முனைவர் கி.பார்த்திபராஜா
உதவிப் பேராசிரியர்
தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை
தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி)
திருப்பத்தூர்
தமிழில் நாடகத்திற்கு நெடிய வரலாறு உண்டு. நாட்டியமும் நாடகமும் பொதுவாகக் கூத்து என்று அறியப்பட்டன. பிறகு கதை தழுவிய கூத்தே நாடகம் என்று வழங்கப்படலாயிற்று. ‘நாடக வழக்கு, செய்யுள் வழக்கு’, ‘நாடக வழக்கு உலகியல் வழக்கு’ என்ற இலக்கியப் பகுப்பில் நாடகம் இன்றியமையாத இடம் பெற்றது. தமிழ் வரலாற்றில் கூத்து எனப்படும் நாடகம் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வடிவ மாற்றங்களையும் உள்ளடக்க வளர்ச்சி நிலையையும் எய்திருக்கிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த தவத்திரு சங்கரதாச சுவாமிகளும் பம்மல் சம்பந்தனாரும் தமிழ் நாடகத்தின் பொதுப்போக்கைச் சீர்திருத்தி வளர்ச்சிக்கு வித்திட்ட நாயகர்கள் ஆவர். தமிழில் கிளைத்த நவீன நாடகம், ஊடகங்களில் பெருவெடிப்புக் காலத்தில் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடி வருகிறது. நவீன நாடகங்களின் எதிர்காலம் குறித்துச் சிந்திக்கிறது இக்கட்டுரை.
நவீன நாடகம்
இசை நாடகம் மற்றும் மேடை நாடகத்தின் எழுச்சியின் ஊடாக, இந்திய தேசிய விடுதலை இயக்கத்தில் தமிழ்நாடகம் இன்றியமையாத வினையூக்கியாகச் செயல்பட்டது. திராவிட இயக்கம் தனது கருத்தியல் கருவியாக நாடகத்தைப் பற்றிக் கொண்டது. சி.என்.அண்ணாதுரை,
மு.கருணாநிதி,
திருவாரூர் தங்கராசு, எம்.ஆர்.ராதா போன்றோர் நாடகத்தின் வலுவை உணர்ந்து திராவிட கருத்தியல் பரப்புரைக்குப் பயன்படுத்திக்கொண்டனர்.
சுதந்திர இந்தியாவின் முதல் தலைமையமைச்சர் பண்டித ஜவஹர்லால் நேருவின் அறிவுறுத்தலின் பேரில் தொடங்கப்பட்ட ‘தேசிய நாடகப் பள்ளி’யில் பயின்ற சே.ராமானுஜம், காந்திகிராமப் பல்கலைக்கழகத்தில் நடத்திய அறுபது நாள் பயிற்சிப்பட்டறையே தமிழ்நாட்டில் நவீன நாடகத்தின் தோற்றுவாயாக அமைந்தது. அப்பயிற்சிப்பட்டறையில் பங்குபெற்ற பலர், தொடர் நாடகச் செயல்பாடுகளில் ஈடுபடும் உந்துதல்களோடு தங்களின் செயல்பாடுகளை முன்னெடுத்தனர்.
சென்னையில் உருவாக்கம்பெற்ற கூத்துப்பட்டறை என்னும் நவீன நாடக அமைப்பும் தொடர்ச்சியாக நாடகச் செயல்பாடுகளை முன்னெடுத்துச் சென்றது.
நாடகாசிரியர்களும் அவர்தம் பனுவல்களும்
தமிழில் அபத்த பாணியிலான நாடகங்களைத் தொடர்ச்சியாக எழுதியவர் ந.முத்துசாமி.
நவீன இந்தியாவில் உருவான சிதறுண்ட மனநிலையையும் முகமழிந்த மனிதர்களின் மனோவெளிப்பாட்டையும் தமது நாடகங்களின் கருப்பொருளாகக் கொண்டார் அவர். நாற்காலிக்காரர்,
அப்பாவும் பிள்ளையும், காலங்காலமாக, நற்றுணையப்பன், படுகளம் முதலானவை அவருடைய நாடகங்கள்.
இந்திரா பார்த்தசாரதி தமிழில் பல்வேறு பரிசோதனை முயற்சிகளையும் செய்து நாடகப்பனுவல்களை வழங்கியவர்.
தனிமனிதர்களின் உள்மனக் குழப்பங்கள்,
உறவு நெகிழ்ச்சிகளும் பிறழ்ச்சிகளும் இந்திராபார்த்தசாரதியின் அக்கறைக்குரிய விடயங்களாகும். அவற்றின் வழியாக நாடக ஆக்கங்களைப் படைத்தவர், பிற்காலத்தில், நந்தன் கதை,
ஔரங்கசீப்,
கொங்கைத்தீ,
ராமானுஜர் ஆகிய வரலாற்று நிகழ்வுகளைத் தனது நாடகங்களில் கையாளத் தொடங்கினார்.
மு.ராமசாமி தனது நாடகப் பனுவல்களுக்கான உள்ளடக்கங்களை விரிந்த தளத்தில் தேர்ந்தெடுக்கிறார். பாரதிதாசன்,
பாரதியார்,
மகாபாரதம் ஆகிய நிலைகளில் மறுவாசிப்பாக அவரது பல பனுவல்கள் அமைகின்றன. வ.ஆறுமுகம் பரிசோதனை முயற்சியிலான நாடகப் பனுவல்களின் ஆக்கதாரி ஆவார். அவருடைய கருஞ்சுழி,
ஊசி முதலான நாடகங்கள் தனித்துவமானவை.
மரபார்ந்த தமிழிலக்கியங்களை மறுவாசிப்புச் செய்துள்ள மக்கள் கவிஞர் இன்குலாப்,
குறிப்பிடத்தக்க நாடகப் பனுவல்களைப் படைத்துள்ளார். ஔவை, மணிமேகலை, குறிஞ்சிப்பாட்டு,
ஒரு சொல் கேளீர், தடி முதலானவை அவருடைய படைப்புகள் ஆகும். ‘எப்போ வருவாரோ?’, ஆபுத்திரனின் கதை, மணிமேகலையின் கண்ணீர் முதலானவை எஸ்.எம்.ஏ.ராமின் நாடகப்படைப்புகள்.அ.மங்கை பெண்ணிய நோக்கிலான நாடகப் பனுவல்களைப் படைத்துள்ளார். பிரளயன் வீதிநாடகப் படைப்புகளையே மிகுதியும் படைத்துள்ளாரெனினும் உபகதை,
பாரிபடுகளம் முதலான முழுநீள நாடகப் படைப்புகளையும் எழுதியுள்ளார்.
மொழிபெயர்ப்பு நாடகங்களின் செல்வாக்கு
தமிழ் நவீன நாடக ஆற்றுகைகளில் பிறமொழி நாடகங்கள் செல்வாக்குப் பெற்றிருந்தன. இப்சன், ஷேக்ஸ்பியர்,
பிரெக்ட் முதலான உலக அளவிலான நாடகாசிரியர்களின் பல நாடகங்கள் தமிழில் பெயர்க்கப்பட்டு மேடையேறின. தாகூர், மகேசுவேதா தேவி, சதீஷ் அலேகர், கிரீஷ் கர்னாட், ஹெச்.எஸ்.சிவப்பிரகாஷ் உள்ளிட்ட இந்திய நாடக ஆளுமைகளின் நாடகங்களும் தமிழ் நாடக மேடைகளை அலங்கரித்துள்ளன.
மொழி பெயர்ப்பு நாடகங்களைத் தமிழ் நாடக இயக்குநர்கள் பல நிலைகளில் பயன்படுத்தி நாடகங்களை உருவாக்குகின்றனர்.
அதாவது மொழிபெயர்ப்பு நாடகப் பிரதிகளை அப்படியே பயன்படுத்தி நாடக ஆக்கம் செய்தலும் உண்டு; அவற்றைத் தழுவி மறுஆக்கம் செய்து நிகழ்த்துவதும் உண்டு. நாடகாசிரியர் ஞாநி, குறிப்பிட்ட நாடகங்களைத் தமிழுக்குத் தக மாற்றி எழுதி உருவாக்கும் தன்னுடைய பனுவல்களைத் ‘தமிழ் வடிவம்’
என்றே குறிப்பிடுகிறார்.
பனுவல்களின் போதாமை
1990
களில் தமிழ்நாட்டில் ஏராளமான நாடக விழாக்கள் நடைபெற்றன. மத்திய அரசின் சங்கீத நாடக அகாதெமி உதவியோடும் ஏனைய நிதி நல்கையோடும் பல்வேறு நாடக விழாக்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன.
எனவே நாடக உருவாக்கங்கள் பல நடைபெற்றன.
துணை விளைவுகளாக நாடக விழாக்கள் மட்டுமன்றி ஏனைய இடங்களிலும் நாடகங்கள் நிகழ்த்தப்படுவதும் நடந்தது. 1990 களோடு ஒப்பிடும்போது எண்ணிக்கையளவில் 2000 ஆம் ஆண்டுகளில் நாடகக் குழுக்களும் நாடக ஆற்றுகைகளும் அளிக்கைகளும் குறைந்துள்ளன என்பது வெளிப்படையான உண்மையாகும்.
நாடகப் பனுவல்களின் உருவாக்கம் பெருமளவில் பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பதே சமகால நாடக வரலாறு அறியத்தரும் செய்தி.
புதிய பனுவல் வடிவங்கள்
நவீன நாடகாசிரியர்களில் சிலர்,
தங்களது நாடக ஆக்கங்களுக்கு எழுதி வடிவமாக்கப்பட்ட நாடகப் பனுவல்களை மட்டுமே சார்ந்திருப்பதில்லை.
மாறாக,
நிகழ்த்து நோக்கங்களுக்காக உருவாக்கப்படாத கவிதை, கட்டுரை போன்றவற்றை எடுத்து நிகழ்த்துப் பனுவலாக ஆக்கிக் கொள்ளுகிறார்கள். எடுத்துக்காட்டாக பிரசன்னா ராமசாமி, பாரதியாரின் கவிதைகளிலிருந்து சமகால ஈழத்துக் கவிஞர் சன்மார்க்கா வரையிலான கவிஞர்களின் கவிதை அடிகளை வெட்டி ஒட்டி, இணைத்துப் புதிய பனுவலை உருவாக்கிக் கொள்ளுகிறார். இதன் மூலம் புதிய பனுவலை அவர் படைத்துக் கொள்கிறார். பிரசன்னா ராமசாமியின் பல நாடக அளிக்கைகள் இவ்வாறு கூட்டுக் கவிதைப் படைப்பின் வழியாக உருவாக்கப்பட்டவையே ஆகும்.
அவரது மீண்டும் மீண்டும், ஒளியுடல் முதலான நாடகங்களின் உருவாக்கம் மேற்குறித்தவாறு நிகழ்ந்தவையே ஆகும்.
சிறுகதைகளின் நாடக வடிவங்கள்
தமிழில் நாடகப் பனுவல்களின் போதாமை நாடக இயக்குநர்களைப் புதிய பனுவல்களைத் தேடும் முயற்சியில் ஈடுபடுத்தியது.
ஏராளமான சிறுகதைகள் நாடக வடிவம் பெறத் தொடங்கின. ஆர்.சூடாமணியின் ‘நான்காம் ஆசிரமம்’,
புதுமைப்பித்தனின்
‘செல்லம்மாள்’
ஆகிய சிறுகதைகளை மூன்றாம் அரங்கு நாடகக்குழுவின் வாயிலாகக் கே.எஸ்.கருணாபிரசாத் அரங்கேற்றினார். பாமாவின் சிறுகதையினை விநோதினி தனிநபர் நிகழ்வாக உருவாக்கினார்.
ஜெயகாந்தனின்
‘லவ் பண்ணுங்கோ சார்’ என்னும் சிறுகதை, பாலகிருஷ்ணனால் நெறியாளுகை செய்யப்பட்டு, பாஸ்கரனால் நடிக்கப்பெற்றது.
பிரபஞ்சனின்
‘மரி என்றொரு ஆட்டுக்குட்டி’,
ச.பாலமுருகனின்
‘அவளை நீங்களும் அறிவீர்கள்’
ஆகிய சிறுகதைகள் நாடகப் பனுவல்களாக மாற்றம் பெற்று கி.பார்த்திபராஜாவின் அரங்காற்றுகையில் நிகழ்த்தப்பட்டன.
சுந்தரராமசாமியின் இரண்டு சிறுகதைகள் குறுநாடகங்களாக அரங்கேற்றம் பெற்றன.
இவ்வாறு பல்வேறு சிறுகதைகள் தொடர்ச்சியாக நாடக வடிவம் பெறுதலைக் காணமுடிகிறது. புதிய நாடகப் பனுவல்கள் உருவாக்கப்படாமையின் வெற்றிடத்தை இம்முயற்சியே ஓரளவு இட்டு நிரப்புகிறது எனலாம்.
பனுவல் வறட்சியும் புதிய முயற்சியும்
நாடக இயக்கங்கள் வீழ்ச்சியுற்றுச் சென்று தேய்ந்து இறும் இழிநிலை தமிழ்ச்சமூகத்தில் அரங்கேறத் தொடங்கிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுமளவுக்கு நாடகத்துறைப் பொதுவாகப் புறந்தள்ளப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.
ஆனாலும் தனி நபர்களும் தனித்த சில நாடக இயக்கங்களும் அமைப்புகளும் தங்களது பலத்தைத் திரட்டிக் கொண்டு தொடர்ந்து நாடக உருவாக்கங்களையும் அளிக்கைகளையும் விழாக்களையும் நடத்தி வருவது நம்பிக்கையளிக்கிறது. நாடக அரங்கிற்குப் பார்வையாளர்களை இழுத்து வருதலில் உள்ள சிக்கல்கள்,
நாடகவியலாளர்களை மக்களை நோக்கித் தங்களது படைப்புகளைக் கொண்டு செல்லப் பணித்திருக்கின்றன.
அரசின் நிதியுதவிகளால் நாடக விழாக்களை அரங்கேற்றும் இந்தியாவின் பிற மாநில நாடகச் செயல்பாடுகளிலிருந்து முற்றிலும் விடுபட்டு,
மக்களிடமிருந்து திரட்டப்படும் நிதியைக் கொண்டே நாடக விழாக்களை முன்னெடுக்கும் விழாக்கள் தமிழகத்தில் நிகழத் தொடங்கியிருக்கின்றன.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் மாற்று நாடக இயக்கம் ஆண்டுதோறும் நாடக விழாக்களைப் பொதுமக்களின் பங்களிப்போடு சிறப்பாக நடத்திவருகிறது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் தஞ்சையில் நடத்திய நாடக விழாவும் இவ்வகையிலானதேயாகும்.
தேசிய நாடகப்பள்ளி பல்வேறு மாநிலங்களில் நடிப்புப் பயிற்சிப்பட்டறையை நடத்துவதைப் போலவே நாடகம் எழுதுவதற்கான பயிற்சிப் பட்டறைகளையும் நடத்துகின்றது.
ஆனால் இவ்வகையிலான பட்டறைகள் தமிழகத்தில் ஒருங்கிணைக்கப்படுவது மிகவும் அரிதாகவே இருக்கிறது. புதிய நாடகங்கள் எழுதப்படுவதற்கான பயிற்சிப்பட்டறைகள் தமிழ் நாடகப் பனுவல் வறட்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
தமிழ் நவீன நாடகத்தின் எதிர்காலம்
தமிழ் நாடகத் துறைக்குப் புனைகதைப் படைப்பாளிகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது ஆகும். எழுத்து இதழின் மூலம் தமிழ்ப் புதுக்கவிதைக்குத் தளம் அமைத்துத் தந்த சி.சு.செல்லப்பா, தனது புனைகதைப் படைப்புகள் தவிர, ‘முறைப்பெண்’
என்னும் நாடகத்தைப் படைத்தளித்தார்.
புனைகதைப் படைப்பில் மிகப்பெரும் பங்களிப்பை நல்கிய தி.ஜானகிராமன் ‘நாலு வேலி நிலம்’ என்னும் நாடகத்தை எழுதினார். நவீன எழுத்தாளராக அறியப்பட்ட ந.முத்துசாமி நாடக ஆக்கங்களைச் செய்ததோடு மட்டுமல்லாமல்,
கூத்துப்பட்டறை என்னும் நாடக இயக்கத்தை நிறுவி நாடகச் செயல்பாடுகளை முன்னெடுத்துச் சென்றார்.
புனைகதையில் தனது இலக்கியப் பயணத்தைத் தொடங்கிய இந்திரா பார்த்தசாரதி,
நாடகப் படைப்புகள் மூலம் இந்திய அளவில் புகழ்பெற்றார். கவிஞராகவும் சிறுகதையாளராகவும் அறியப்பட்ட இன்குலாப் தனது வாழ்க்கையின் பிற்காலத்தில் நாடகத்திற்குச் செய்த பங்களிப்பு அளப்பரியது. இவ்வாறு நாடகப் படைப்பு அல்லாத பிற தளங்களில் படைத்துக் கொண்டிருந்த படைப்பாளிகள், நாடகங்களை எழுதி வெளியிடுவதற்கான உத்வேகம் நாடகத் தளத்தில் உருவாக்கப்பட்டது.
சிறுகதை,
புதினம்,
கட்டுரை ஆக்கங்களைப் படைக்கும் படைப்பாளிகளை நாடகத்துறையை நோக்கி ஈர்ப்பதும் அவர்களது படைப்புத் தளத்தை விரிவாக்கும் முயற்சியில் நாடகத் தளத்தை இணைப்பதும் இன்றியமையாத செயல்பாடு ஆகும். மேற்குறித்த படைப்பாளிகளை நாடகத்துறையோடு ஊடாட வைப்பதும் அவர்களது படைப்புகளை ஆக்கங்கள் செய்து நிகழ்த்துவதும் பிற எழுத்தாளர்களையும் நாடகப் படைப்புகளைப் படைக்க உத்வேகத்தை அளிக்கக்கூடும்.
நாடகச் செயல்பாடுகளை வேகப்படுத்தல்
திரைப்படம்,
தொலைக்காட்சி ஆகிய வெகுசன ஊடகங்களால் சுவீகரிக்கப்பட்டிருக்கும் தமிழ்ச் சமூகத்தின் பொதுப்போக்கைத் திசை திருப்பும் முயற்சி மிகவும் உறுதியுடனும் துடிப்புடனும் தொடங்கப்படுதல் அவசியமாகும். கர்நாடகம், கேரளம் போன்ற தென்னக மாநிலங்கள் தங்களது மரபார்ந்த அடையாளங்களில் இன்றியமையாதவை என்று நாடக அரங்கைக் கொண்டுள்ளன. எனவே மாநில அரசாங்கத்தின் ஊட்டம் நாடகத்துறைக்கு வழக்கப்படுகிறது.
அவ்வாறான ஊட்டம் தமிழக அரசின் சார்பில் நாடகக்கலைக்கு அளிக்கப்படல் வேண்டும். குறைந்தபட்சம் தமிழகப் பல்கலைக்கழகங்களில் நாடகத்துறைகள் தொடங்கப்படல் வேண்டும். நாடகம் படித்தவர்கள் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படல் வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் விளையாட்டு ஆசிரியர்கள் கட்டாயமாக இருப்பதைப் போல, இசை,
நாடகம் ஆகியவற்றைக் கற்ற கலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். நாடகத்தைக் கல்விசார் செயல்பாடுகளோடு இணைப்பதன் மூலம் அத்துறையைக் கணிசமாக மீட்டெடுக்க இயலும்.
கலைஞர்களுக்கு ஊட்டமளித்தல்
நாட்டுப்புற,
நாடகக்கலைஞர்களுக்கான சமூக அங்கீகாரத்தைத் தமிழக அரசு புறந்தள்ளாமல் பெற்றுத்தர வேண்டும். நாடக உருவாக்கங்களுக்கான நிதிநல்கை, நாடக அளிக்கைகள்,
விழாக்கள்,
நாடகக் குழுக்களுக்கான உதவிகள், போட்டிகள்,
பரிசுகள்,
விருதுகள் என்று கலைஞர்கள் ஊட்டமளிக்கப்பட்டு மீட்கப்படல் வேண்டும். சவலைப்பிள்ளையாய்ப் போய்விட்ட நாடகத்துறையை மீட்டும் புத்துணர்வு பெறச்செய்ய,
இவ்வாறான சிறப்பு ஊட்டம் வேண்டும் என்பதைப் பொதுநிலைத் தமிழ்ச் சமூகமும் அரசும் உணர்தல் வேண்டும்.
முடிவாக
நாடகம் உள்ளிட்ட நிகழ்த்துகலைகள் மட்டுமே பார்வையாளர்களோடு நேரடியாக உறவாடும் உயிர்ப்புள்ள கலையாக உள்ளன. எனவேதான் அவற்றின் வடிவங்கள் மாறினாலும் மனிதகுல வரலாற்றின் வளர்ச்சிப் போக்கில் அவையும் சேர்ந்து வளர்ந்து வருகின்றன.
வடிவ அடிப்படையிலும் உள்ளடக்க அடிப்படையிலும் சோதனை செய்யப்பட்ட நவீன நாடகங்களின் வருகை, தமிழ்ச்சமூகத்தின் நவீன வாழ்க்கையைப் பிரதிபலிப்பனவாக அமைந்தன.
எனவே புதிய நாடகப் பனுவல்கள் தோற்றம் பெற்றன. 1990 களுக்குப் பிந்தைய காலத்தில், வெகுசன ஊடகங்களின் பெருவெடிப்பும் தமிழ்ச் சமூகத்தின் அரசியல், பொருளாதார,
பண்பாட்டு மாற்றங்களும் நாடகங்களை மக்களிடமிருந்து அந்நியப்படுத்தியிருக்கின்றன.
ஆனாலும் உயிர்ப்புள்ள செயல்பாட்டைத் தமிழ் நவீன நாடகத்துறைத் தொடர்ச்சியாகச் செய்தே வருகிறது. மற்ற மாநிலங்களைப் போலன்றி, பன்முகப் பரிமாணம் பெற்றதாகத் தமிழக நவீன நாடகத்துறை இயங்கி வருகிறது என்பது சிறப்பான அம்சமாகும்.
நாடக இயக்கத்தின் தேவைக்கும் செயல்பாட்டுக்கும் தக நாடகப் பனுவல்கள் தமிழில் உருவாகவில்லை என்பது அக்கறைக்குரிய ஒன்று. தமிழ்ப்பனுவல் உருவாக்கமும் நாடக ஆக்கங்களும் பொதுநிலைச் சமூகத்தில் நாடகத்தைத் தவிர்க்கமுடியாத ஒரு அங்கமாக்குதலும் அக்கம் பக்கமாக நடைபெற வேண்டிய பணிகள் ஆகும். தமிழ் நாடகத்துறைக்கான அரசின் பங்களிப்பை வற்புறுத்தலும் கோரிப் பெறுதலும் சமூகச் செயற்பாட்டாளர்களின் கடமையாகிறது.
தமிழ் நவீன நாடகத்தின் எதிர்காலம் என்பது மேற்குறித்த கட்டுமானங்களிலேயே சிறப்புற இயலும். அவ்வாறான கட்டுமானங்கள் கற்பிதங்களாகவே நின்றுவிடுமாயின் தமிழ் நவீன நாடகத்தின் சரிவு வரலாற்று இயங்கு விதிகளின் படி தவிர்க்க இயலாததாகவே இருக்கும்.
மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கட்டுரை ஆசிரியர்க்கு நன்றி
பதிலளிநீக்கு