திங்கள், 18 டிசம்பர், 2017

உலகளாவிய தமிழ்


முனைவர் . மாலிக்
உதவிப் பேராசிரியர் (சுயநிதிப்பிரிவு)
தமிழ்த்துறை
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி.

                “கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி எனத் தமிழினத்தின் தொன்மையைப் புறப்பொருள் வெண் பாமாலை கூறும் அதுமட்டுமின்றி திங்களோடும் சூரியனோடும் பிறந்தது தமிழ் எனவும் போற்றுவர்.

                தமிழின் தொன்மையை எடுத்துரைக்கும் நூல் தொல்காப்பியம். தொல்காப்பியம் நமக்குக் கிடைத்த முதல் இலக்கணநூலாகும். தொல்காப்பியம் 3500 ஆண்டுகளுக்கு முற்பட்டதெனின் அதற்கு பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இலக்கிய வளம் பெற்று விளங்கியது என்பதுஎன்மனார் புலவர்என்று கூற்றுக்களால் விளங்கும். உலகில் முதன்முதலில் தோன்றிய மனிதன் தமிழனே என்பது மானிடவியல் ஆராய்ச்சியாளர்களின் கருத்து. குமரிக்கண்டத்தில் தோன்றிய தமிழினம் உலகமெலாம் பரவித் தன்புகழை நிலை நாட்டி வருகிறது.

                உலகில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமை பெற்ற நூற்றுத் தொண்ணூற்று இரண்டு நாடுகளும் நற்பத்து மூன்று ஆட்சிப் புலங்களும் ஆக இருநூற்று முப்பதைந்து  நாடுகள் உள்ளன. அவற்றில் ஏறத்தாழ நூற்றைம்பத்து நான்கு நாடுகளில் தமிழனம் பரவியுள்ளது.

                பத்துத் தமிழர்கள் முதல் ஏழுலட்சத்து ஐம்பதினாயிரம் தமிழர்கள் வரை அந்நாடுகளில் வாழ்கிறார்கள். அவற்றுள் இருபது நாடுகளில் இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர் வாழ்கின்றனர்.

                பல நாடுகளுக்கும் வாழச் சென்ற தமிழர்கள் தம் வருவாயை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல் தமிழை வளர்க்கும் செயல்களில் ஈடுபட்டு வருவது அவர்தம் மொழிப்பற்றைக் காட்டுகிறது. இதற்கு நல்ல உதாரணம் சிங்கப்பூர், மலேசியா, மொரிசியசு, பிஜித்தீவுகள், தென்அமெரிக்கா, கனடா, பிரிட்டன், துபாய் மற்றும் பல நாடுகளில் தமிழ் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இருபத்து நான்கு மணி நேரமும் ஊடகங்களில் (வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளம்) தமழ் நிகழ்ச்சிகளைக் கேட்கவும் காணவும் ஆங்காங்கே வாழும் தமிழர்கள் அந்தந்த நாட்டு அரசுகளிடம் அனுமதி பெற்றுள்ளார்கள். இந்த ஊடகங்கள் தமிழர்களை இணைக்கும் பாலங்களாகத் திகழ்கின்றன. அவை மொழியை மறவாமல் காக்கவும் மேம்படச் செய்யவும் பேருதவி புரிகின்றன.

                பாரதியார் தொடங்கி இன்று வரையுள்ள தமிழ் அறிஞர்கள் எழுதிய இக்கால இலக்கியம் மிகப் பெரியப் பரப்பளவு கொண்டதாகத் திகழ்கிறது. இன்றைய இளையர்களின் இதயங்கள் இணையத்தளத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. “இனி ஒரு விதி செய்வோம்எல்லாம் இணைய மயம் ஆக்குவோம் எனும் காலத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம். இன்டர்நெட் என்கிற இணையம் உலகத்தைச் சுருக்கி நம்மை இணைத்து வருகிறது. சுருக்கி நம்மை இணைத்து வருகிறது. சங்கத்தமிழை உலகத் தமிழாக்கிறது. உலகின் எந்த மூலையில் இருப்பவர்களையும் மின்னஞ்சல் மூலம் தமிழ் இணைக்கிறது. இணையம் தமிழக்குப் புதியதோர் அறிவியல் கதவைத் திறந்திருக்கிறது.

                இணையத்தில் ஆங்கிலத்தை அடுத்து மிகுதியாகப் பயன்படுத்தப்படும் மொழி தமிழ் மொழி என்று ஆய்வாளர்கள் கூறும் கருத்து நாம் பெருமைப்படுவதற்குரியது.

                இன்று வெளிநாட்டில் இணையத்தின் மூலமாகத் தமிழைக் கற்றுக் கொடுக்கும் முயற்சி நடைபெறுகிறது. தமிழர்கள் பல்வேறு காரணங்களுக்காகப் புலம் பெயர்ந்து அயல்நாடுகளில் வாழ்ந்து வந்தாலும், தம் தாயகத்தை மறவாமல் இருக்கிறார்கள் தாயகத்திலுள்ள வளங்களைத் தாம் வாழும் இடங்களுக்குக் கொண்டு செல்கிறார்கள்.

                இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் ஆட்சிமொழியாகத் தமிழ் திகழ்கிறது. தமிழைப் பாடமொழியாகப் பயிலவும், தமிழியல் ஆய்வுகளை மேற்கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்நாடுகளில் இசை, நாட்டியம், நாடகம் முதலியனவற்றைக் கற்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அச்சு, ஒலி, ஒளி ஊடகங்களை உலகெங்கும் தமிழர்கள் நடத்தி வருகின்றனர்.

                இங்கு தமது திறமையை நிலைநாட்டி, உயர்பதவிகள் பலவற்றில் பணியாற்றி வருகின்றனர் தமிழர்கள் இவர்கள் தொழில் துறையிலும், கல்வித் துறையிலும், கணினித் துறையிலும், காலூன்றிச் சிறப்புடன் பணியாற்றி வருகின்றார்கள். உலகம் முழுவதும் இன்று கல்வித்திறனையும், அறிவாற்றலையும், ஆளுமைத் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் பணியாற்றுகின்றனர். தாம் உயர்ந்தது மட்டுமல்லாமல் தம் தாய் நாட்டுக்கும், மொழிக்கும் பெருமையும் வளமும் சேர்க்கின்றனர்.

                அறிவியல் நிலையில் உற்று நோக்கும் போது இன்று தமிழ் மொழியின் வளர்ச்சி அளவிற்கரியது. இன்று பல்வேறு இலக்கிய மன்றங்களும், இதழ்களும் தமிழின் பெருமையை நன்கு எடுத்துரைப்பதாகவே உள்ளது. தொன்மையும் பழமையும் மிக்கமொழி, கால்டுவெல் போன்ற அறிஞர்களால் உலகறியப்பட்ட மொழி தொன்மை பேசி நின்றுவிடாது எனபாரதிகூறியது போன்றுஉலகத்தோர் வியக்க உயர வேண்டும் அதனைச் செய்ய இன்றைய அறிவு மிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும். அதற்குரிய ஆக்கத்தையும் ஊக்கத்தையும் ஆசிரியப் பெருமக்கள் மாணவர்களிடம் கொண்டுவர வேண்டும்.

                தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவற்கொரு குணமுண்டு என்பதற்கிணங்க, உலகெங்கும் வாழும் தமிழர்கள் தங்களது பண்பாட்டு அடையாளங்களை மறவாமலும் மாற்றிக் கொள்ளாமலும் வாழ்கின்றார்கள் மேலும் அவர்கள், தமிழக்கும் தமிழினத்துக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்து வருகிறார்கள். கணியன் பூங்குன்றனாரின்யாதும் ஊரே யாவரும் கேளிர்என்னும் வாக்கை மெய்ப்பிக்கும் வண்ணம் இன்றும், என்னென்றும் தமிழ் இளமை மாறாமல் உலகெங்கும் ஆட்சி மொழியாக வாழும், என்பதில் ஐயம் இல்லை எனலாம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக