சு. முருகலெட்சுமி,
முனைவர் பட்ட ஆய்வு மாணவி,
ஏ.பி.சி.
மகாலெட்சுமி மகளிர் கல்லூரி,
தூத்துக்குடி - 2.
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி. அத்தகையப் பழமையான மொழி தமிழ். ஆனால் இன்று எத்தனைத் தமிழர்களுக்குத் தூய்மையானத் தமிழ் தெரியும். இன்றைய இயந்திர உலகில் தமிழும் தமிழ் போன்றப் பல பழமையான அற்புதங்களும் மறுக்கப்படுகின்றன; தவிர்க்கப்படுகின்றன. இன்றைய நம்முடைய வாழ்க்கையில் இதை உணர்வதற்கும் காரணத்தை அறிவதற்கும் கூட நேரமில்லாமல் வாழ்கின்றோம். உலகில் உள்ள மொழிகளில் மிகவும் வேகமாய் அழிந்து வரும் மொழி தமிழ். அது எவ்வாறு என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
அதிகமாகப் பின்னோக்கிச் செல்லவேண்டாம்.
இருபதாம் நூற்றாண்டில் மட்டும் ஏற்பட்ட மாற்றங்களைப் பார்த்தால் போதும். தாய்மொழியாம் தமிழையும் தமிழனின் வாழ்க்கையையும் மறக்கிறோம் என்பது புரியும். திருக்குறளையும் சிலப்பதிகாரத்தையும் தெளிவுரை படித்தால் மட்டுமே அரைகுறையாகப் புரிந்தது நமக்கு. இன்று பல குழந்தைகள் அவற்றைத் தெளிவுரை வைத்துக் கூட படிப்பதே இல்லை.. இலக்கணத் தமிழில் நொடிப்பொழுதில் கவிதை செய்த காலம் மாறி இருபதாம் நூற்றாண்டில் நடைமுறைத் தமிழில் கவிதைகள். இருபது ஆண்டுகளுக்கு முன்னால் அதுவும் மறக்கப்பட்டுத் தமிழ், புது முகம் கொண்டது. தமிழ் இலக்கண இலக்கியங்களை மறந்து வண்ணத்திரைப் பாடல்களைப் படைத்தோம். இன்றைய நிலைமை தமிழ் இல்லாமல் ஆங்கிலத்தில் இயற்றப்படும் பாடல்கள்தான் மக்கள் மனதைக் கவர்கின்றன.
இதிலிருந்து தமிழ் எத்தனை வேகமாக மாறுகிறது மறைகிறது என்பதை அறியலாம். அத்துடன் சேர்ந்து தமிழனின் கலாச்சாரமும் சேர்ந்து மறைந்துவருகிறது.
நாம் பார்த்தவற்றை வைத்தே பேசுவோம். நம் தந்தை அல்லது அவரின் தந்தை இவர்களில் ஒருவராவது தான் பிறந்த வளர்த்த மண்ணைப் பிரிய மறுத்திருப்பார். ஆனால் இன்று தன் மகனோ மகளோ வெளிநாட்டில் இருக்கப் பிரியப்படும் தாய் தந்தையர் எத்தனைப் பேர். அப்படி என்ன தவறிழைத்து விட்டோம் நாம் நம் தாய் நாட்டை விட்டு விரட்யடிக்கப் படுவதற்கு?
காரணம் அதுவாக இருக்க முடியாது. நமது பெற்றோர்கள் சந்தித்தப் பிரச்சினைகளே காரணமாக இருக்க முடியும். தெரிந்தோ தெரியாமலோ தாய்நாட்டில் வாழ வழி இல்லை என்று நினைத்துவிட்டோம்.
இன்று தன் தாய் மடியை விட்டு அடுத்த வீட்டுத் தாயின் காலில் கிடக்கிறோம்..
அதை நினைத்துப் பெருமையும் பட்டுக்கொள்கிறோம்.
இதெற்கெல்லாம் மூல காரணம் நம் அறியாமையா?
தமிழின் இயலாமையா? அல்லது தமிழனின் கோழைத்தனமா? தமிழனின் வீர வரலாற்றினை நாம் அனைவரும் வாய்விட்டு படித்திருப்போம்.அதனாலோ என்னவோ எவருக்கும் மனதில் இல்லாமல் போய்விட்டது..
சங்கம் வைத்து ஒரு மொழியை வளர்த்த சமூகம். இன்று எத்தனைச் சங்கங்கள் உள்ளன ஓரிரண்டு இருந்தாலும் நம் மொழிக்காக எத்தனை உள்ளன? ஒரு நாட்டில் என்ன வளர வேண்டும் என்ன வளரக் கூடாது என்பதைக் கட்டுப்படுத்தும் தொலைநோக்குப் பார்வை அரசிடம் இருக்க வேண்டும், மக்களிடமும் இருக்க வேண்டும். ஆனால் இன்று நமக்கும் தெரியவில்லை. தெரிந்தாலும் அரசாங்கமும் முயற்சிப்பதில்லை. நாம் ஒரு மொழி அதன் தாயகத்தில் வாழ வழியற்றுப் போனால் வேறு எங்கும் நிலைத்திருக்க வாய்ப்பே இல்லை எனலாம். குறிப்பாக உலகம் முழுவதும் பேசப்பட்டு வரும் அனைத்து மொழிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட நிலப்பிரதேசம் தாயகப் பகுதியாக உள்ளன. அந்த மொழி தோன்றி பரிணமித்து வளர்ச்சி பெற்ற இடமாக அது இருக்கின்றது.
இவை இயற்கையாக ஏற்பட்ட ஒன்றாகவும் இருக்கின்றது.
அந்தக் குறிப்பிட்ட பகுதியில் இருந்து மக்கள் புலம்பெயரும் போது தமது தாய்மொழியையும் எடுத்துச் செல்கின்றனர்.
சில சந்தர்ப்பங்களில் தாம் புலம்பெயரும் புதிய தேசத்தின் அரசியல் பொருளாதாரம் முதலிய காரணங்கள் ஏதுவாய் இருக்குமானால் அந்த மொழி புதிய தேசத்தில் தழைத்தோங்கும் வாய்ப்புண்டு. அதே சமயம் மிகுந்த நெருக்கடிகளைச் சந்திக்கும் என்றால் அம் மொழி வழக்கொழிந்து போய்விடும்.
புதிய தேசத்தில் மட்டுமின்றி பாரம்பரியமாக ஒரு மொழி பேசப்பட்டு வரும் தாயகப் பகுதிகளில் கூட அரசியல், பொருளாதார, சமூக வளர்ச்சிகளுக்கு ஏற்ப மொழி தக்க வைக்கப்படவும் இயலும் அல்லது தனது தனித்துவத்தை இழந்து புதிய மொழியாக மாற்றம் காணாமல் போகவோ முடியும்.
ஆக மொழி நிலைத்திருக்க அதனை பேசக் கூடிய மக்கள் மிக முக்கியம்.
அந்த மக்கள் குழுமி வாழ ஏதுவான தாய்நிலம் மிக மிக அவசியம். அத்தோடு மட்டுமின்றி அந்த மொழி பேசும் மக்களின் அரசியல் பொருளாதார ஆதிக்கமும் சமூக வளர்ச்சியும் இன்றியமையாதன. அதாவது ஒரு மொழி தொடர்ந்து வாழ வேண்டும், எனில் அந்த மொழி அதன் தாய்நிலத்தின் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தப்பட வேண்டும்.
நெகிழ்வுத் தன்மை
வரலாற்றை வாசிப்போமானால் பல மொழிகள் காலப் போக்கில் சிதைந்தும் உருமாறியும் அழிந்தும் போயுள்ளன. சில மொழிகள் இன்றளவும் நிலைத்து வருகின்றன. பண்பாடுகளை உருவாக்கிய எகிப்து சுமேரிய ரோம மொழிகள் அனைத்தும் அந்தந்தத் தாய்நிலத்தின் அரசியல் நிர்மூலமாக்கப்பட்ட பின் அழிந்து போய்விட்டன.
பேரரசின் மொழிகளாக மக்களின் மொழிகளாக பண்டைய இந்தியாவின் பிராகிருத மொழி இன்று வழக்கில் கிடையாது. அது சிதைந்த மராத்தியம்,
சிங்களம்,
இந்தி,
மயிதிலி,
வங்காளம் என உருமாறி புதிய மொழிகள் பல பிறந்தன.
மிகப் பழமையான வளர்ச்சி வரலாற்றைக் கொண்ட தமிழ் மொழி கூட இடைக்காலத்தில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார தாக்கத்தினால் தமிழகத்தின் மேற்கு கரைப் பக்கம் மலையாளமாக உருமாறி தனித்த மொழியாக மாற்றம் அடைந்தது. ஏனையப் பகுதியில் மட்டும் தமிழாக இன்றளவும் நிலைத்து நிற்கின்றது.
அது போக தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழர்கள் குடியேறிய போது தமிழ் அந்தந்த நாடுகளில் நிலைபெற்றன.
ஆனால் தென்னாப்பிரிக்கா, மொரிசியஸ், றினியன், பிஜி,
கயானா போன்ற நாடுகளில் அரசியல், சமூக, பொருளாதார ஆதரவு ஏதுமில்லாது போனதால் தமிழ் மொழி அழிவுற்றது. அங்குள்ள தமிழர்கள் காலப் போக்கில் அந்தந்தத் தேசத்து மொழிகளைப் பயின்று கொண்டனர்.
இலங்கையில்
13-ம் நூற்றாண்டு முதல் தமிழ் சிற்றரசர்களின் ஆட்சி நிலவியதால் தமிழ் மொழி அழியாமல் பாதுகாக்கப்பட்டது.
அது போக அங்கு அன்றளவும் பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழியாகவும் இருந்து வருவதால் சிங்களப் பகுதிகளில் கூட நிறுவப்பட்டதோடு அரசு துணையோடு தமிழ் மொழி வாழும் மொழியாக நிலை நிறுத்தப்பட்டது.
ஆனால்
1960-களின் பின் பர்மாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் தமிழ் மொழி வளர்ச்சிக்குத் தடை ஏற்பட்டதோடு தமிழ் மொழியில் கல்வி கற்கும் வாய்ப்பும் அருகிப் போனது. அதனால் இன்று பர்மாவில் வாழும் இரண்டு லட்சம் தமிழர்களில் பலருக்கும் சரியாகத் தமிழ் பேசவோ, எழுதவோ, வாசிக்கவோ தெரியவில்லை.
சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழியாகவும் பள்ளிகளில் கற்கை மொழியாகவும் இருந்து வருகின்றன.
அரசின் உதவிகள் பல தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வழங்கப்படுகின்றது.
இருந்த போதும் அங்குள்ளக் கணிசமான தமிழ்ப் பெற்றோர்கள் தமிழைத் தம் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்கத் தவறியதன் மூலமாகவும் தமிழை விட ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தமையாலும் தமிழர்களில்
40 பேருக்கு தமிழ் பேசவோ எழுதவோ வாசிக்கவோ தெரியவில்லை. அவர்களது வீடுகளில் ஆங்கிலம் பேச்சு மொழியாக இருக்கின்றது.
உலகில் எங்கும் தமிழ் மொழி வாழ்ந்தாழும் அழிந்தாழும் தாய் தமிழகத்தில் தமிழ் மொழி போற்றிப் பாதுக்காக்கப்படவில்லை என்றால் காலப் போக்கில் உலக அரங்கில் இருந்து தமிழ் மொழி இறந்த மொழியாக மாறும் பேரவலம் ஏற்படலாம்.
தமிழகத்தின் பண்டையக் காலம் தொட்டே அரசியல் சமூகப் பொருளாதார மொழியாகவும் தமிழ் இருந்து வந்திருக்கின்றன.
இந்தியாவில் பிராகிருதம், சமற்கிருதம் போன்ற மொழிகள் ஆளுமை செலுத்திய காலங்களில் கூட தமிழகத்தில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வந்தது. இலக்கண, இலக்கியப் படைப்புக்கள் தொட்டு கல்வெட்டுக்கள்,
கலைகள்,
சமயங்கள்,
வர்த்தகங்கள் என அனைத்தும் தமிழிலேயே இருந்து வந்தன.
வந்தோரும் வளர்த்த மொழி
கிமு மூன்றாம் நூற்றாண்டு தொட்டு வடக்கில் இருந்து வந்தச் சமண, பௌத்த, இந்துச் சனாதன மதங்கள் கூட முறையே தத்தமது மதங்களைத் தமிழிலேயே பரப்பினார்கள். சமணர்கள் ஒரு படி மேல் போய் பலவிதமான இலக்கியங்களையும், இலக்கணங்களையும்
காப்பியங்களையும் தமிழிலேயே உருவாக்கியதோடு ஒவ்வொரு ஊர்களிலும் பள்ளிகளை நிறுவி சமண மதத்தோடு தமிழ் மொழியையும் கற்றுக் கொடுத்தார்கள். தமிழ் இன்றளவும் வாழும் மொழியாக இருப்பதற்கு அவர்களின் பங்கு அதிகம் எனலாம்.
கி.பி.
ஏழாம் நூற்றாண்டளவில் எழுந்த பார்ப்பனிய மதம் சார்ந்த பக்தி எழுச்சிக் காலங்களிலேயே இந்து மதத்தைப் பரப்பியும் உள்ளார்கள்.
பல சமஸ்கிருத நூல்கள் தமிழகத்தில் எழுதப்பட்டு ஆளுமை செலுத்திய போதும் தமிழ்க் கல்வி தடை பெறவில்லை. தமிழ் மொழி வாழும் மொழியாகவே இருந்து வந்துள்ளன.
ஏழாம் நூற்றாண்டளவில் வேறு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு வடக்கில் இருந்து வந்தப் பல்லவர்கள் கூட அவர்களுடைய சமஸ்கிருத மொழியை வளர்த்த அதே சமயம் தமிழ் மொழிக்கான இடத்தை அபகரிக்கவில்லை. இந்த நிலையே பிற்கால சோழர்கள், விஜயநகரப் பேரரசு, நாயக்க மன்னர்கள் எனப் பிற மொழி ஆதிக்கம் செலுத்தியோர் அரசியலைக் கைக்குள் வைத்திருந்தும் மக்களின் மொழியானத் தமிழை அழிக்கவில்லை.
மாறாக,
தமிழ் வளர்ச்சி கண்டே வந்தன.
ஐரோப்பிய வருகையின் போதும் கிறித்தவ, இஸ்லாமிய மதமாற்றத்தின் போதும் கூடத் தமிழ் மொழி வளர்ச்சி கண்டது. இஸ்லாமியச் சமயத்தைத் தழுவிய தமிழ்க் குடிகளான முக்குவர், மீனவர், மரக்கலத்தார்கள் கூட தமது தாய்மொழியை விட்டுக்கொடுக்கவில்லை. இதே போல பல ஐரோப்பியப் பாதிரிமார்கள் தமிழகம் வந்து தமிழ் கற்று மதமாற்றப் பணிகளில் ஈடுபட்டனர். சிலர் தமிழ் மொழியின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியும் உள்ளனர்.
குறிப்பாக வீரமாமுனிவர் ஜி.யு.போப்,
கால்டுவெல் எனத் தமிழ் மொழியின் எழுத்துக்களைச் சீரமைத்தும், இலக்கியங்களை மொழிபெயர்த்தும் அச்சில் ஏற்றியும் அரும்பணியாற்றியுள்ளனர்.
தமிழகத்தில் குடியேறிய யூதர்கள் கூட ஆரம்பக் காலங்களில் தமிழ் மொழியைக் கற்று வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் அஞ்சுவண்ணத்தார் என்றும் அழைக்கப்பட்டனர்.
தமிழகம் இன்று பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளது சமூக, பொருளாதாரத்தில் பல சிறப்புக்களை நாம் பெற்றுள்ளோம் என்பதை மறுப்பதற்கில்லை. குறிப்பாக இலவசக் கல்வி, மதிய உணவுத்திட்டம்,
பெண்கள் முன்னேற்றம், இட ஒதுக்கீடுகள்,
பொருளாதார வளர்ச்சி எனப் பல சாதனைகளை நாம் பெற்றுள்ளோம்.
ஆங்கிலம் மட்டுமல்ல தாய் மொழிக் கல்வியும் மிக அவசியம் ஆகின்றது. அத்தோடு பொருளாதாரச் சந்தையில் நிலைத்து நிற்கவும் வேலை வாய்ப்புக்கள் போன்றவற்றைப் பெறவும் பல மொழிகளைப் பயில வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது.
இன்றையக் காலக்கட்டத்தில் இணையத் தளங்கள் தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பெரும் உந்து சக்தியாக இருந்து வருகின்றன. அதே போல பல இளைஞர்கள் தமிழ் மொழி மீது ஆர்வமுடையவர்களாகவும் தமிழ் மொழியை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல உழைத்துக் கொண்டிருப்பவர்களாகவும் உள்ளது சாதகமான ஒரு விடயமாகும்.
வரும்காலம் மிச்சம் வைத்துள்ளவை
தமிழ் மொழிச் சிதைவுக்குக் காரணமாக இருக்கும் தமிழ் ஊடகங்களை எவ்வாறு கட்டுப்படுத்தி வழிக்குக் கொண்டு வருவது என்பது குறித்தும் தமிழ் மொழிக்கு மிகப் பெரிய சவாலாக உருமாறி வரும் ஆங்கிலவழி தனியார் மற்றும் அரசு கல்வி நிலையங்களை எவ்வாறு மக்களின் பொருளாதார நலன் பாதிக்கப்படாமல் எதிர்கொள்ளப் போகின்றோம் என்பது குறித்தும் தனிக் கவனம் எடுத்துக் கொள்வது மிக முக்கியமானது.
ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதற்கு அந்த மொழி வழியாக கல்வி கற்பது மட்டும் உதவுவதில்லை. முதுநிலைப் பட்டப் படிப்பு வரைக் கூட ஆங்கில வழியில் படித்திருந்தாலும் எளிய ஆங்கில வாக்கியங்களைக் கூடப் பேச முடியாதவர்கள் பலர் உள்ளனர். ஆங்கிலத்தில் ஒருவர் சரளமாக உரையாட எளிய ஆங்கில வாக்கியங்களைப் படித்துப் புரிந்து கொள்ளத் தேவைப்படுவது தரமான ஆங்கில மொழிக்கல்வியே தவிர எல்லாப் பாடங்களையும் புரியாத மொழியில் பயின்று வரும் பேருக்கான ஆங்கில வழிக் கல்வி அல்ல.
தமிழக அரசும் தமிழ் மக்களும் தமிழ் மொழியைப் பொளாதார வளர்ச்சிக்கு உகந்த மொழியாக மாற்ற முனைய வேண்டும். அவ்வாறான சூழல் ஏற்பட்டால் மட்டுமே தமிழ் மொழி தழைத்தோங்க முடியும். தமிழ் மொழியின் முக்கியத்துவத்தையும் அதனைத் தமிழகத்தின் அரசியல், பொருளாதாரச் சாதக மொழியாக மாற்றவும் மிகப் பெரிய சவாலை எதிர் நோக்கியுள்ளோம். உலகின் தாய் மொழிக் கல்வியைப் பயின்று பொருளாதாரத்தில் வலிமை கொண்ட தேசங்களான பிரான்ஸ், ஜெர்மன்,
ஜப்பான்,
இங்கிலாந்து,
நோவே எனப் பல நாடுகளிடம் இருந்து நாம் பயில வேண்டிய விடயங்கள் நிறையவே உள்ளன. வெறும் தமிழ் பழமையான மொழி, செம்மொழி எனப் பிரச்சாரம் செய்வதை விட தமிழை அடுத்தத் தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பது எவ்வாறு என்பதையும்,
தமிழ் அரசியலில் தமிழுக்கான உரிமைக் குரலை ஒலிக்கச் செய்வது எவ்வாறு என்பதையும் தமிழைப் பெருளாதார லாபமுடைய மொழியாக மாற்றுவது எவ்வாறு என்பதையும் குறித்து நாம் சிந்தித்து ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்.
ஆங்கிலவழியில் படித்தால் அறிவாளியாகலாம்,
எங்கு போனாலும் வேலை கிடைக்கும் என்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால் தமிழகத்தில் இயங்கும் அரசு நிறுவனங்கள் பற்பல தொழில்கள் செய்யவும் வர்த்தகங்களில் ஈடுபடவும் தமிழே மிகப் பிரதானமானது.
இவற்றில் ஆங்கிலம் அவசியம் கூடக் கிடையாது.
நான் முழுக்க முழுக்கத் தமிழ்மொழி வழியிலேயே படித்து அரசு பள்ளிகளிலேயே படித்து உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறேன். அரசாங்க வேலைகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு உண்டு. எனவே உற்சாகமாகத் தாய்மொழியில் படிக்க வையுங்கள்.
ஆங்கிலத்தின்பின் ஓட வேண்டாம் என துணைவேந்தர் முனைவர் ம.திருமலை கூறுகின்றார். கணிதமேதை ராமானுஜம் விஞ்ஞானியும் முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாம் உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தலைமை நீதிபதி சதாசிவம் போன்றவர்கள் அரசுப்பள்ளியில் தமிழ் வழியில் படித்து புகழ் பெற்றவர்கள்.
எட்டுக் கோடி பேர் வாழும் தமிழகத்தின் நிலப்பரப்பையும் மக்கள் தொகையையும் ஒத்த ஜெர்மனில் எவ்வாறு டொய்ச்சு மொழிக் கல்வி பொருளாதார அரசியல் மொழியாக இயங்கி வருகின்றது என்பதைத் தமிழர்கள் உணர்ந்து அவர்களிடம் இருந்து பாடங்கள் கற்க வேண்டும். ஆனால் தமிழ் மொழியின் அழிவின் மீது ஏறிக் கொண்டு நமது அடையாளங்களை இழப்பது நமது முகத்தைச் சிதைத்து நமது முகவரியை அழித்துப் போவதற்குச் சமமாக இருக்கும் என்பதை மறக்கக் கூடாது.
மொழியில் உள்ள எழுத்துகள்
இன்றையத் தமிழில் உலகைக் கவர என்ன இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அறிவியலில் ஒற்றை மொழி ஆதிக்கம் உள்ள இன்றைய சூழ்நிலையில் தமிழில் வெளிவரும் அறிவியல் எழுத்துக்களும் உலகக் கவர்ச்சி இருக்காது; இருக்க முடியாது. ஆனால் பிற அறிவுத் துறைகளில் அது இருக்கலாம். இவற்றில் சுயமானச் சிந்தனைகளும், தமிழ் அனுபவத்தில் பிறக்கும் சிந்தனைகளுக்கு உலகை ஈர்க்கும் வாய்ப்பு உண்டு. பிரான்ஸைச் சேர்ந்த சார்த்தருடையது போல் புதிய தத்துவச் சிந்னைகள் தமிழில் தோன்றினால்,
தெரிதாவைப் போல் இலக்கியத்தையும் கலாச்சாரத்தையும் விளங்கிக் கொள்ளத் தமிழில் புதிய வழிமுறை ஏற்பட்டால், இத்தாலியைச் சேர்ந்த கிராம்சியின் பார்வையைப் போல் புது நோக்குள்ள அரசியல் தத்துவம் தமிழில் எழுந்தால், பிரேசிலைச் சேர்ந்தப் பாலோ பிரைரே சிந்தித்ததைப் போல் கீழிருந்து பார்க்கும் கல்விச் சிந்தனைகளைத் தமிழில் எழுதினால் உலகம் தமிழின் பக்கம் திரும்பிப் பார்க்கும். இப்படி இன்னும் இன்னும் எவ்வளவோ சொல்லலாம்.
நம் நாட்டிலேயே காந்தியின் அரசியல் போராட்டச் சிந்தனைகள் போன்றவைச் சுயமாகத் தமிழில் தோன்றுவது சில உதாரணங்கள். இத்தகைய கவன ஈர்ப்பு பிற மொழி பேசும் அறிவுஜீவிகளிடமே முதலில் தோன்றலாம். ஆங்கில மொழிபெயர்ப்பின் மூலமே அவர்கள் அதைப் பெறலாம்.
உலகத் தகுதி பெறும் மொழி
தமிழ்ச் சமூகம் இப்படிப்பட்ட சிந்தனையாளர்களை ஏன் படைக்க முடியவில்லை?
மேலே சொன்னது பேன்ற அறிவுத் துறைகளில் தமிழ் பேசும் புலமையாளர்கள் இருக்கிறார்கள்.
இவர்கள் ஆங்கிலத்தின்வழிக் கல்வி கற்றிருந்தாலும் முற்றும் கற்ற தங்கள் துறைச் சார்ந்த அறிவிலிருந்து புதிய சிந்தனைகளைத் தமிழில் தர அறிவுத்தடை இருக்க முடியாது. சுய சிந்தனைகளுக்குக் கலைச்சொல் தடையும் இருக்க முடியாது. மனத்தடையும் இருக்க முடியாது. நம்முடையக் கல்வி அமைப்பு ஆங்கிலத்தில் எழுதினாலே பதவி முன்னேற்றம், உலக அரங்குகளில் பங்கேற்பு என்று செயல்படுகிறது. தமிழில் புதிய சிந்தனைகளைத் தர இந்த நிலை மாற வேண்டும் என்று காத்திருக்கத் தேவை இல்லை. தருவதற்குச் சிலரே போதும். மேலே சொன்ன எடுத்துக்காட்டுகளில் சிந்தனையாளர்கள் அவரவர் மொழிகளில் சிலரே எத்தனையோ கோடித் தமிழரில் திருவள்ளுவர் ஒருவரே. தமிழ்ச் சமூகத்திலிருந்து ஆழச் சிந்திப்போர் சிலர் உருவானால் அவர்கள் தங்கள் சிந்தனைகளைத் தமிழில் எழுதினால் இது முடியும். தமிழ் உலகத் தகுதி பெற்ற மொழியாக முன்னேறும்.
பல துறைகளிலிருந்தும் வரும் புதிய அறிவுச் சிந்தனையால் மட்டுமல்ல சிறந்த இலக்கியப் படைப்பும் தமிழ் உலகக் கவனம் பெற உதவும். கொலம்பியாவின் காப்ரியல் மார்க்வெஸின் இலக்கிய எழுத்துகள் ஸ்பாதனிய மொழிப் படைப்பை உலகம் தேடச் செய்கின்றன.
இதைப் போன்றே துருக்கியைச் சேர்ந்த ஒரான் பாமுக் முதலானோரின் எழுத்துகள் அவர்களுடைய மொழிகளை மொழிப் பன்மை குறைந்துவரும் நிலையிலும் உலக அளவில் இடம்பெறச் செய்கின்றன. இதைச் செய்யத் தமிழ் இலக்கியப் படைப்புகளுக்கு நல்ல ஆங்கில மொழி பெயர்ப்பு வேண்டும். அதன் வழியே அவை மற்ற மொழிகளுக்குப் போய்ச்சேரும். உலகளாவிய ஆங்கில ஆதிக்கத்தின் ஒரு நன்மை இது.
இந்த வழிகளில் இன்றையத் தமிழ் உலகக் கவனம் பெற்ற உலகத் தகுதி பெறும்போதே தமிழை உலக மொழி என்று சொல்வதில் நியாயம் இருக்கும்.
இந்த நிலை வருவதற்கு அரசின் ஆதரவு அவசியம் இல்லை. இது தமிழர்கள் தாங்களாகவே செய்ய வேண்டிய ஒன்று. செய்ய முடிகிற ஒன்று. இதை, செய்ய முயலாமல் தங்கள் குறையை மற்றவர்மேல் வேறு மொழி மேலோ, வேறு சமூகத்தின் மேலோ சுமத்துவதைச் சொந்தக் குறையை மறைக்கும் செயலாகவே கொள்ள வேண்டும்.
பதிவுக்கு நன்றி..
பதிலளிநீக்குஅன்புடையீர்!,
இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
#தமிங்கிலம்தவிர்
#தமிழெழுதிநிமிர்
#வாழ்க #தமிழ்
இதுபற்றியான விரிவான தகவல்களுக்கு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
÷÷ கிஇக