அ.மு.அயூப்கான்
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை
சதக்கத்துல்லாஹ்
அப்பா கல்லூரி
திருநெல்வேலி
முன்னுரை
பரந்து பட்ட புனைகதை இலக்கிய வெளியில் இசுலாமியப் பங்களிப்புகளைக் கீரனூர் ஜாகிர்ராஜா,
எஸ்.அர்ஷியா,
களந்தை பீர்முகம்மது, தோப்பில் முகம்மது மீரான், மீரான் மைதீன் போன்றோர் தொடர்ந்து செய்து கொண்டு வருகின்றனர். இவர்களின் நவீனப் புனைவு ஆக்கத்தில் கீரனூர் ஜாகிர்ராஜா படைப்பு வெளியை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
இசுலாமியச் சமூக அமைப்பு
சமூகம் ஜாதி, மதங்களால் பிணைக்கப்பட்ட பெரும் திரளான மக்கள் கொண்ட களம். இந்தக்களம் பல்வேறு வகையிலான வாழ்வியல் அமைப்புகளுடன் நெறிப்பட்டு நிற்கின்றது. இந்தச் சமூகம் சாதிய அடையாளங்களைத் தாண்டி மதங்களெனும் அடையாளங்களுடனே உலக மக்களிடம் வெளிப்பட்டு விளங்குகின்றது. உலக மக்களை இந்து என்றும் முஸ்லிம் என்றும் கிறித்தவன் என்றும் பௌத்தன் என்றும் புலப்படுத்துகிற மரபு இன்றுமுள்ளது.
மனித சமூகத்திற்கானச் சமத்துவத்தை வலியுறுத்தியதில், உலகிலுள்ள எந்தச் சமயத்தை விடவும் இசுலாமியச் சமூகத்தை முன் நிறுத்த முடியும். இந்த இசுலாமியச் சமயத்தைப் பின்பற்றுபவர்கள் இசுலாமியர்கள் ஆவர். உலக மதங்களில் முக்கிய மதமாக விளங்குவதுடன் சமய நெறி ஒழுக்கங்களுடன் வாழ்வியலைத் தகவமைத்துக் கொண்டும் வாழ்கின்றது. அரபு மண்ணிலிருந்து உலக நாடுகளுக்குள் பரவி நிற்கும் இசுலாம், கடவுள் ஒருவரே அவரே அல்லா, நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் கடைசி இறைத்தூதர்,
திருக்குர்ஆன் புனித நூல் வாழ்க்கை முறைகளைத் தொகுத்து வாழும் வழிமுறையாக வழங்கி இருக்கும் சமயமாக விளங்குகின்றது. ஒவ்வொரு இசுலாமியரும் கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கிய கடமையான,
“இசுலாத்தில் வலியுறுத்தப் பெறும் நம்பிக்கைகளை ஏற்றுக் கொண்டு ஒரு மனிதன் உண்மை முஸ்லிமாகத் திகழும் போது அவன் பின்பற்ற வேண்டிய கடமைகளாக ஐந்து கருத்துக்களைக் கூறுகிறது.”
என்கிறது.
இதனை வாழ்வியல் முறையாக ஒவ்வொரு இசுலாமியர்களும் கடைப்பிடித்து வாழ்கின்றனர்.
இந்த ஐந்து கடமைகளான கலிமா, ஐந்து நேரத் தொழுகை, நோன்பு, ஜக்காத் என்று சொல்லப்படும் ஈகை, ஹஜ்ஜு என்று சொல்லப்படும் புனிதப்பயணம் ஒவ்வொரு இசுலாமியனும் செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறது.
இசுலாமியச் சமூகவெளி
இசுலாமியச் சமூகம் பிற சமூகத்தினரை விட ஒழுக்கங்களாலும் வாழ்வியல்களாலும் சமயப்பக்தியினாலும் கட்டுப்பாட்டுடன் கட்டமைக்கப்பட்ட சமூகமாகும்.
இச்சமூகத்தை வெளியே உள்ளவர்கள் சமநிலை நோக்கோடு எண்ணக்கூடிய கருத்து நிலவுகின்ற சூழ்நிலைக் காணப்படுகிறது. இந்த எண்ணத்தைக் கட்டுடைப்பு செய்தவர்களில் ஜாகிர் ராஜா, அன்வர் பாலசிங்கம் ஆகியோர் முக்கியப் பங்களிப்பாற்றியுள்ளார்.
இதனை,
“இஸ்லாம் சமநிலைச் சமுதாயம் என்றும், இசுலாத்தில் மதம் மாறினால் ஜாதி, ஜாதியம்,
தீண்டாமை ஒழிந்துவிடும் என்ற அபத்தவாதங்களைத் தவிடு பொடியாக்குகிற விதம் மத மாற்றத்தினால் இஸ்லாமியரான அன்வர் பாலசிங்கம் தீண்டாமை எல்லா விதத்திலும் தொடருவதாக இருக்கிறதே ஒழிய மதமாற்றத்தால் பெரிய விமோசனம் ஒன்றுமில்லை என்பதை அழுத்தமாகத் தமது நாவல் மூலமாகப் பதிவு செய்துள்ளார்”
என்கிற முஜீப்ரஹ்மானின் விமர்சனக்குரல் ஓங்கி ஒலிக்கிறது.
மேலும்,
“கருப்பாயி என்கிற நூர்ஜஹான்”
புதினத்திற்கு வந்த விமர்சன உரையில் தலித்தாக இருந்தவர்கள் சமூக மேன்மையாக்கம் பெற மதம் மாறிய பின், இசுலாத்திற்குள்ளும் சாதிய அடுக்கமைப்பு இருப்பதாக உள்ளதைப் பதிவு செய்கிறது. இதற்கு இயைபு ஏற்படுத்தும் வகையில் ஜாகிர்ராஜாவின் புதினங்கள் இசுலாமியச் சமூகத்துக்குள் இருக்கும் உயர்வு தாழ்வு அடிப்படையிலான ஏற்றத் தாழ்வையும் படம் பிடித்துக் காட்டுகிறது.
இசுலாமியச் சமூகத்துக்குள் சாதிய இனக்குழு கூட்டங்கள் உள்ளதையும் மதமாற்றத்தை ஏற்றுக் கொள்ளுதலையும் பொருளாதார நிலையில் வசதி மிக்க இசுலாமியர், வசதி குறைந்த இசுலாமியர்களை நசுக்கும் நிலைகளையும் பெண்களைப் பாலியல் முறைகளுக்கு ஆட்படுத்துவதையும் சுட்டிக் காட்டுகிறார். இசுலாமியச் சமய நிறுவன அமைப்பின் அதிகாரத் தன்மை, தர்கா சார்ந்த வழிபாட்டு முறை, பழக்க வழக்கங்கள் போன்றவற்றுள் இசுலாமியச் சமூகம் அடங்கி இருப்பதையும் வெளிப்படுத்துகிறார்.
இசுலாமியச் சமூகப் பின்புலத்தோடு தனது படைப்பிலக்கியத்தை வெளிப்படுத்தும் ஜாகிர்ராஜா அச்சமூகத்தின் வாழ்வியல் பதிவாக இது அமைகின்றது. சமயம் சார்ந்து இச்சமூகம் விளங்குவதையும் அதிலிருந்து முரண்பாடுகளை விளக்கி இருப்பதையும் புனைகதை வழியே அறியலாம். இதனை,
“உருவ வழிபாடுகளை வன்மையாகப் புறக்கணிக்கின்ற இஸ்லாம் சமூகத்தில் தேவை கருதி ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளத் தயங்கிய ஆச்சார புருஷர்களை வியந்து நோக்கியுள்ளேன்.
வீட்டிலோ நல்ல ஓவியங்களைச் சுவரில் மாட்டி வைத்து ரசிக்கவும் தடை இருந்தது. விரும்பி வாங்கிய சட்டைத்துணியில் சிறு பூனை உருவம் ஒன்று இருந்ததற்காகத் தண்டிக்கப்பட்டு சட்டையைக் கடையில் தந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய கசப்பான நாட்களெல்லாம் உண்டு” (க.லெ., ப.3) என்ற வாழ்வியல் பதிவுடன் அவர் பார்த்த இசுலாமியச் சமூகமே தனது கதைகளில் பின்புலமாக நின்று ஒலிக்கின்றது எனலாம்.
இசுலாமியச் சமூக அடையாளங்கள் புனைகதை வழியே
ஜாகிர்ராஜாவைப் பொறுத்தவரைத் தான் பிறந்து வளர்ந்த இசுலாமியச் சமூகத்தையே கைப்பொருளாக எடுத்துக் கொண்டு தனது படைப்பு வெளியைச் சித்தரிக்கிறார். இசுலாமியச் சமூகம் என்பது,
“அது ஒரு இறுக்கமான வாழ்க்கை முறையைக் கொண்ட சமூகம் என்று அடையாளப்படுத்துவர்”
என்பார்.
இதைப்போல,
“ஒரு கால கட்டம் வரைத் தொப்பி, தாடி,
கைலி,
பிரியாணி இவற்றைத் தவிர இஸ்லாம் குறித்த எந்தக் தகவலும் இங்கே மாற்று மத நண்பர்களுக்குத் தெரியாது” என்ற அழுத்தமான பதிலும் முன்வைக்கப்படுகிறது.
இவை தாண்டி இன்றைய இசுலாமியப் படைப்பாளிகளான தோப்பில் முகம்மது மீரான், மீரான் மைதீன், முஸிப் ரஹ்மான், அன்வர் பாலசிங்கம்,
கீரனூர் ஜாகிர்ராஜா, ஹெச்.ஜி. ரசூல், போன்றோர் துணிந்து தன் சமூகக் கட்டமைப்பைக் கூறுகின்றனர்.
கழனியூரான்
(அப்துல்காதர்),
மு.மேத்தா,
அப்துல் ரகுமான் மனுசியபுத்திரன் இன்னும் பலர் தான் சார்ந்த சமூகத்தை விமர்சனக் கண்ணோட்டத்துடன் புனைகதையின் மூலம் வெளிப்படுத்த முடியவில்லை.
இசுலாமியச் சமூகம் என்பது சமயம் சார்ந்த, சமய மேலாண்மையுடன் வழி நடத்தப்படும் சமூகமாக உள்ளது. பொழுது போக்குவது,
திரைப்படம் காண்பது, ஓவியம் வரைவது தடை செய்யப்பட்டுள்ளது.
இசுலாமியச் சமூக வாழ்வியலில் கடமைகளின் ஒன்றான ஐந்து வேளைத் தொழுகையை ஒவ்வொரு இசுலாமியனும் பின்பற்ற வேண்டும். இதை ஜாகிர் ராஜா புனைகதைக்குள் பல இடங்களில் எடுத்துரைக்கிறார். ஐந்து வேளைத் தொழுகையான பஜர் தொழுகை, லுஹர் தொழுகை, அஸர் தொழுகை, மஃரிப் தொழுகை, இஷா தொழுகை ஆகிய தொழுகைகள் ஐந்து வேளை என்று குறிப்பிட்டுக்
காட்டப்பட்டுள்ளது. மேலும் அல்ஹம்துலில்லா,
இன்சா அல்லாஹ், சொல்வதும் துஆ ஓதுவது இசுலாமியகளின் செயல்பாடுகள் ஆகும். இது போன்ற இசுலாமிய வாழ்வியலோடு இணைந்த அரபிய அல்லது இசுலாமியச் சொல்லாடல்கள் ஜாகிர் ராஜாவிடம் இடம் பெற்றுள்ளது.
இசுலாமியச் சமூகத்தில் இறைநாட்டம் என்பது மிக முக்கியமானது. இதைப் புனைகதைகளில் வெளிப்படுத்துவதோடு, மதமெனும் முகமூடி போட்டுக் கொண்டு ஏமாற்றுபவர்களைச் சுட்டிக் காட்டத் தயங்கவில்லை. ‘கருத்தலெப்பை’யில் ராதிம்மா என்று அழைக்கப்படும் அப்பாவைப் பெற்றெடுத்த அம்மா சமய நம்பிக்கையுடன் வாழும் பாத்திர அமைப்பைக் காணலாம். இதனை,
“வந்து நாயகம் ரசூலுல்லா இருக்காங்கல்ல’
‘ஸல்லல்லாஹு அலா முகம்மது’
‘ஸல்லல்லாஹு அலை ஹிவஸல்லம்’
‘ம்&சொல்லு நாயகம் ரசூலுல்லா இருக்காங்க’
.................
‘குர்ஆனில் முஜம்மில் சூரான்னு இருக்குது அதவந்து தினம் இஷா தொழுகைக்கு அப்புறம் தொடர்ந்து ஓதி வரணும். அப்புறம் நாயகத்தப் புகழ்ந்து ஓதுற தாஜுல் ஸலவாத்து அதையும் ஓதனும்” (க.லெ.,ப.25)
என்கிற வரிகளில் மத அடையாளத்தைக் காணலாம். லெப்பைகள் எனும் சமூகம் ஓதி கற்றுக் கொடுப்பவர்கள் என்ற அடையாளத்தையும் ‘கருத்தலெப்பை’ புதினத்தில் காணலாம். மேலும் லெப்பைகள் சமூகத்தைக் குறிப்பிடும் போது,
“குரான் ஓதிக் குடுக்கற லெப்பைங்க அதுல கெடைக்கிறத வச்சுத்தாம் பொழப்பு நடத்திக்கறாங்க”
(மீ.கா.தெ.,
ப.49)
என்கிறார் ஜாகிர்ராஜா.
முடிவுரை
இசுலாமியச் சமூகத்தில் பிறந்த கீரனூர் ஜாகிர்ராஜாவின் புனைகதை இலக்கியங்கள் அவர் சார்ந்த இசுலாமிய வெளியை எந்த சமயத்தை விடவும் இசுலாமியச் சமூகத்தை முன்னிறுத்த முடியும். உலக மதங்களில் முக்கிய மதமாகவும் விளங்குவதுடன் சமய நெறி ஒழுக்கங்களுடன் வாழ்வியலைத் தகவமைத்துக் கொண்டும் சிறந்த வாழ்வைப் பெற முடியும் என்று கூறுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக