திங்கள், 18 டிசம்பர், 2017

அஞ்ஞாடிப் புதினப் பெண்களின் சமூக நிலை


பா.மாரியம்மாள்
முனைவர் பட்ட ஆய்வாளர்
.தி.தா. இந்துக்கல்லூரி
பேட்டை
திருநெல்வேலி -& 10

முன்னுரை

                இந்தியச் சமூகத்தின் ஆரம்பக் காலங்களில் இந்தியப் பெண்களின் செயல்களைச் சரியான முறையில் விளக்கத் தகுந்த ஆதாரங்கள் இல்லை. எனவே 19ஆம் நூற்றாண்டிலிருந்து ஆங்கில அரசாலும் கிறித்துவ மதத்தினராலும் சமூகச் சீர்திருத்தவாதிகளாலும் தொகுக்கப்பட்ட செய்திகள் அக்காலக்கட்டத்தில் பெண்களின் சமூகநிலையைத் தெளிவாக எடுத்துரைப்பதுபோல அஞ்ஞாடிப் புதினம் அக்காலப் பெண்களின் சமூகநிலையை எடுத்துரைத்துள்ளதை விளக்கும் வகையில் கட்டுரை அமைய உள்ளது.

பெண்களின் வளமை

                இயற்கையில் மனிதப்படைப்பில் ஒரு பெண்தான் தனது உடலுக்குள் கருவைச் சுமந்து குழந்தையை ஈன்று பாலூட்ட இயலும் என்பதால் பெண்களே குழந்தை உற்பத்தியிலும் முக்கியப்பங்கு வகிக்கின்றனர் என்பது மக்களது நம்பிக்கையாகும். மேலும் மனித சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களே உணவு உற்பத்தியிலும் விவசாயத்திலும் முக்கியப் பங்கு கொண்டனர்என்ற கருத்திற்கு இணங்க அஞ்ஞாடிப் புதினக் கதைமாந்தர் வேலம்மாள் சிறந்த தாயாகப் பொருளாதார உற்பத்தியாளராகச் சித்திரிக்கப்படுகிறாள்.

                வேலம்மாள் கலிங்கலூரில் பஞ்சத்தில் இறந்த மொங்கான் குடும்பத்தில் திருமணம்செய்த பூச்சிவயிற்றுத் தலைமுறைகளில் ஆண்குழந்தையே பிறக்காத நிலையில் மகள் வயிற்றுப் பேத்திகளில் ஒருத்தியாகப் பிறந்தவள். ஊருக்குள் கர்ப்பிணிப் பெண்கள் பேறுகாலத்துக்காக அவதிப்படுவதைப் பார்த்த வேலம்மாள், உச்சாயிப்பாட்டியிடம் பேறுகாலச் செயல்களைக் கேட்டறிந்து தைரியமாகத் தொழிலில் இறங்கினாள். வைராக்கியம் கைகொடுத்தது. விரைவிலேயே ஊர்ச்சனங்கள் வேலம்மாள் மீது நம்பிக்கை வைத்தனர். எப்பேர்ப்பட்ட சிக்கலான பேறுகாலத்தையும் வழிக்குக் கொண்டுவந்து குழந்தையை வலியில்லாமல் எடுத்துவிடும் லாவகத்தைப் பார்த்து வெளியூர்களிலிருந்தும் மக்கள் வேலம்மாவைத் தேடிவந்தார்கள். சுத்துப்பட்டி ஊர்களுக்கு கைராசியான மருத்துவச்சியாகிவிட்டாள்இவ்வாறு ஏழையாகப் பிறந்து மக்களுக்காக வாழ்ந்த வேலம்மாள் சமூகத்தில் தன்னைப்போல் பிறரையும் நேசித்திடக் கற்றுக் கொடுக்கிறாள்.

கல்வி

                ஆன்மீகம், தியாகம், புலனடக்கம் என்பன பெண்களின் லட்சியமாக விளங்கவேண்டும். சேவை பெண்களின் வாழ்வியல் விரதமாக இருக்கவேண்டும். மேற்கூறிய முறையில் பெண்கள் வாழ்ந்தால்சீதை, சாவித்திரி கார்க்கியைப்போன்ற பெண்கள் மறுபடியும் தோன்றிட முடியும் என்பதற்கேற்றாற் போல் அஞ்ஞாடிப்புதினச் சித்திரிப்புவாதிகளான வெள்ளைக்கார ஆராதனைப் பெண்கள் கடவுள் ஆராதனை மூலம்  பெண்களைச் சமூகத்தில் மேம்படுத்தியுள்ளனர்.

                சாட்சியாபுர ஊருக்கு வந்தவெள்ளைக்கார மிசியம்மாக்கள்ஊழியம் செய்தார்கள். பெண்களில் பலர் படிக்காதவர்கள், சிலர் கொஞ்சம் படித்தவர்கள் என்பதால் அனைவருக்கும் புரியும்படியான எளியவசனங்களைச் சொல்லித் தந்தனர்கிட்டங்கிக்குள்ள கெடக்கிற மூடமாதிரிவீட்டிற்குள் இருந்த கலிங்கலூர்ப் பெண்கள் மிசியம்மாக்கள் பேசும் நற்செய்திகளைக் கேட்டு நற்செய்தி மூலம் நடந்திட முடிவு செய்தனர். திருமணமானப் பெண்கள் வீட்டிற்குத் தெரியாமல் அந்தரங்க ஆராதனை செய்தனர். கசங்கிய பூக்களாக வாடிக்கிடக்கும் விதவைப்பெண்களை மிசியம்மாக்கள் ஆதரித்து அரவணைத்து வேதப்பாடம் கற்பித்து, தங்களைப்போல் உருவாக்கினர். ஆராதனைக் கூட்டத்திற்குப் போகக்கூடாது என்று கூறிய கணவர்களிடம் புரியவைக்கும்படியான வாதங்களைச் செய்தனர். “அண்ணைக்கு வெள்ளக்காரங்க ஒத்தாசனையில்லன்னா நாடாரு பொம்பளைக தோளுல மாராப்பு ஏறியிருக்குமா. ஆடுமாடு மாதிரி தொறந்து போட்டுக்கிட்டுத் திரிய வேண்டியதுதான். அத மறந்துறாதங்கஎன்றனர் பெண்கள். மிசியம்மாக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் எடுத்திட ஆண்கள் தடைசெய்ததைக் கண்டித்த பெண்கள் வீதிக்கே வந்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு நிலம்பெற்று வேதக்கிணறு வெட்டினார்கள். சகலரும் கிணற்றில் தண்ணீரெடுக்க அனுமதித்தார்கள். பிறப்பில் வேற்றுமை என்பது இல்லை அனைவரும் சமமே என்று கூறி சமூகச் -சூழலோடு இணைந்து வாழ்ந்திடக் கற்பித்தனர்.

தாராளப் பெண்ணியம்

                “பெண்களுக்கு எல்லா நிலைகளிலும் சமத்துவம் கொடுக்கப்படவேண்டும்என்பதைச் சட்டத்தின்வழி கொண்டுவருவதே தாராளவாதிகளின் மையச்செயலாகும்பெண்களின் பிரச்சினைகளை மனிதாபிமானக் கண்ணோட்டதோடு ஆராய்ந்து வழிகான தாராளவாதிகள் பாடுபட்டனர். ஏழ்மைநிலையில் உள்ள பெண்கள் மற்றும் வந்தேறிய (அகதி) பெண்கள் ஆகியோரின் நிலையை உயர்த்தப் பல உத்திகளைக் கையாண்டனர் என்ற செயல் அஞ்ஞாடிப் புதினக் கதைமாந்தர் தெய்வானை மூலம் விளக்கப்படுகிறது.

                பெரிய நாடாரிடம் வளர்ந்து குடும்பமானத் தெய்வானை, குப்பனம்பட்டி ஊரில் வாழ்ந்த தங்கையன் இருவரும் திருமணமாகி கலிங்கலூருணியில் கால்பதித்துக் குடும்பத்தோடு சிவகாசி போனார்கள். சிவகாசிக் கலவரத்தில் தங்கையன் இறந்து போனான். கணவனைச் சாகக்கொடுத்து இரவுபகலாக ஊர்ஊராக நடந்து பரிதவித்த தெய்வானை கையில் ஒரு மகனையும், தோளில் ஒரு மகளையும் தூக்கிக்கொண்டு சொந்தபந்தமென்று யாரையும் தேடாமல் அஞ்ஞாடிப்புதினத் தலைமைக் கதைமாந்தரான ஆண்டியின் ஊரான கலிங்கலை நோக்கி வருகிறாள். ஆண்டி சோளத்தட்டை கம்மந்தட்டைகொண்டு அழகான கூரைவேந்து தெய்வானையைக் குடியமர்த்தினான். தெய்வானை தெம்பானாள் காட்டுவேலை செய்ததில் கிடைத்த கூலித்தவசத்தால் சோற்றுக்கவலையைப் போக்கினாள்மீதியை அடுக்குப்பானையில் சேர்த்து வைத்தாள். சுயமுயற்சியில் சொந்தத்தில் வெள்ளாமை செய்ய ஆண்டியிடம் காக்குறுக்க நிலம்கேட்டு வாங்கிக்கொண்டாள். கிணற்றில் உள்ள தூர்வையை எடுத்துச் சின்னதா தெலாப்போட்டுத் தண்ணீர் பாய்ச்சினாள். அகலக்கால் வைக்காத தெய்வானை கால்குறுக்கம் நிலத்தைமட்டும் பக்குவப்படுத்தினாள். மக்கிப்போன ஆட்டுச்சாணியும் கோழிக்காரமும் போட்டநிலத்தில் கீரையும் காய்கறியும் பாவினாள். சிறுகீரை, தண்டாங்கீரை, கத்தரி, வெண்டை என எக்குப்போட்டு வளர்ந்தன.

                கட்டாந்தரிசான நிலத்தினைக் கண்ணுக்குக் குளிர்ந்த பசுமையாக மாற்றினாள். கீரையும் காய்கறியும் வளரவளர மனசில் நம்பிக்கையும் வளர்ந்தன. இரண்டு நார்ப்பெட்டி பின்னிவைத்துக் கொண்டு கலிங்கலூர் தெருக்களில் தெய்வானையின் குரல் சிறுகீரை, தண்டாங்கீரை, வெண்டக்கா, கத்தரிக்கா என்று ராகமெடுத்தது. தெய்வானையின் மீதுள்ள அன்பால் பெண்கள் முறத்தில் தானியம் கொண்டுவந்து கொடுத்துப் பண்டம் வாங்கினார்கள். சிறிது நாளில் கிணற்றோரம் முருங்கைமரம் வளர்ந்ததுவாய்க்கால் வரப்புகளில் அகத்தியும் புளிச்சியும் முளைத்தன. வெவ்வேறு காய்கறிச்செடிகள் தலைகாட்டின. தெய்வானையின் கூவல் மூச்சுமுட்ட நீண்டுகொண்டே போனது. “சீறுகீர, அரக்கீர, மொளக்கீர, தண்டாங்கீர, அகத்திக்கீர, முருங்கக்கீர, புளிச்சிக்கீர, கத்தரிக்கா, வெண்டக்கா, பீக்கங்கா, சொரக்கா, முருங்கக்கா, பூசணிக்க, சீனியவரக்கா”............ என்று விற்பனை செய்தபின் கூலிவேலைக்குப் போய்விட்டுத் திரும்பும்போது அரண்மனைக் குதிரைக்குப் புல்பிடுங்கிவந்து விற்றுப் பணமாக்கினாள். கணவர் இறந்தபின் மரணத்தைத் தேடும் பெண்கள் மத்தியில் தன்னால் முடியும் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து சமூகத்தில் முன்னேறிட வேண்டும் என்பதற்காகப் படைக்கப்பட்டவள் தெய்வானை.

பெண்ணின் தியாகம்

                பொறுமைப் பொருளாகிய பெண்ணைக் காந்தி என்கிறார் திரு.வி.கல்யாணசுந்தரனார்அறிஞர் ஆஸ்கார் ஒயில்ட் துன்பப்பொறையில் விளைவதுதான் இன்பம் என்ற உணர்வு பெண்மக்களிடம் இயல்பாய் அமைந்துள்ளது என்கிறார். பெண் எப்பொழுதும் தனக்கென என்று எதையும் உருவாக்குவதில்லை, பிள்ளைகளை வஞ்சிக்கும் தாய் உலகில் இல்லை என்பர். “பிள்ளைகட்காகத் தாய் செய்யும் தியாகத்தை இத்தகையதென்று எழுத்தால் எழுதுதல் முடியாதுஎனலாம். தனக்கென வாழாது பின்னுலகாக்கும் உயிர்கட்கென வாழ்தல், ஏழைகளுக்கு உதவுதல் போன்ற அருங்குணங்கள் பெண்ணிடத்துப் பொலிதல் வெள்ளிடைமலை என்பதற்குச் சான்றாக வாழந்தவள் அஞ்ஞாடிப் புதின கதை மாந்தர் பொம்மக்கா.

                கலிங்கலூரில் வாழ்ந்த வண்ணாக்குடியைச் சார்ந்த பொம்மக்காளுக்கு மூக்குமுட்ட ஆசை மகன் மாரிமுத்தை எப்படியாவது நாலெழுத்துப் படிக்க வைத்துவிடணும், நல்ல வேலைக்குப் போய்க் கைநிறையச் சம்பாரிக்கணும், மேல்சாதிக்காரர்களைப் போல் துணிமணியுடுத்தித் தோரணையாக நடப்பதைக் கண்குளிரப் பார்க்கணும் என்று கனவுகண்டாள். மாரிமுத்துவும் பள்ளிப்படிப்பு முடித்துக் கல்லூரிக்குச் சென்று பட்டமும் வாங்கிப் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் வேலை சென்னையில் கிடைத்துவிட்டது.

                கல்லூரியில் உடன்படித்த ராசலட்சுமி என்ற பெண்ணைத் திருமணம்செய்து குழந்தைக்குத் தந்தையானப் பின்னரும் அம்மாவிடம் தெரியப்படுத்தாமல் வாழ்ந்தான். மாரிமுத்துவின் நண்பன் ஆண்டியப்பன் மூலம் மகன் திருமணத்தைத் தெரிந்து கொண்ட பொம்மாக்கா பேரனைப் பார்க்கச் சென்னைக்கு வந்தாள். வேதனையிலும் சந்தோஷத்திலும் அழுத பொம்மக்காவைப் பார்த்ததும் ராசலட்சுமி அருவெருப்பில் மாரிமுத்துவைப் பார்த்தாள். மாரிமுத்துவும் வாம்மா என்று கேட்கக்கூட வாயில்லாத நிலையில் நின்றுகொண்டிருந்தான். அந்தநேரம் பார்த்துப் பக்கத்து வீட்டுப்பெண் இந்தம்மா யாரென்று ராசலட்சுமியிடம் கேட்டாள். ராசலட்சுமி தயங்காமல் கூறினாள். எங்க தோட்டத்துல வேலைபாக்கிறவங்க என்றாள். வந்த அழுகையைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்ட பொம்மக்கா சொந்த ஊருக்குத் திரும்பி வந்ததும் மருமகள் செய்த அவமானத்தால் அரளிவிதையை அரைத்துக் குடித்துவிட்டு இறந்துவிட்டாள். வசதியும், வாய்ப்பும், படிப்பும், உத்தியோகமும் தந்த காதல் மகிழ்ச்சியைத் தந்திட அம்மாவின் உயிர் தேவைப்படுகிறது. சமுதாயத்தில் பொம்மக்கா போன்ற அம்மாக்கள் இருந்த காலத்தினைத் திருத்திடவே அஞ்ஞாடிப் புதினப்பெண்கள் புதினம் வழியாக மக்களிடம் பேசுகிறார்கள்.

முடிவுரை

                பெண்களது அறிவுக்கூறு புறவுலகைப் புலன்உணர்வால் நுகர்ந்து தற்சாரா நிலையில் அணுகுவதற்குத் துணைபுரிகின்றது. பெண்களது அகஉணர்வோ உள்ள உணர்வுகளைத் தற்சார்பு நிலையில் மதிப்பீடு செய்யத் துணை நிற்கின்றது. அறிவாற்றலால் பெண்கள் புறவுலகை மாற்றிப் புதிய வடிவங்களைப் படைக்கிறாள். உணர்வுகளைப் பெருக்கிய பெண்கள் மனித மனமுள்ளவர்களாக உருப்பெறுகின்றனர். சமுதாய மாற்றத்தின் இன்றியமையாமையினையும் சமுதாய மாற்றத்தில் பெண்கள் ஆற்றவேண்டிய முக்கியப் பங்கினையும் உணரும்போது சமூகநிலையை உணர்த்த பெண்கள் புதினங்களில் சித்திரிக்கப்பட்டு வருங்காலத் தலைமுறையினருக்குச் சிறந்ததொரு வழிகாட்டியாக அமைந்துள்ளதைக் கட்டுரையின் மூலம் அறியமுடிகிறது.

குறிப்புகள்
1              அஞ்ஞாடி பூமணி, ழிமீஷ் ழிஷீ : 2, (ளிறீபீ ழிஷீ . 25 ) 17tலீ ணிணீst ஷிtக்ஷீமீமீt, ரிணீனீணீக்ஷீணீழீணீக்ஷீ ழிணீரீணீக்ஷீ, ஜிலீவீக்ஷீuஸ்ணீஸீனீவீஹ்uக்ஷீ, சிலீமீஸீஸீணீவீ 600 041. பக்கம்&706.         
2              தமிழக நாட்டுப்புறவியல் பெண்கள், டாக்டர் திருமதி..முத்துச்சிதம்பரம், தமிழ்ப்புத்தகாலயம், எண் : 15, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தியாகராய நகர சபை -5193, சென்னை&600 017. பக்கம்&132.    
3              இந்தியப் பெண்மணிகள், சுவாமி விவேகானந்தர் ஸ்ரீராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை &  -600 004. பக்கம்&81.  
4.            பெண்ணியம், முனைவர் இரா.பிரேமா, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், டி.டி.டி. (அஞ்சல்) தரமணி, சென்னை & 600 113, பக்கம்&41.   
5              பெண்ணின் பெருமை, திரு.வி.கல்யாணசுந்தரனார், மணிவாசகர் பதிப்பகம், 8-7 சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை & -600108. பக்கம்&30.   

6.            பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும், டாக்டர் .முத்துச்சிதம்பரம், தமிழ்ப்புத்தகாலயம், ஃப்ளாட் எண் ஜி3/8, மாசிலாமணி தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை & 600017. பக்கம்&109.      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக