முனைவர் சு.
அந்தோணி செல்வகுமார்
இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர்
தமிழ்த்துறை
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி
பிள்ளையன்மனை.
ஆறறிவு பெற்றவன் மனிதன். தான் பெற்ற அறிவாற்றலால் பரந்து விரிந்து சிறகடித்துச் சிந்தனை வானில் பறப்பதற்கு உற்ற துணையாக அமைவது தாய்மொழியாகிய தமிழ்மொழியாம் முத்தமிழ். இன்றைய நவீன அறிவியல், பொறியியல்,
மருத்துவம் போன்ற அனைத்து துறைப்பாடங்களை தமிழில் கற்க முடியும்.
“வானமலிந்த தனைத்தும் அளந்திடும்
வான்மொழி வாழியவே”
என்ற பாரதியின் பாடலுக்கு பழங்காலந்தொட்டு அந்தந்த காலத்திற் கேற்றவாறு தன்னை வலுப்படுத்திக் கொண்டுள்ளது. நம் மொழி அமிழ்தினும் இனிய தமிழாகும். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தமொழி நம் தமிழ். அதனால் தான் பாரதி
‘என்று பிறந்தவள் என்றுணரா
இயல்பினளாம் எங்கள் தாய்’ என்று பாராட்டுகிறார்.
தமிழ்மொழி
விதையின்றி செடி தோன்றா. மொழியின்றி உள்ள உணர்வுகள் வெளிப்படா. மலரின்றி மாலை தொடுக்க இயலா. தமிழின்றி இலக்கியச் சுவை காண முடியா. ஆம் சுவர் இருந்தால் தானே சித்திரம் வரையமுடியும். காலத்தால் அழியா வளம் நிறைத் தமிழ்மொழி தொன்மை, பழமை,
பெருமை வாய்ந்ததாகும்.
தமிழ்த்தூதுவர் தனிநாயகம் அடிகள் தமிழ்மொழி பற்றிக் கூறுகையில், வணிகத்தின் மொழி ஆங்கிலம், தூதின்மொழி பிரஞ்சு, காதலின் மொழி இத்தாலி, தத்துவத்தின் மொழி செருமானியம் உலகிலேயே பக்தியின் மொழி தமிழ் என்று குறிப்பிடுகிறார். முத்தமிழின் தித்திக்கும் இன்சுவையை தெவிட்டாத நற்சுவையைச் சுவைத்த பாரதியார், தன் உயிரில் உணர்வில் கலந்து நெஞ்சில் நிறைந்து நிற்கும் தமிழைத் தானிந்த பிறமொழிகள் பலவற்றோடு ஒப்பு நோக்கி வியந்து பாராட்டுகிறார்.
காலத்தால் அழியாத கன்னித்தமிழின் நாதம் எட்டுத்திக்கும் ஒலிக்கவேண்டும் என்று தணியாத தாகம் கொண்டிருந்த புலவர் பெருமக்களின் படைப்புகளில் மயங்கித் தமிழின் பெருமையை உலகெங்கும் பரவச் செய்யத்தானும் நற்பணியாற்ற எண்ணி, இனிய சந்தத்தில் எண்ணற்ற கவிதைகளை வடித்தவர் பாரதி. பாரதியின் கவிதையிலே ஹெல்லியின் கற்பனை வேர்ட்ஸ் வொர்த்தின் கடவுள் கொள்கை, பிரௌனிங்கின் வாழ்வு நோக்கு, டெனிசனின் கவிதை எளிமை காண முடிகிறது எனப் பாரதி பாடல்களை சுவைத்த இலக்கியத் திறனாய்வாளர் குறிப்பிட்டார்.
தேமதுரத் தமிழோசை உலகமெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் என்று பாடினார் பாரதி.
நேற்றும் இன்றும்
இன்று வரை நம்மொழி பைந்தமிழாய் இருப்பதற்குக்காரணம் சங்க நூற்களாம் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, மேல்கணக்கு, காப்பியங்கள்,
காவியங்கள்,
புராணங்கள்,
சிற்றிலக்கியற்கள்,
மரபுக்கவிதை மட்டுமல்ல புதுக்கவிதை,
புதினம்,
சிறுகதை,
நாடகம் போன்ற இலக்கியம் மட்டுமல்ல இலக்கணங்களும் தோன்றி தமிழுக்கு மட்டுமின்றி தமிழ் அன்னைக்கு அணிகலனாய் அமையப் பெற்றுள்ளது. துறைதோறும் எழுச்சியோடு அரிமா நடை போடுவதைக் கண்கூடாகக் காணமுடிகிறது குருகுலக் கல்வி தொட்டு, பள்ளிக் கல்வி, மேல்நிலைக்கல்வி, உயர்கல்வி என அனைத்து துறைகளிலும் வளர்ந்துள்ளனமையைக் காணமுடிகிறது. ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்னும் வாசகம் வெறும் சொற்களாக மட்டுமல்லாது அதனைச் செயல்படுத்த நாம் அனைவரும் முனைப்போடு செயலாற்ற வேண்டும்.
“செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்
எளிமையினால் ஒரு தமிழின் படிப்பில்லை யென்றால்
இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்”
எனும் பாவேந்தனின் பாடல் மூலம் தரமான கல்வியை தமிழால் மட்டுமே பெறமுடியும்.
ஒரு மொழியின் வளர்ச்சிக்கு மொழியுணர்வும், மொழியறிவும் இரு கண்களாக அமையும். மொழியுணர்வு என்பது சமயம், சமுதாயம் நாட்டுப்பற்று என்னும் அடிப்படையில் தோன்றுவது என்கிறார் பொற்கோ,
“யாமறிந்த மொழியினிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்” என்று தெளிவுப்படுத்துகிறார். பாரதி
பாரதிதாசனோ,
“தமிழுக்கு அமுதென்று பேர் - அதன்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்றார்.
தமிழர்களின் உயிருக்கு நிகராக விளங்கும் பைந்தமிழ். இப்படிப்பட்ட தமிழுக்கு யாராலும் எந்த ஊறும் ஏற்படாது. ஏற்படுத்தமுடியாது.
என்றும்
ஓலைச்சுவடிகளிலும் செப்பேடுகளிலும் எழுதி வளர்க்கப்பட்ட நம் மொழி அச்சில் ஏறியதும் மாபெரும் வளர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று கணிணியில் ஏற்றம் பெற்று இமாலய வளர்ச்சிக்கு அடிகோலியது. தகவல் தொடர்பின் ஒரு நீட்சியாகத்தான் கணினியும் இணையமும் நமக்கு அறிமுகமானது. இன்று இவ்விரண்டும் இல்லை எனில் உலகில் ஓர் அணுவும் அசைவதில்லை.
இதில் இணையம் நம் பணிகளை எளிதாக்கியது. இத்தகைய இன்றியமையாத ஊடகமாக விளங்கும் இணையம் தமிழோடு இரண்டறக் கலந்துவிட்டது.
இணைய தளங்கள் தமிழில் உருவாகின. இதன் வழி இணையத்தில் பல அரிய தகவல்கள், செய்திகள், இலக்கியங்கள், படைப்புகள் போன்றவையும்,
தமிழ்தகவல்கள் விக்கிபிடியா, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், வலைத்தளங்கள், மின்இதழ்கள்,
வலைப்பக்கங்கள்,
தமிழ்திரட்டிகள்,
மின் நூலகங்கள், இணைய வானொலிகள்,
சமூக வலைத்தளங்கள் போன்றவை தமிழில் காணப்படுகின்றன.
வாணிபத்திற்கு விளம்பரம்தேவை, விளம்பரம் இல்லையேல் பொருளாதார வளர்ச்சி இல்லை என்பதை வணிகர்கள் நன்கு உணர்வர். படிப்பறிவு இல்லா பாமரனும் விளம்பரங்களை வானொலியில் கேட்கும், தொலைக்காட்சியில் கண்டும் அறிந்தும் தெரிந்தும் கொள்கிறாள்,
பாமரனின் வாழ்வில் தமிழ் உயிர் மூச்சாய் விளங்குகிறது.
நான்காம்தமிழ்
முத்தமிழ் இன்றைய 21-ஆம் நூற்றாண்டில் நான்காம் அறிவியல் தமிழாய் உயர்வுபெற்று உலக மக்கள் நாட்டும் வெற்றிக்கொடியாகவும் தமிழர்களின் வாழ்வில் கிரீடமாக அமையப்பெற்றுள்ளது. துறைதோறும் துறைதோறும்,
நீதிமன்றம்,
மருத்துவம்,
பொறியியல்,
வானொலி,
தொலைக்காட்சி,
நாளிதழ் அனைத்துத் துறைகளிலும் தமிழ் முதன்மை இடம் பெற்றுள்ளது.
நிறைவுரை
“இனிமையும் இளமையும் இளைந்தமொழி தமிழ்
என்றும் நிலையாய் இருப்பதன் புகழ்
தனியொரு சிறப்புடன் தவழ்ந்திடும் கனிமொழி”
காலத்தால் அழியாத கன்னித்தமிழ் எங்கும் எப்போதும் எட்டுத்திக்கும் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்றால் மிகை அன்று.
“தேனமுதாய்த் திகழும் தீந்தமிழ் மொழி
வானமுதாய் வளர வகுப்போம் வழி”.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக