனமாகும். அலெக்சா என்ற நிறுவனத்தின் கணக்கெடுப்பின்படி உலகம் முழுவதிலுமுள்ள இணைய தளங்களில் ஐந்தாவது மிகப் பிரபலமான பரவலான இணைய தளமாகும்முகநூலில் உலகத்திலுள்ள அனைத்து மொழிகளிலும் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளலாம். முகநூல்களில் பிரதிபலி போன்ற செயலிகள் தொடர்கதைகளைக்கூட தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றன

  இன்று இவற்றிலும் தமிழ்மொழி போற்றப்படுகின்றது. இவற்றில் வெளிவரும் கட்டுரைகளும் செய்திகளும் அதிகமான இளைஞர்களால் பார்வையிடப்பட்டு அதிக விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனவிவாதங்கள் அதிகம் இடம்பெறும் போதுதான இலக்கியமோ செய்திகளோ மக்களை அதிகம் சென்றடையும். அதனாலேயே சீத்தலை சாத்தனாரும்பட்டி மண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்என்றார் மணிமேகலையில். விவாதமே சமூகத்தில் மாற்றத்தினையும் தாக்கத்தினையும் ஏற்படுத்தும். இதுவே புதிய இலக்கியமோ சமூகமோ மலர காரணமாக அமையும். இவ்வகையில் முகநூலும் தமிழினை வளர்க்கவே செய்கின்றது.

                வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும், தமிழைக் கற்க விரும்புவர்களும்  தமிழைக் கற்பதற்காக உருவாக்கப்பட்டதே இணைய வழிப் பல்கலைக் கழகம்இணைய வழிப் பல்கலைக்கழகம்  அரிச்சுவடி முதல் ஆராய்ச்சி வரை வரையறுக்கப்பட்ட கல்வித்திட்டத்தினை வழங்குகின்றது. அதுமட்டுமின்றி மின்நூலகம், கணினித்தமிழ்ப்பணிகளும் இவ்விணைய பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்பட்டுத் தமிழ்மொழி வளர்க்கப்படுகிறது. தமிழ் நூல்கள் அடங்கிய இணைய நூலகமும் செயல் படுத்தப்பட்டுள்ளது.

           ”தொன்மை இயன்மை தூய்மை தாய்மை
           முன்மை  வியன்மை வளமை மறைமை
           எண்மை இளமை இனிமை தனிமை
           ஒண்மை குறைமை அம்மை செம்மை
           எனும் பதினாறும் இன்றமிழ் இயல்பெனப்
           பன்னுவர் மொழிவளர் பாவாணர் தாமே

என்று செம்மொழிக்குரிய பதினாறு பண்புகளைப் பட்டியலிடுகிறார் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர். இவற்றில் இளமை என்னும் பண்பே தமிழை இன்று செழுந்தமிழாக்கியுள்ளது.    

          ”வெளியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக்    
             விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெலாங்கண்டு
          தெளிவுறுத்தும் படம்களோடு சுவடியெலாம் செய்து
             செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்
என்றார் பாரதிதாசன். அவரின் எண்ணம் இன்று நிறைவேறத் தொடங்கியுள்ளது என்றே கூறலாம்

   “எந்த ஒரு மொழி பிறமொழிச் சொற்களின் உதவியின்றி மக்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய கருத்துக்களைப்  பரிமாறிக்கொள்ளத்  துணைபுரிகின்றதோ அம்மொழி சிறந்த மொழியாகும்.” என்கிறார் பு. இந்திராகாந்தி. இக்கருத்திற்கு ஏற்ப காலந்தோறும் உலகளாவிய மொழியாகப் பலதுறைகளிலும் பழைமைக்கும் பழைமையாய் புதுமைக்கும் புதுமையாய் தழைத்தோங்கி வளர்ந்து வரும் தமிழ்மொழி பாரதி  வாக்கிற்கு ஏற்ப வானம்  அளந்ததும் அனைத்தும் அளந்து வன்மொழியாகவே வாழும்


குறிப்புதவி நூல்கள்
1.            சி.சேதுராமன், தமிழ் இலக்கியவரலாறு, பாவை பப்ளிகேஷென்ஸ், சென்னை -14 பதிப்பு-2012

2.            பு. இந்திராகாந்தி, பொ.திராவிடமணி, தமிழ் இலக்கியவரலாறு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை- 98 பதிப்பு- 2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக