திங்கள், 18 டிசம்பர், 2017

தமிழ்ப் புதினத்தின் எதிர்கால நிலை


      முனைவர் செ.சாந்தி
       உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
          ..சிதம்பரம் கல்லூரி
           தூத்துக்குடி&-8

முன்னுரை

                இலக்கியப் போக்குகளை ஆராயுங்காலத்து அது, குறிப்பிட்ட காலக்கட்டத்தில் செல்வாக்குப் பெற்றிருக்கும். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் செல்வாக்கை இழக்கும். புதிய இலக்கியப்போக்கு அந்த இடத்தில் அமரும். தொடர் இயக்கமாக அது அமைகிறது. கூடவே எல்லா இலக்கியப் போக்குகளும் நாவலைப் பாதித்துள்ளன. குறிப்பிட்ட இலக்கியப் போக்கு செல்வாக்குப் பெற்றிருந்தத் காலக்கட்டத்தில் அப்போக்கினைச் சார்ந்த நல்ல நாவல்கள் தமிழில் உருவாகியுள்ளன.

புதினத்தில் மிகு உணர்ச்சி:

                தொடக்கத்தில் மிகு உணர்ச்சியியல் போக்குதான் தமிழில் இருந்தது. இதனுடைய கதை வடிவம் ரொமான்ஸ். படைப்பாளியின் உணர்ச்சியைச் சார்ந்திருக்கும். இந்த உணர்ச்சி கனவு நிலையிலிருந்து பிறக்கும். தான் என்னும் தன்முனைப்புடைய தனிநபர் ஆளுமை, தீவிரமானச் சமுதாய எதிர்ப்பு, அறிய முடியாத புதிர்த் தன்மை, வழக்கத்திலுள்ள சட்ட விதிகளிலிருந்தும் மரபுகளிலிருந்தும் முழுமையானச் சுதந்திரம் போன்ற முக்கியக் குணங்களை மிகு உணர்ச்சி கொண்டிருக்கும். தமிழில் மிகப்பெரிய மிகு உணர்ச்சி என்று சொல்லத்தக்கவை எதுவுமில்லை. மாயூரம் வேதநாயகம்பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம், கல்கியின் பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, கருணாநிதியின் புதையல் போன்றவற்றை மிகு உணர்ச்சிப் புதினமாகச் சுட்டலாம்.

புதினத்தில் எதார்த்தம்:-

                மிகு உணர்ச்சியியலுக்குப் பின் எதார்த்தம் தமிழில் வலுவடைந்தது. அது சமூக உண்மைக்கு முதன்மை இடம் கொடுக்கும். வாழ்க்கையை விசாரணைக்கு உட்படுத்தும். நாவல் வாசகனும் வாசிப்பின் மூலம் வாழ்வை விசாரணைக்கு உட்படுத்துவான். விசாரணைக்கு உட்படுத்துவதற்கான எல்லாச் சாத்தியங்களையும் நாவல் பெற்றிருக்கும். எனவே, நாவல் குவியாது. விரிந்து கொண்டே போகும். தண்ணீரில் எண்ணெய் படர்வது போல, எதார்த்தக் காலக்கட்டத்தில் தான் நாவல் உதயமாகிறது.

                1940-ல் தான் தமிழ் நாவலுக்குள் எதார்த்தம் நுழைகிறது. எதார்த்தத்தை மிகு உணர்ச்சியியலின் எதிர்த்திசையில் புரிய வேண்டும். எதார்த்தம் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும். சமூகப் பிரச்சனைகளுக்குக் காரணமான உண்மை குறித்த தோற்றத்தைக் கொண்டிருக்கும். எதார்த்தம், பொருள்முதல்வாதத்தின் இலக்கிய வெளிப்பாடு. ஒழுங்கமைவு பொருளில் தவிர்க்க முடியாத ஒன்று. ஒழுங்கமைவு கொண்டதைத்தான் புலன்கள் ஏற்கும். தர்க்கரீதியான ஒழுங்கமைவு இருக்கும். புறவுலகை நிஜமாகக் காணும். வாழ்வினுடைய நம்பகத்தன்மை சார்ந்த சித்தரிப்பு இருக்கும். .நா.சு.வின் பொய்த்தேவு, சண்முகசுந்தரத்தின் நாகம்மாள் போன்றவற்றை எதார்த்தப் போக்கிற்குச் சான்றாகக் கொள்ளலாம்.

வட்டாரப் புதினம்:-

                1960-களின் இறுதியில் வட்டார நாவல் உதயமாகிறது. மனிதனை விட மனிதன் வாழும் சூழலுக்கு முதன்மை இடம் கொடுக்கப்பட்டது. உண்மை என்பது தனித்தனி வட்டாரம் சார்ந்தது என்று விளக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தைப் பின்னணியாகக் கொண்டிருந்தாலும் மனிதச் சமுதாயம் முழவதும் உணர்ந்து அனுபவிக்கத்தக்கப் பொதுமை அதில் இருக்க வேண்டும் என்றும், கதை மாந்தர் படைப்பு இரண்டாம் இடம் வகிக்க வட்டாரம் முதல் இடம் வகிக்க வேண்டும் என்றும், எடுத்துக் கொண்டிருக்கும் வட்டாரத்தின் மண்மணம் படைப்பு முழுவதும் கமழ வேண்டும் என்றும் வட்டார நாவல் தன்மை வரையறை செய்து கொண்டது.

                வட்டாரப் புதினத்திற்கு, ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு, நீலபத்மநாபனின் தலைமுறைகள், சின்னப்ப பாரதியின் தாகம், கிருத்திகாவின் வாசவேச்வரம், தோப்பில் முகமது மீரானின் ஒரு கடலோர கிரமாத்தின் கதை இவைகளைச் சான்றாகக் கொள்ளலாம்.

புதினத்தில் சோசலிச எதார்த்தம்:-

                1960 & இந்த காலகட்டத்தில்தான் சோசலிஸ எதார்த்த நாவல் உருவாகியது. சமூக உண்மை என்பது மேலோட்டமானதல்ல. அது அறிவியலடிப்படையில் இனங்காணப்பட வேண்டிய ஒன்று. முரண்பட்ட இரு சக்திகளின் மோதல் மூலமாகத்தான் சமூகம் இயக்கம் கொள்ளும். முரணைச் சித்தரிப்பதன் மூலமாகவே வாழ்க்கை எதார்த்தத்தைச் சித்தரிக்க முடியும். சமுதாயப் பிரச்சனைகளை விமர்சனம் செய்வதோடு பிரச்சனைகளுக்கு ஒட்டுமொத்தமானத் தீர்வுகளைக் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ காட்டும். வகைப்பாடான நிகழ்வுகள், வகைப்பாடான பாத்திரங்கள் மூலம் இது எட்டப்பட வேண்டும்.

  இதற்குப் பொன்னீலனின்கரிசல்சிறந்த  எடுத்துக்காட்டு. ஒரு பாத்திரத்தின் பொதுக்குணமும், தனிக்குணமும் கூறப்பட்டிருக்க வேண்டும். அவை சமநிலையில் இருக்க வேண்டும். பிறழும் பொழுது பிரச்சாரமாகிப் போகும். சமூக உண்மையை இன்னும் ஆழமாகப் பார்க்கும். துல்லியமான சமூக உண்மைகளை அடைய முயற்சிக்கும். ‘கரிசலைத் துல்லியமான சமூக எதார்த்த நாவலாகக் கருதலாம். ரகுநாதனின் பஞ்சும் பசியும், செல்வராஜின் மலரும் சருகும், சின்னப்ப பாரதியின் தாகம் ஆகியன இதற்குத் தக்க சார்பு.

                சோஷலிஸ எதார்த்தத்தை உடைத்து வெளிவருவது பொன்னீலனின் புதிய தரிசனங்கள். இது மார்க்சியத்தை அரசியலாக அல்ல. மெய்யலாக எதிர்கொள்கிறது. புதிய தரிசனம் மெய்யல் தளத்தில் பயணிக்கிறது. வாழ்க்கை முரண்களைப் பதிவு செய்கிறது. முரண் இயக்கம் தான் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும். மார்க்சிய வாழ்வின் எதார்த்தம் குறித்த தேடல் இல்லாமல் விமர்சனமே மிஞ்சி இருப்பதை விமர்சன எதார்த்தம் என்பர். ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதியின் படைப்புகளில் இதனைக் காணமுடியும்.

                எதார்த்த நாவலின் உச்சகட்டமான வடிவத்தைத் தீர்மானித்தவர் ஜானகிராமன் நாவல்கள் என்றால் எதார்த்தத்திலிருந்து உடைவை ஏற்படுத்திய நாவல் புளியமரத்தின் கதை. இதில், செயற்கையானக் கதை சொல்லல் இல்லை. எதார்த்தத்தின் நேர்கோட்டுக் கதை சொல்லலிருந்து வெளியேறும் முயற்சி இதில் தென்படுகிறது. மிகையானக் கதை சொல்லும், கேலிச்சித்திரமும் நிறைந்தது.

புதினத்தில் நவீனத்துவம்:-

                1970 -களில் நவீனத்துவத்தின் துவக்கம் நிகழ்கிறது. இரண்டு உலக யுத்தங்களுக்கு இடையில் தோன்றிய தத்துவப் போக்கு இருத்தலியம். அதன் இலக்கிய வெளிப்பாடு நவீனத்துவம். இருத்தலியம் தனிமனிதச் சுதந்திரத்திற்கு முதன்மை இடம் கொடுக்கும். நவீனத்துவத்தில் படைப்பாளி சுதந்திரம் முக்கியம். ஒரு படைப்பு, படைப்பு என்பதற்காகவே இயங்க வேண்டும். படைப்பின் கடைசி இலட்சியம் செறிவான மொழியை உருவாக்குவதாகும். நம்மைப் பொறுத்தவரை விடுதலையை ஒட்டிய காலப்பகுதியில் காந்தியப் பொருளாதாரம் ஒரு விடுதலையைத் தரும் என்ற நம்பிக்கை இருந்தது. அது நனவாகவில்லை. அதில் அதிருப்தி ஏற்பட்ட பொழுது மார்க்சியப் போக்கு உருவாகியது. ஆனால் உலக அரங்கில் நடந்த நிகழ்வுகள் மார்க்சியத்தை மறுதலிக்க வைத்தது. இரு உலக யுத்தத்திற்கு இடையே உள்ள அதிருப்தி போலவே இது இருந்தது.

                விரும்பின வேலை வாய்ப்பு இல்லாமல் ஆகும் பொழுது மனிதன் அந்நியமாகிறான். மதிப்பீடுகள் இல்லாதபோது மனித இருப்பு முக்கியமாகப்பட்டது. இறுதி விடுதலை மரணத்தின் மூலமே கிடைக்கும் என நம்பினர். எல்லா நவீனத்துவ வாதிகளும் வாழ்க்கையை அபத்தமாகக் கருதினர்.

                இந்தப் போக்கைத் தமிழில் பல்லக்குத் தூக்கிகளிலிருந்து காணலாம். நாவலில் நவீனத்துவம் செறிவான வடிவத்தை வற்புறுத்தியது. படைப்பாளி சொல்வதைவிட உணர்த்துவது அதிகமாக இருக்க வேண்டும் என்றது. நாவல் சின்னதாகவே அமைந்தது. நேர்கோட்டுக் கதை சொல்லும் முறை இதில் இல்லை. வாசகனின் புரிதல் தன்மைக்கு ஏற்ப வாழ்க்கையை விரித்துக் கொள்ளலாம்.

                தமிழில் ஆரம்பகால நவீனத்துவ நாவல்கள் கந்தசாமியின் சாயாவனம், நகுலனின் நாய்கள், அசோகமித்திரனின் தண்ணீர் இவை அனைத்தும் குறியீட்டுப் பாங்கான நாவல்கள். வாசகப் பங்களிப்பு இல்லாமல் இந்நாவல்கள் முழுமையடையாது.

                மார்க்சியத்திலிருந்து அதிருப்தி கொண்டு வந்த நவீனத்துவ நாவலாசிரியர்களும் உண்டு. ஜி.நாகராஜன், சுந்தர ராமசாமி ஆகியோரைக் கூறலாம். எழுத்தின் மூலம் சமூக மாற்றம் நிகழும் என்பதில் நவீனத்துவவாதிகளுக்கு நம்பிக்கை இல்லை. இவர்களுக்குச் செவ்வியல் மீதோ, புராணம் மீதோ பிடிப்பு இல்லை. நாட்டார் வழக்காறுகளிலும் நாட்டம் இல்லை. வேரற்றவர்களாக இருந்தனர். அறிவு சார்ந்த பார்வையை முன் வைத்தனர். அனுபவம் அறிவினால் உள்வாங்கப்பட வேண்டும் என்றனர். சிந்தனை முனைப்பே அதிகமாக இருக்கும்.

                சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகள் முற்றிலுமாக கதை சொல்வதை உதறுகிறது. ஜே.ஜே வாழ்க்கை வரலாறை எழுதுவதற்குச் சேகரிக்கப்பட்ட குறிப்புகள் ஜே.ஜே. யின் நாட்குறிப்பிலிருந்து மொழிபெயர்த்துத் தரப்பட்டவை. வாழ்க்கையை விசாரணைக்கு உள்ளாக்குகின்றது.

                வாசகப் புரிதலுக்கு விட்டுச் செல்லுதல் நவீனத்துவ நாவலின் பொதுக்குணம். இதில் முக்கியமானவர் நாஞ்சில் நாடன். அவரது மிதவை, எட்டுத்திக்கும் மதயானை, சதுரங்கக் குதிரை போன்ற படைப்புகளைச் சுட்டலாம்.

                90-களில், ஜெயமோகன் (ரப்பர்), கோணங்கி (மதினிமார் கதை) போன்றோர் நவீனத்துவத்திலிருந்து விலக நவீனத்தத்துவம் முடிவுக்கு வந்தது. இருவரும் வெவ்வேறு பாதைகளில் பயணிக்கத் தொடங்கினர்.

                கோணங்கி பின் நவீனத்துவப் போக்கை அரவணைத்துக் கொண்டார்
                ஜெயமோகனும் - புதுச் செவ்வியல் போக்கைத் தழுவிக் கொள்கிறார்.
                ஜெயமோகன் புதுச் செவ்வியலோடு நாட்டார் வழக்காறுகளையும் எடுத்துக் கொள்கிறார். இதன் இணைவே விஷ்ணுபுரம். ஜெயமோகன் நவீனத்துவத்தின் செறிவை உடைக்கிறார். எதார்த்தத்தை முன் வைத்துப் பசுமையான மொழியைக் கையாளுகிறார்.

                நவீனத்துவத்தில் படைப்பாளி ஒரு சர்வாதிகாரி. வாழ்க்கையைச் சொல்லாமல் தன்னை முன்வைப்பவன். இதற்கு எதிராக ஒரு புதிய போக்கு உருவாகிறது. அதுவே பின் நவீனத்துவம். இது மையப்படுத்தலை மறுக்கும். படைப்பை உருவாக்கிய உடனே படைப்பாளி அழிகிறான். எழுத்து ஜனநாயகப்படுத்தப்படுகிறது. தமிழில் எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவத்தைக் கூறலாம். மகாபாரதக் கதைதான் எண்ணற்ற வாசிப்புகளுக்கு இதில் இடமுண்டு.

புதினத்துவத்தின் எதிர்கால நிலை:

                பதினெட்டாம் நூற்றாண்டில் மேலை நாட்டு அரசியல், சமூக வாழ்வியல் போன்றவற்றில் ஏற்பட்ட மாறுதல்களே புதினம் தோன்றுவதற்கேற்றக் களம் அமையக் காரணங்களாக இருந்தன. என்றாலும், இன்றையப் பல்வேறு சூழ்நிலைகளாலும், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்ட மாற்றங்களாலும், புதினம் தன் வடிவத்திலும் கதை அமைப்பிலும் பல்வேறு மாறுதல்களைப் பெற்றவாறு உள்ளன. புதினம் என்பது மிக நீளமானக் கதைகளைக் கூறும் இலக்கிய வடிவம் என்ற நிலை மாறி முந்தையக் காலச் சிறுகதை அளவுக்குச் சுருங்கிக் கொண்டே  வருகின்றது. இனி எதிர்காலத்தில் இதன் நிலை என்னாகுமோ, எண்ணிப் பார்க்கவே இயலாவாறு மாற்றம் பெறலாம்.

                கல்கி, சாண்டில்யன் போன்றோரின் வரலாற்றுப் புதினங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களை உள்ளடக்கியதாக எழுதப்பட்டு வந்தன. ஆனால், இன்றையக் கால ஓட்டம் புதினத்திற்கு நூற்றுக்கும் குறைவான பக்கங்களைக் கொண்டு வரக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிவிட்டது. இதற்கு முக்கியக் காரணம், முகநூலில் முகம் தொலைக்கும் மக்கள் பட்டாளங்கள் மலிந்தமையே ஆகும். இனிவரும் காலத்தில் வரலாற்றுப் புதினங்களே தோன்றாமல் போவதற்கானச் சாத்தியக் கூறுகள் கண்ணெதிரே தெரிகின்றது.

                டாக்டர் மு.., அகிலன், ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி போன்றோர் அருமையானச் சமுதாயப் புதினக் கர்த்தாக்கள் ஆவர். இவர்கள் எழுதுகின்ற புதினங்களை மிகவும் விரும்பிப் படிக்கின்ற ரசிகர்கள் நிறைந்து காணப்பட்டனர். இன்றையச் சூழலில் சமுதாயப் புதினம் எழுதுவதற்கானச் சிறந்த ஆசிரியர்கள் குறைந்துவிட்டனர். இதற்குக் காரணம், வாசகர் இல்லாததுதான். சில பத்திரிக்கைகள் மட்டும் கரம் கொடுக்காது போனால் சமுதாயப் புதினம் என்பதின் அடையாளமே இல்லாமல் போயிருக்கும். இனி எதிர்காலத்தில் இதன் நிலை கவலைக்கிடமேயாகும்.

                குடும்பம் சார்ந்த புதினங்களைப் பெண்களுக்காகவே எழுதும் பெண் எழுத்தாளர்கள் காணப்பட்டனர். குறிப்பாக லஷ்மி, குகப்பிரியை, அநுத்தமா, கோமகள், ராஜம்கிருஷ்ணன், ரமணிச் சந்திரன் போன்றோராவர். இவர்களது புதினங்களைப் படிக்க இல்லத்தரசிகள் வெறியுடன் காத்துக் கிடந்தனர். இன்று, தொலைக்காட்சியறையில், தங்களுக்குத் தாங்களே சிறைச்சாலை அமைத்துக் கொண்டனர். இனிவரும் காலத்தில் பெண்கள் கணினியின் காலடியில் மிதிபட்டு, அடிமைப்பட்டு, கலாச்சாரத்தை இழந்து துடிதுடிக்கப் போகிறார்கள்.

                பேச்சு மொழியிலேயே உரையாடல்களை அமைக்கும் முறை புதினங்களில் தோன்றியது. அந்தந்த வட்டார மொழிகளைப் பயன்படுத்திப் புதினங்களைப் படைத்தனர். குறிப்பாக ஆர்.சண்முகசுந்தரம், ஹெப்சிபா ஜேசுதாசன், நீல.பத்மநாபன், பொன்னீலன் போன்றோர் இப்பணியினைச் செய்தனர். ஆரம்ப காலத்தில் இவ்வடிவம் வெற்றி பெற்றாலும், சிலர் தங்கள் இனம் சார்ந்த பேச்சு வழக்கு என்னும் பெயரில் தமிழ் மொழியையே குழி தோண்டிப் புதைக்கின்றனர். மலர்வதி போன்றப் புதின ஆசிரியர்கள் அருவருப்பானச் சொற்களையும் எந்தவிதக் கூச்சமும் இல்லாமல் தமது புதினத்தில் பயன்படுத்தி வருவதைத் தமிழ் மொழிக்குச் சாபக் கேடே எனலாம். இனிவரும் காலத்தில் இவர்களின் வாரிசுகள் வாய்க்கு வந்தபடி தரம் தாழ்ந்து எழுதி புதின மரபையே கழுவேற்றி விடுவர்.

முடிவுரை:
                “நாவல் என்பது ஒரு குறிப்பிட்ட மக்கட் கூட்டத்தினுடைய செயல்களின் வெளிப்பாடு மட்டுமல்ல, அது ஒரு காலகட்ட உணர்ச்சிகளின் வெளிப்பாடும் கூடஎன்று ஸ்டாட்டர்ட் என்னும் திறனாய்வாளர் கூறுகிறார். இவருடையக் கூற்றை முற்றிலும் தவறு என்று நிரூபிக்கும் அளவிலேதான் எதிர்காலப் புதினங்களின் போக்கு அமையும். இதற்கெல்லாம் முக்கியக் காரணம், நவீனம் என்னும் புதிய வடிவம் புதினத்தில் புகுந்ததுதான். உணர்ச்சியைப் பற்றியும், உண்மை நிலைகளைப் பற்றியும் எந்தவிதக் கவலையும் இல்லாமல் கதை வளம் கூடச் சிறிதும் இடம்பெறாமல் புதினங்களைப் புனையும் போக்கு தலைதூக்கியுள்ளது. மேலும், மொழிபெயர்ப்பு என்னும் பெயரில், ஒரு குறிப்பிட்ட கூட்டத்திற்கு மட்டுமே உரியதாகப் புதினம் எழுதும் தன்மை உருவாகி, எதிர்காலத்தில் புதினம் தன் விசாலமானச் சிறகு விரிப்பைத் தனக்குள் சுருக்கிக் கொள்ளும்.













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக