ஜெ.குமார்
உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை
சதக்கதுல்லாஹ் அப்பா கல்லூரி,
திருநெல்வேலி.
தமிழ்வழிக் கல்வி என்பது தமிழே முதன்மையாக அமையும் கல்வி முறைமை ஆகும். இன்றைய காலச்சூழ்நிலையில் தாய்மொழியில் கல்வி என்பது தேவையற்ற ஒன்று என்ற கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுகின்றது. மொழியின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்ற எண்ணத்தோடு இல்லாமல் வாழ்வியலுக்கும் தமிழ்வழிக் கல்வியை முன்னிருத்த வேண்டும். “அன்னசத்திரம் ஆயிரம் கட்டுவதைவிட சிறந்தது ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்றான் பாரதி.
ஊர்தோறும்,
தெருதோறும் தமிழ்ப்பள்ளிகளைத் தொடங்க வேண்டும் என்று ஆசைப்பட்டவனும் அவன்தான். ஆனால் தமிழ்வழிக்கல்வியை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அரசோ அரசுப்பள்ளிகளிலேயே ஆங்கிலவழி வகுப்புகளைத் தொடங்கி நடத்திக்கொண்டுள்ளது நடைமுறையில் உள்ள பல்வேறு வகையான கல்வி முறைகளில் தமிழக அரசின் பள்ளிக்கூடங்களுக்குரிய கல்வி முறை மட்டுமே தமிழ்வழிக்கல்வியைக் கொண்டுள்ளது.
தமிழ்ச் சமூகத்தில் தாய்மொழி வழிக்கல்விக்கு ஆதரவாக தமிழ் உணர்வாளர்கள்.
மொழி அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள்,
கல்வியாளர்கள்,
முற்போக்குச் சிந்தனையாளர்கள் என்று ஆதரவு இருந்தாலும் பொதுவெளியில் பெரும்பான்மையினர் ஆங்கிலமொழிக் கல்வியையே விரும்புகின்றனர். மேலோட்டமாகப் பார்த்தால் ஆங்கிலத்தின் தேவையும், ஆங்கிலமே அறிவியல் மொழி போன்ற கருத்துகளும் ஆங்கில வழிக்கல்விக்கான ஆதரவு மனநிலையாகத் தோன்றலாம். ஆனால் ஒரு சமூகம் முழுவதும் தமிழ்மொழியை விட்டு அயல் மொழியில் பயில விருப்பம் காட்டுவது, இந்தச் சமூகம் சந்தித்திருக்கும் உளவியல் நெருக்கடியாகும். இந்த நெருக்கடிதான் தமிழ்வழிக்கல்வியை தாழ்வானதாகவும்,
தரமற்றதாகவும் நம்பக் கற்றுத்தந்துள்ளது.
தமிழ் வழிக் கற்றலின் தேவைகள்
குஜராத்தில் நடந்த கல்வி மாநாட்டில் ‘கல்வி மொழி தாய்மொழியாக இருக்க வேண்டும். தாய்மொழி தனக்குரிய இடத்தைப் பெற்றுவிட்டால் நமது மூளைக்கும் இன்னும் தேவையான அறிவைப் பெறுவதற்கும் வசதியாக விடுதலை கிடைக்கும்’ என்றார் மகாத்மா காந்தி. மேலும்,
‘அந்நிய மொழியில் கல்வி என்பது நமது குழந்தைகளின் மூளையைச் சோர்வடையச் செய்யும். தேவையில்லாத பளுவினை அவர்கள் மீது செலுத்தி அவர்களை வெறும் உருப்போடுபவர்களாகவும் போலி நடத்தை உள்ளவர்களாகவும் மாற்றிவிடும். சுயமாக சிந்திக்கவோ செயல்படவோ தகுதியற்றவர்களாக மாற்றும். கல்விக்கான செலவு தேவையில்லாமல் அதிகமாகிவிடும்.
நமது தேசத்தின் சக்தியையும் ஆன்மாவையும் அழித்துவிடும்”
என்றும் கூறுகிறார். அவர் கூறியதைத்தான் நாம் இப்போது கண்கூடாகக் காண நேர்கிறது.
மொழி வெறும் தகவல் தொடர்புக்கு மட்டுமல்ல.
அது ஒரு இனத்தின் பண்பாட்டின் அடையாளம். பாடங்களைப் புரிந்து கொள்ளவும் இவ்வுலகிலிருந்து தனிமைப்படுத்தப்படாமல் இருக்கவும் தாய்மொழிவழிக் கல்வியே சிறந்தது. தமிழ்வழிக் கல்வி என்று இதனைச் சுருக்கிப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. தமிழ் வழியில் படிப்பதென்பது பிறமொழிகளைப் புறக்கணிப்பதல்ல. அவற்றைக் கற்றுக்கொண்டு அறிவியலை தமிழ் வழியாகப் படிக்க வேண்டும். அப்போதுதான் நம் மண்ணிற்குத் தேவையான படைப்புகள் வரும்.
இன்றைய இளம் வயதினருக்கு சமூகம் சார்ந்த சிந்தனைகள் தோன்றாமைக்கு தாய்மொழியாகிய தமிழில் கற்காததும் ஒரு காரணமாக இருக்கலாம்.
அயல் மொழியில் பயில்வதால் மாணவர்களுக்கு தேர்வு நோக்கில் படிப்பதைத் தவிர தீவிர வாசிப்புத் திறன் இல்லாமல் போகிறது. தமிழ்வழிக் கற்பதன் மூலம் மட்டுமே குழந்தைகள் தாங்கள் கற்பதை சமூகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். அதனால் அவர்களுக்கு கற்றல் எளிமையாகின்றது. அதோடு புரிந்துகொள்ளும் திறன் அதிகரிப்பதால் மற்றவர்களைப் பிரதியெடுக்காமல் தங்களது சுயத்தைப் பிரதிபலிக்கின்றனர். அவ்வாறு தங்களது சுயத்தை உணர்ந்து தன்னம்பிக்கையோடு வளரும் மாணவர்கள் தள்ளிப் போடப்பட்ட வெற்றிக்காக கோழைத்தனமான முடிவுகளை எடுப்பதில்லை.
வாழ்க்கையை துணிச்சலோடு எதிர்கொள்கின்றனர்.
கல்வியின் நோக்கமே கற்பவர்களின் தீவிர சிந்தனையைத் தூண்டுவதுதான். தீவிரமாக சிந்திக்கும்போதுதான் குழந்தைகள் கேள்விகள் கேட்கப் பழகுகிறார்கள்.
தமிழ் என்னும் தாய்மொழியில் கற்பதனால் மட்டுமே தோன்றும் அந்தச் சிந்தனை நேர்மையை தங்கள் வாழ்க்கையிலும்,
பணிபுரியும் இடத்திலும் பயன்படுத்த இயலும். தமிழ்வழிக்கல்வி என்பது வெறும் மதிப்பெண்களைத் துரத்தும் விளையாட்டுக்காக அல்ல. வாழச் சொல்லிக் கொடுப்பதும், வாழ்க்கையைச் சொல்லிக் கொடுப்பதும் தமிழ் வழிக்கல்விதான். அப்படிக் கற்கும் குழந்தைகளே நாகரிக சமுதாயமாக உருவாகி சமூகப்பண்பாட்டைக் காப்பாற்றுவர்.
தமிழ்வழிக்கல்வி
எதிர்நோக்கும் சவால்கள்
வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ தமிழ்வழிக்கல்வி ஒரு தடைக்கல் என்பது போன்ற மாயை எப்படியோ தோன்றிவிட்டது.
அந்த மாயை மறைய வேண்டுமானால் தமிழ்வழியில் கற்பதன் தேவை என்ன என்பதை மாணவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். நம் நாட்டைப் பீடித்திருந்த காலனி ஆதிக்கம் முடிந்துவிட்டாலும் அதன்மொழியின் ஆதிக்கம் நம்மை விட்டு இன்னும் அகலவில்லை. பள்ளிக்கல்வியிலேயே இத்தகைய பின்னடைவை சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், பல்வேறு துறைகளாக பெருகியுள்ள பொறியியல், மருத்துவம் போன்றவை தமிழ் வழியில் இருக்க சாத்தியமில்லை என்ற எண்ணமும் உருவாகியுள்ளது. பொருளாதார மதிப்பு உலகமயமாக்கல். தாரளமயமாக்கல் என பல்வேறு காரணிகள் உயர்கல்வியில் ஆங்கிலத்திற்கு தனி மதிப்பளித்துள்ளன.
ஆங்கிலம் சரியாகத் தெரியாவிட்டால் எதிர்காலத்தில் தன் குழந்தை தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் போய்விடுமோ என்ற அச்சம் பெற்றோர் மத்தியில் நிலவுகிறது.
இவற்றைக்கடந்து பேசவும் கற்கவும் தமிழ் மட்டுமே என்ற நிலை வரவேண்டும். கல்வித்துறை முழுவதுமே மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும். இந்தியா முழுமையும் ஒரே நுழைவுத் தேர்வு என்பதையும் மறுக்க வேண்டும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு என்றில்லாமல் முன்னுரிமை என அறிவிக்க வேண்டும். இவற்றை நடைமுறைப்படுத்துவதே தமிழ்வழிக் கல்வி எதிர்நோக்கியிருக்கும் சவாலாகும்.
ஆரம்பக் கல்வியிலிருந்து உயர்கல்வி வரை தமிழ்வழியிலேயே படித்து பல்வேறு போட்டித் தேர்வுகளிலும்,
ஐ.ஏ.எஸ் தேர்விலும் வெற்றி பெற்றுள்ள வெற்றியாளர்களே தமிழ்வழிக் கல்வியின் தேவைக்கான முன்னுதாரணமாக இருப்பர்.
‘உண்மையான கல்வி பள்ளியைவிட்டு வெளியேறிய பிறகுதான் நடக்கிறது” என்கிறார் கல்வியாளர் ஜான் டூவி. (யிஷீலீஸீ பீமீஷ்மீஹ்) ஏனென்றால், மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியேதான் தாம் கற்றதைச் சிந்திக்கத் துவங்குகிறார்கள். வேற்று மொழியில் கற்றதை தமிழ் மொழியில் சிந்திப்பது இயலாதபோது அது ஏட்டுக்கல்வியாகவே அமைந்து விடுகிறது ஜெர்மனி, பிரான்ஸ்,
சீனா,
ஜப்பான்,
ரஷ்யா போன்ற நாடுகளில் உயர்கல்வி வரை தாய்மொழிவழிக்கல்வி சாத்தியமாகும் பொழுது தமிழ்நாட்டில் மட்டுமல்ல தமிழ்கள் பெரும்பான்மையாகப் புலம்பெயர்ந்திருக்கும் அத்தனை நாடுகளிலும் தமிழ்வழிக் கல்வி என்பது சாத்தியம்தான்.
அந்த சாத்தியதை உருவாக்கி தந்துவிட்டுச் செல்வதுதான் வருங்காலத் தமிழச்சமூகத்திற்கு நாம் செய்யும் தொண்டாக இருக்க முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக