திங்கள், 18 டிசம்பர், 2017

எதிர்காலத் தமிழ்


ரெ. கோமதிலெட்சுமி,
லெட்சுமி நாராயணன்,
இளம் முனைவர்,
அம்பத்தூர், சென்னை

முன்னுரை:

                தமிழ் பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மை மிகுந்த மொழிகளுள் ஒன்று இதுபக்தியின் மொழிஎன்பதும் கூடுதல் சிறப்புத்தான். மென்மையும் மேன்மையும் கூட இம்மொழிக்கு உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாகஉயர்தனிச் செம்மொழிஎன்று பலராலும் பாராட்டப்பெறும் தகுதியை உடைய தமிழின் எதிர்காலம் இனி வரும் ஆண்டுகளில் எப்படி இருக்கப் போகிறது? என்பதைக் குறித்து சிறிது எடுத்துரைப்பதே இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

உலக அளவில் தமிழின் எதிர்கால வளர்ச்சி :

                “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் இல்லைஎன்றான் மகாகவி பாரதி. தமிழின் இனிமைச் சுவை அதன் பேச்சிலும், எழுத்திலும் பொதிந்து கிடக்கிறது. தமிழகத்தில், இந்தியாவில் மட்டுமின்றியும் உலக அளவிலும் தமிழ் மொழி பரவியுள்ளது. சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில்தமிழ்அந்த நாட்டின் ஆட்சி மொழிகளில் ஒன்று தான். ஆங்கிலம் என்பது அவசியம்; தமிழ் என்பது அத்தியாவசியம் என்பதை நன்கு உணர்ந்து வருகின்றன உலக நாடுகள் பல. தமிழ்ச் சங்கங்களும், தமிழ் அமைப்புகள் உருவாக்கப்பட்டு நமது பாரம்பரியமும், கலாச்சாரமும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. “உலகத் தமிழ் மரபு அறக்கட்டளைஎன்ற ஒரு அமைப்பும் தமிழைப் போற்றிப் பாதுகாத்து வருகின்றது.

எதிர்காலத் தமிழ் வழிக் கல்வியின் தேவையும், சவால்களும்:

                இனி வரும் காலங்களில் தமிழ் மொழிக் கல்வி என்பது வெளி தேசங்களில் இணையத்தின் வாயிலாக கற்பிக்கப்படும். இன்றும் கூட பல தேசங்களில் இவை நடைமுறையில் இருக்கின்றது. இன்னும் சில இடங்களில் தமிழ் நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வாரத்தில் ஒரு தினம் அவரவர் வீடுகளில் தமிழ் வகுப்பு எடுக்கின்றனர். உதாரணமாக கலிபோர்னியா தமிழ்க் கழகத்தின் தமிழ் வகுப்புக் கல்வியை எடுத்துரைக்கலாம். துபாய், அபுதாபி, போன்ற இடங்களிலும் தமிழ் வகுப்பு குழந்தைகட்கு எடுக்கப்பட்டு வருகின்றது. துபாயில் சிறு குழந்தைகட்கு தமிழ் வகுப்பு எடுத்த அனுபவம் ஆய்வாளருக்கு உண்டு.

                தமிழ் மொழியின் ஒலி உச்சரிப்பினை மாணவர்களுக்கு நன்கு திறம்பட கற்பித்தல் என்பது மிகவும் அவசியம்,,என்ற எழுத்துக்களின் உச்சரிப்புகளின் வேறுபாட்டினை விளக்கியுரைத்தல் வேண்டும். தொலைக்காட்சியில் வரும் தமிழ் கார்ட்டூன் சேனல்கள் கூட குழந்தைகளின் தமிழ் மொழியின் திறன் மேம்பாட்டிற்கு உதவியாக இருக்கின்றன. குறிப்பாக ஆங்கில வழிக் கல்வியில் தமிழ் பயிலும் மாணவர்கட்கு தமிழ் மொழி சற்றுக் கடினமானதாகவே இருக்கின்றது.

                                “நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
                                வான் பற்றி நின்ற மறைப் பொருள் சொல்லிடின்
                                பற்றி நின்ற உணர்வுறு மந்திரந்
                                தான் பற்றப் பற்றத் தலைப்படுந் தானே
                                                                                                 (திருமந்திரம் பாடல் & 85)
திருமந்திரப் பாடல்கள் எல்லாம் இனி வரும் காலங்களில் குழந்தைகளுக்கு மிகவும் கடினமான தமிழாகவே இருக்கும்.

                வீட்டில் இருக்கும் பெரியவர்கள் குழந்தைகட்கு தேவாரம், திருவாசகம், பாரதியார் கவிதைகள், திருக்குறள் போன்றவற்றை வாசித்துக் காட்ட வேண்டும். அவர்களையும் வாசிக்கச் சொல்ல வேண்டும். நல்ல தரமான தமிழ் குறும்படங்களையும் குழந்தைகளுக்குப் போட்டுக் காட்டலாம்.


                டாக்டர். .வே.சா, மறைமலை அடிகள், பரிதிமாற் கலைஞர், பாரதியார், பாரதிதாசன், தேவ நேயப்பாவாணர் போன்றவர்களின் தமிழ்த் தொண்டையும் அடிக்கடி குழந்தைகளுக்கு நல்ல விதத்தில் அவர்களுக்குப் புரியும் வகையிலும் எடுத்துரைத்தல் வேண்டும். காலாண்டு தேர்வு விடுமுறை, அரையாண்டுத் தேர்வு விடுமுறை போன்ற நாட்களில் குழந்தைகளை அந்தந்த ஊரில் இருக்கும் நூலகத்திற்கு அழைத்துச் சென்று வாசிப்புப் பழக்கத்தை கட்டாயம் ஆக்குதல் வேண்டும். வருடம் ஒரு முறை குறைந்தது 5 தமிழ்ப் புத்தகங்களை வாங்கிக் கொடுத்து அவற்றை அந்த ஆண்டு முடிவிற்குள் வாசித்து முடிக்கச் சொல்லலாம்.

எதிர்காலத் தமிழ் பேச்சு மொழியில், இலக்கிய மொழியில் ஏற்படவுள்ள மாற்றங்கள்:

                கூடுமானவரையிலும் ஆங்கிலம் அல்லது பிறமொழி கலந்த தமிழைப் பேசக் கூடாது. இது பெரியவர்களுக்கும், குழந்தைகட்கும் இணைந்தே பொருந்தும். ஈபேப்பர் அல்லது தினசரி செய்தித்தாள் வாசித்தல் வீட்டிலும், பள்ளியிலும் கட்டாயப் பழக்கமாக்குதல் வேண்டும்.


                தரமான பிறமொழி இலக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்ப்பதும் மிக அவசியம். தமிழ் படித்தால் தான்ஞானம்கிடைக்கும்.

                                “அகத்தவத்தால் ஐம்புலனை அடக்கி அறிவறிந்திடலாம்
                                அகத்தவத்தால் அறுகுண ஆளுமைப் பேறடைந்திடலாம்
                                அகத்தவத்தால் இல்லறத்தை அன்பகமாய் ஆற்றிடலாம்
                                அகத்தவத்தால் அனைததுயிர்கள் அரு நட்பைப் பெற்றிடலாம்.”
                                                                                                (தவத்தின் பெருமை & வேதாத்ரி மகரிஷி)

முடிவுரை:

                மனிதப் பிறவியின் ஞானத் தேடலுக்கு நல்ல பாதை அமைத்துத் தந்த தமிழ் மொழியைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது நமது கட்டாயக் கடமைகளில் ஒன்று. அடுத்த தலைமுறைக் குழந்தைகளும் நல்ல தமிழை அற்புதமாகப் படித்து பயன் பெறலாம். வாழ்க வளமுடன் தமிழ் கூறும் நல்லுலகம். வாழ்க வளமுடன்; வாழ்க செந்தமிழ்; வாழ்க வையகம்.
துணை நூற்பட்டியல்:
                1.            பாபஜியும், பதினெண் சித்தர் கிரியா யோக மரபும் & பக்கம் 70
                2.            ஞாலம் போற்றும் ஞானிகள் & பக்கம் 126





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக