திங்கள், 18 டிசம்பர், 2017

வளர்ச்சி நிலையில் தமிழ்ச்சொற்கள்



முனைவர் இரா.அனுசுயா
தமிழ்த்துறைத் தலைவர் (அரசுதவிப் பெறாப் பிரிவு)
சதக்கத்துல்லாஹ் அப்பாகல்லூரி, திருநெல்வேலி-11

                தமிழைத் தாயினும் மேலாகக் கண்ட பாரதிதாசனார்தமிழைப் பழித்தோனைத் தாய் தடுத்தாலும் விடேன்என்று பாடுகிறார்.“தாய் மொழிதான் மனிதனின் முகவரிசொல்லும் உயிர் மொழியில்லையென்றால் மனிதன் வெறும் சடலம்என்ற கொள்கை உடையவர் பாரதிதாசன். ஆகவேதான் அவரதுகவிதைகளில்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்என்றும்நல்லுயிர் உடம்பு செந்தமிழ் மூன்றும் நான் நான் நான்என்றும் பாடியுள்ளார். “இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர் என்றுரைக்கும் நிலை எய்திட்டால் துன்பங்கள் நீங்கும் சுகம் வரும் நெஞ்சினில் தூய்மையுண்டாகும், வீரம் வரும்என்றும் வேறுமொழி கட்டாயக் கல்வி ஆக்கப்படுதலைக் கடிகின்றார் கவிஞர். இன்றைய சூழலிலும் கவிஞர்களும் பாமரர்களும் தொலைத்தொடர்பு சாதனங்களும் தமிழை வளர்ப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

                உயர்தனிச் செம்மொழி என உலகத்தவர் போற்றும் தமிழ்மொழி தனது சொல்வளத்தை இழந்து வருகிறது. மொழிச் சிதைவு மிக வேகமாகத் திட்டமிட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தகவல் தொடர்புச் சாதனங்களும், நாளேடுகளும் இதில் முழுமூச்சுடன் முனைப்புக் காட்டி வருகின்றன என்று சிலர் கூறுவதுண்டு. ஆனால் மொழிச் சிதைவுகேடன்று, அதுமொழி வளர்ச்சி என்று மொழியிலார் கூறுகின்றனர். எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்,பாடியவன் பாட்டைக் கெடுத்தான் என்ற பழமொழிக்கு ஏற்பக் கற்றோர் மிகுதியும் தமிழ்க் கொலையை மகிழ்வுடன் செய்து வருகின்றனர். ஆனால் கல்வியறிவு இல்லாத பாரம மக்களோ மொழியைக் கண்ணாகக் காத்து வருகின்றனர். தமிழின் தொன்மைச் சொற்களை, இலக்கியச் சொற்களை இன்றும் பாதுகாத்து வழக்கில் பயன்படுத்தி வருகின்றனர். அந்தமொழிக் காவலர்கள் பாதுகாத்து வரும் சொற்களில் சிலவற்றை இங்கு நோக்கலாம்.

                கலாய்-கலாய்த்தல் கலாய் என்ற முதனிலையில் இருந்து கலாய்த்து, கலாய்க்குறின் என்ற வினையெச்சங்களும் கலாம் என்ற பெயர்ச்சொல்லும் தோன்றுகின்றன. கலாய்த்தல் என்பதற்குக் கோபித்தல், சண்டையிடுதல் என்பது பொருள், கலாம் என்பதற்கு மாறுபாடு என்று பொருள்.

                “வெய்தாய்க்
                கலாய்த் தொலைப் பருகுவார் போற்
                கன்னியர்துவன்றினாரே
                கண்ணிய வீணைவாட்போர் கலாமின்றிகாண்டு மென்றே
                ஞ்ஞ்தம்மின் கலாய்க்குறின்
                தடக்கை மீளிமை தாங்குமின்

                எனச் சீவகசிந்தாமணியில் மேற்கூறிய பொருளில் கலாய்த்து, கலாம். கலாய்க்குறின் என்பனவருகின்றன. இக்காலத்தில் சென்னைப் பகுதியில் கலாய்த்தல் என்பது மிகுதியாக வழங்குகிறது. நாற்றம் தனது நறுமணத்தை இழந்தது போல இச்சொல்லும் தன் பழைய பொருளை இழந்து கேலிசெய்தல், ஏமாற்றுதல் என்ற புதிய பொருள்களில் வழங்குகின்றது.

                இழி-இழித்தல் இழி-இழித்துப் பேசுதல், இழி -இறங்கு, இழிதல்- இறங்குதல், வீழ்தல், நக்கீரர் பழமுதிர் சோலை மலையில் இருந்து,அருவி இழிவதாகப் பாடுகிறார்.

                ‘இழுமென இழிதரும் அருவி
                என்பது திருமுருகாற்றுப்படை, இப்பழந்தமிழ்ச் சொல்லைக் கடலூர் மாவட்ட மக்கள் இன்றும் பாதுகாத்துவருகின்றனர்.

                பைய -               பைய என்பது மெல்ல என்ற பொருள் தரும் வினையெச்சம், ஞானசம்பந்தர் சமணர் தனக்கு வைத்த தீயைப் பைய-மெல்லச் சென்று பாண்டியனை அடையுமாறு ஆணையிட்டதாகச் சேக்கிழார் பாடுகிறார்.

                “சைவர் வாழ் மடத் தமணர்கள் இட்ட தீத் தழல் போய்ப்
                பையவே சென்று பாண்டியற் காகெனப்பணித்தார்
                எனப் பெரியபுராணத்தில் இடம் பெற்ற பைய என்ற சொல் பாண்டிய நாட்டுமக்களின் பேச்சுவழக்கில் இன்றும் உள்ளது.

காலத்தை வென்ற பெயர்ச் சொற்கள்.

                பழந்தமிழ்ப் பெயர்ச் சொற்களுள் சில காலத்தை வென்று இன்றும் நிலைத்துள்ளன. அவற்றை அழியாமல் பாமரமக்கள் பாதுகாத்து வருகின்றனர்.

                கழனி செய் - வயல்,என்பது பொதுவாக நெல் வயலைக் குறிக்கும், செய் என்பது பொதுநிலையில் நிலத்தைக் குறிக்கும். சிறப்புநிலையில் நன்செய் என்பது வயலையும், புன்செய் என்பது புன்மையான சிறப்பில்லாத செய் என்ற பொருளில் மேட்டுநிலத்தைக் குறிக்கும். நிலம், வயல் என்பன பொதுப்பெயர். கழனி, பழனம், செறு, செய் என்பன சிறப்புப் பெயர். இவற்றின் காரணத்தைப் பாவணர் இனிதே விளக்குவார்.

                ‘கழனி மாத்து விளைந்துகுதீம் பழம்எனக் குறுந்தொகையில் வரும் கழனி என்ற சொல்லை வடஆற்காடு, செங்கற்பட்டு, மாவட்டமக்கள் இன்றும் பாதுகாத்து வருகின்றனர். ‘ஒன்றே பலவோசெய்புக்கஎனச் சேனாவரையர் உரையில் வரும் செய் என்ற சொல்லைப் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் பேணிக் காக்கின்றனர்.

                பிறமொழிச் சொற்கள்-      வடசொற்கள் சங்ககாலத் தொட்டுத் தமிழ் மொழியில் கலந்தன. சான்றாகச் சங்க இலக்கியங்களில் யாமம் (குறுந்),கமலம் (பாஜீ),அமிழ்தம் (புறம்),அங்குசம் (திருமுருகாற்றுப்படை),அதி (திருக்குறள்) முதலியசொற்களைக் கூறலாம். முண்டாமொழிச் சொற்களானவழுதுணங்காய் (கத்தரிக்காய்), இளநீர் முதலியவற்றைக் கூறுவர். இந்தி மொழிச் சொற்கள் குமரகுருபரர் பாடல்களில் விரவிவரக் காணலாம். (எடு) பைசா, காதி முதலிய மராத்திச் சொற்கள் மிகுதியாகவே தமிழ்மொழியில் கலந்துள்ளன. அவை சேமியா, கிச்சடி, கசாயம், பட்டாணி, அபாண்டம், கில்லாடி, கலிங்கம், சத்து, சலவை முதலியன தெலுங்கு மொழியிலிருந்து பேரகராதியின்படி 325 சொற்கள் தமிழில் புகுத்துள்ளன என்கிறார். சக்திவேல் (சான்று: துரை, தீவட்டி, சளிப்பு, கடப்பாரை, கலப்படம், உருண்டை).

                கன்னடம் பழங்காலந்தொட்டுத் தமிழகத்தோடு தொடர்பு கொண்டுள்ளது. தமிழ்ப் பேரகராதி 38 கன்னடச் சொற்கள் தமிழில் உள்ளதாகக் கூறுகிறது. (சான்று அட்டிகை, சமாளித்தல், சொத்து, பட்டாக்கத்தி, குட்டு). திராவிடமொழிகளில் தமிழுக்கும் மலையாளத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. காலன், தளவாசம், வஞ்சி, வெள்ளம், அவியல், சக்கை முதலிய மலையாளமொழிச் சொற்களைத் தமிழில் காணலாம். கிருத்து பிறப்பதற்கு முன்பே தமிழர் இலங்கையோடு தொடர்பு கொண்டிருந்தனர். இலங்கையைத் தமிழர் ஆண்ட வரலாறும் உண்டு என்பதை முருங்கை, பில்லி, அந்தோ, ஈழம், சிங்களம் முதலிய சொற்களால் அறியலாம். இது போன்று சீனம், கிரேக்கம், ஷீப்ரு, மலாய், அரபி, பெர்சியன் மொழிச் சொற்களும் தமிழில் கலந்துள்ளன.

                மொழி வளர்வதும் வளர்ச்சியடைவதும், பரிணாம வளர்ச்சியாலும் கடன் வாங்கலாம் என்பர். வரலாற்று மொழியியல் பேரறிஞர்கள். அதுபோல்ஒருமொழியில் பிறமொழிச் சொற்கள் வரையறையின்றிக் கலக்குமானால் அதுபிட்ஜின் மொழி போன்று மாற்றம் பெறலாம்என்கிறார். .சக்திவேல். இன்றைய மொழியியலாளர்கள் செல்வாக்குப் படுத்தும் மொழியைக் கடன்தரும் மொழி என்றும் கடனைஏற்றுக் கொள்ளும் மொழியைக் கடன் பெறும் மொழி என்றும் கூறுவர். தமிழில் பிறமொழிச் சொற்கள் கலக்கும்போது பல விளைவுகள் ஏற்படுகின்றன. தமிழில் இல்லாத ஒலியுடைய பிறமொழிச் சொற்களைத் தமிழில் எப்படி எழுதுவது என்ற பிரச்சினை எழுகின்றது. மொழியியல் அறிஞர்கள் தமிழ் ஒலியமைப்புக் கேற்பப் பிறமொழிச் சொற்களை ஆக்கவேண்டும் என்பர். சிலர் பிறமொழிச் சொற்களை ஒலிபெயர்ப்புச் செய்யவேண்டும் என்பர். சிலர் பிறமொழிச் சொற்கள் ஒருமொழியில் அமையும் போது புதுப்பொருள் பெறுவதும் உண்டு என்பர். “ஒருமொழி மற்றொரு மொழியோடு தொடர்பு கொள்ளும்போது, ஒரு மொழியிலுள்ள சொற்கள் மற்றொரு மொழியில் கலத்தல் இயல்பாகும். கடன் வாங்கப்பட்ட சொற்கள் இல்லாத மொழியே பெரும்பாலும் இல்லை. பிறநாட்டுத் தொடர்பு, மொழித் தொடர்புக்கு வழி கோலுகிறதுஎன்கிறார்ஆட்டோயெஸ்பர்சன். எவ்வளவுதான் பிறமொழி ஆதிக்கங்களும் பண்பாட்டுக் கலப்பும் ஏற்பட்டாலும் தமிழ் மொழியின் சிறப்பும், வலிமையும் மதிப்பும் என்றும் தாழ்ந்து போகாது.

                தமிழ் மக்களும் மொழியும் சிறக்கப் பத்தாயிரம் கவிதை பாடாமல் போவேனே என்று தமிழ் மீது ஆணையிடுகிறார் ஒரு கவிஞர். அவர் தமிழ் மொழியை

                “தமிழென் அன்னை! தமிழென் தந்தை!
                தமிழெந்தன் உடன் பிறப்புஞ்
                ..........................................................
                தமிழென் சுற்றம்என்றும்,
                “உன்னை எடுத்தெறி தமிழா!    
                                ஓதிய மரம்போல் நின்றனை பேடி!     
                அன்னை துடித்திடல் அழகா!
                                அவள் படுந்துயர் எத்தனை கோடி!
                தன்னை மறந்தொரு வாழ்வா!

                                தமிழ் மண் அன்றோ நம்முயிர் நாடி?”

என்றும் பாடுகிறார்கள்.
                இனிவரும் காலத்தில் இதுபோன்ற உணர்ச்சி மிகுபடைப்புகளே தமிழ் மொழியையும் இனத்தையும் பண்பாட்டையும் வரலாற்றையும் மீட்டு உருவாக்கம் செய்யும் என்பதில் ஐயமில்லை. கவிஞர்கள் அப்பணியைச் செவ்வனே செய்து வருகின்றனர்.

                பாமரமக்கள் மொழிச்சிதைப்பில் ஈடுபடவில்லை. பண்டைய மரபையே பின்பற்றுகின்றனர். அவர்கள் பண்டைத் தமிழ்ச் சொற்களின் பாதுகாவலராக உள்ளனர். அவர்களால் சொல்வளம் பாதுகாக்கப்படுகிறது. புதுச்சொல்லும் உருவாக்கப்படுகிறது. பிறமொழிக் கலப்பு அதாகவே உள்ளது. அவர்களைப் பின்பற்றிக் கற்றோரும் மரபில் காலூன்றிப் புதுமைக்குத் தாவினால் தமிழின் சொல்வளம் பாதுகாக்கப்படும்.

                தமிழ் செம்மொழியாகஅறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஒவ்வொருவரும் பல்வேறு சொற்களுக்கும்,அறிவியல் சொற்களுக்கும்,ஆட்சிச் சொற்களுக்கும் உற்ற தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல் வேண்டும். மொழிபெயர்ப்பு நூல்கள் பெருகவேண்டும். இலக்கியம் மட்டுமின்றி மருத்துவத்துறை, தொழில்துறை, வேளாண்துறை, சட்டத்துறை, ஆட்சித்துறைகளில் ஏராளமான சொற்கள் தமிழில் தேவைப்படுகின்றன. இதற்குத் தமிழாய்வு மன்றங்கள் முயற்சி செய்யவேண்டும். உதாரணமாகசார்ஜர்என்பதற்குமின்னேற்றிஎன்றும், டீ-காபி என்பனவற்றைத் தேநீர்குளம்பி எனக் கூறுமளவிற்குத் தமிழ்ச் சொற்கள் பரவலாக்கப்படவேண்டும். ஒருமொழியானது ஒருவர் முயற்சியால் குறுகிய காலத்தில் பூத்து மலர்வதன்று. பலராலும் முயன்று, பயின்று பல காலமாக வளர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். புதியசொற்கள் புதுப்பொலிவுடன் தோன்றிவளரும் தமிழும் வளர் தமிழாகும் என்பது இக்கட்டுரைஆய்வின் முடிவாகும்.

துணை நூல்கள்
1) ஆய்வுக் கதிர் -தமிழாய்வு: கடந்த காலமும் வருங்காலமும் சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்மொழித்துறை
2) பாரதிமுதல் கனிமொழி வரை- முனைவர்.தே.ஞானசேகரன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக