மு.ரா.மஜிதா பர்வின்
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி
திருநெல்வேலி
முன்னுரை
ஒரு மொழியில் உருவாக்கப்படும் இலக்கியங்கள் அந்தச் சமூகத்தினுடைய எழுத்து மொழியை மட்டுமல்ல.
பேச்சு மொழியையும் பயன்படுத்தித்தான் எழுதப்படுகின்றன. தமிழின் தொடக்க காலத்தில் எழுதப்பட்ட இலக்கியங்கள் அனைத்தும் இலக்கணத்திற்கு உட்பட்ட பா-வகையாக இருந்தது. அப்போது,
உயர் குலத்தவர்களுடைய மொழியே தமிழிலக்கியத்தின் மொழியாக இருந்தது. உயர் குலத்தவனுடைய வாழ்க்கையும் மொழியுமே தமிழ் இலக்கியமாக இருந்தது. அக்காலத்தில் ஏழைகளுடைய மொழி இழிவானதாக,
நீச பாஷையாகக் கருதப்பட்டது.
பிற்காலத்தில் ஏழைகளுடைய மொழிகளும்,
‘நீச பாஷை’ என்று ஒதுக்கப்பட்ட மொழியும் தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்றது. அவ்வாறு இடம் பெறும் போது, அது இலக்கியத் தகுதி பெறவில்லை. ஆனால், ‘சண்முக சுந்தரம்’ எழுதிய
‘நாகம்மாள்’,
‘ஹெப்ஸிபா ஜேசுதாசன்’ எழுதிய ‘புத்தம் வீடு’ போன்ற நாவல்கள் அந்தந்த வட்டார வாழ்வையும்,
மொழியையும் பதிவு செய்தது. அதன் பிறகு தான் தமிழில் ‘வட்டார மொழி’ என்றும்
‘வட்டார இலக்கியம்’ என்றும் அங்கீகரிக்கப்பட்டது.
அதன் பிறகு, ‘கி.இராஜ நாராயணன்’ எழுதிய
‘கோபல்ல கிராமம்’, ‘பூமணி’யின் ‘பிறகு’, ‘ப.சிவகாமி’யின் ‘ஆனந்தாயி’, ‘இமையத்தின்’ ‘கோவேறு கழுதைகள்’,
‘செடல்’,
‘ஆறுமுகம்’,
‘எங்கதெ’
போன்ற நாவல்களும், ‘மண்பாரம்’, ‘வீடியோ மாரியம்மன்’, ‘சாவு சோறு’,
‘கொலைச் சேவல்’, ‘நறுமணம்’ ஆகிய சிறுகதைகளும்,
பெருமாள் முருகனின் ‘கூள மாதாரி’ நாவலும் அந்தந்த வட்டார மொழியில் எழுதப்பட்டு,
வட்டார இலக்கியங்களாக அங்கீகாரம் பெற்றன. தற்காலத்தில் ‘கரிசல் காட்டு இலக்கியம்’, ‘நாஞ்சில் நாட்டு இலக்கியம்’, ‘கொங்கு நாட்டு இலக்கியம்’ என்று கொண்டாடப்படுகிறது.
1960-க்குப் பிறகு வட்டார இலக்கியங்களும், வட்டார மொழியும் தான் தமிழ் மொழியின் இலக்கியங்களாக மாறியிருக்கிறது.
அந்த வகையில் இன்றைய தமிழ் இலக்கியத்தின் முகம் என்பது, வட்டார வாழ்க்கையும், வட்டார வழக்குகளும் தான். அகவே 2000 வருட பாரம்பரியம் கொண்ட தமிழிலக்கியத்தில்,
21-ஆம் நூற்றாண்டு தமிழ் இலக்கியம் என்பது ‘வட்டார இலக்கியம்’ தான். ‘வட்டார மொழி’ தான்.
அதனால் வட்டார மொழி இலக்கியமும், வட்டார வழக்குச் சொற்களும் எக்காலத்திலும் இல்லாது. இக்காலத்தில் தான் நாவல்களில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதே போன்று சிறுகதைகளிலும் வட்டார வழக்குச் சொற்கள் அதிகமாக இடம் பெறுகின்றன.
இதிலிருந்து நாம் இனி வரும் காலங்களில் வட்டார வழக்குச் சார்ந்த சொற்கள் அழியாமல் ஆவணப்படுத்தப்படும்.
சொற்கள் வரலாறாகவும் மொழியின் ஆவணமாகவும் மாறி விடும். அவ்வாறு மாறும்போது,
அந்த மொழி அழியாமல் வளரும் என்று நாம் நம்பலாம்.
வட்டார வழக்குச் சொற்கள்
மொழியில்
‘எழுத்து வழக்கு’, ‘பேச்சு வழக்கு’, ‘உயர் வழக்கு’, ‘புலவர் வழக்கு’, ‘வட்டார வழக்கு’ என்று பல வகைமைகள் இருக்கின்றன.
எழுத்து வழக்கு என்பது, இலக்கண ரீதியாக, ஒருங்குபடுத்தப்பட்ட வாக்கிய அமைப்பைக் கொண்டது. இதற்குப் புத்தகங்கள், நாளிதழ்கள், வார, மாத இதழ்களை உதாரணமாகச் சொல்லலாம். பேச்சு வழக்கு என்பது எந்த வரையறையுமின்றி, மக்கள் தங்கள் தெருவில், வீட்டில், வேலை பார்க்கும் இடங்களில் இயல்பாக பேசுவது. இதில் ஒழுங்கான வாக்கிய அமைப்போ, இலக்கண அமைப்போ இருக்காது.
உயர் வழக்கு என்பது மொழியில் புலமை பெற்றவர்கள், புலவர்கள் பேசக்கூடிய,
பயன்படுத்தக்கூடிய வழக்கு. தற்காலத்தில் உயர் வழக்கு அல்லது புலவர்கள் வழக்கு என்பது படிப்படியாக குறைந்து வருகிறது. வட்டார வழக்கு என்பது குறிப்பிட்ட நிலப்பரப்பில் குறிப்பிட்ட பண்பாட்டுக் கலாச்சார சூழலில் வாழக்கூடிய மக்கள், பிரத்யோகமாக பயன்படுத்தப்படும் சொற்கள் மட்டுமே.. ஒரு வட்டாரத்திற்குரிய சொற்கள் பிற வட்டாரத்து மக்கள் பயன்படுத்தாத நிலையில் இருக்க வேண்டும். ஒரே சொல்லைப் பல வட்டாரத்து மக்கள் பயன்படுத்தினால் அது ‘வட்டார வழக்கு’ அல்ல.
அது
‘பொதுவழக்கு’
என்றாகிவிடும்.
தனித்த பேச்சு வழக்கும், வட்டார வழக்கும் இருப்பது அந்தந்த வட்டாரத்தின் சிறப்பாக மொழியாளர்கள் கருதுகிறார்கள். இந்த கட்டுரையில் சில வட்டார வழக்குச் சொற்களையும்,
அதற்குரிய பொதுப் பொருளையும் காணலாம்.
வட்டார மொழியின் தனித்தன்மை
வட்டார வழக்கு என்பது வெறும் சொல் மட்டுமல்ல. ஒரு வாக்கியம் மட்டுமல்ல. மொழியில் அது ஒரு வடிவம். வட்டார வழக்குச் சொல்லுக்கென்று தனித்த அழகும், அர்த்தச் செறிவும் உள்ளன.
“வழக்குச் சொற்களில் உயர்ந்தது தாழ்ந்தது என்பது இருக்க முடியாது. இல்லை.
ஆனால் உயர் வழக்கு, புலவர் தமிழ், பாமரர் வழக்கு, சாதி வழக்கு, இழிசனர் வழக்கு, கொச்சைத் தமிழ் என்று செழுமையான மொழிகள் என்று சொல்லப்படும் எல்லா மொழிகளுமே ஒரு காலத்தில் வட்டார மொழிகளாக, பேச்சு மொழிகளாகத்தான் இருந்துள்ளன என்பது வரலாறு. ஒரு மொழியின் சொல்வளத்தைப் பெருக்குவதற்கு வட்டார வழக்குகள், பொதுப் பேச்சு வழக்குகள் பெரிய பங்களிப்பைச் செய்ய முடியும். படைப்பு மொழி, தனது உயிர்ப்பைப் பேச்சு - வட்டார வழக்கிலிருந்துதான் பெறுகிறது.”(ப.3)
என்று
‘வட்டார வழக்கும் எழுத்தாளர்களும்’
என்ற கட்டுரையில் எழுத்தாளர் இமையம் மொழி குறித்து கூறியிருப்பது உற்று நோக்கத்தக்கது.
வட்டார வழக்குச் சொல் தரும் அழகையும் அர்த்தச் செறிவையும் எழுத்து வழக்குச் சொல்லோ, பொதுவழக்குச் சொல்லோ தராது. வட்டார வழக்குச் சொல் தனித்த ஒற்றைப் பொருளைத் தரக்கூடியது மட்டும் அல்ல. விரிந்த தளத்தில் பொருளைத் தரக்கூடியது.
வட்டார வழக்கு சொல் நயமும், ஓசை நயமும் கொண்டது. கேட்பதற்கும் படிப்பதற்கும் சுவை கூட்டக் கூடியது. வட்டார வழக்குக்கு என்று தனித்த அழகு ஒன்று இருக்கிறது. அந்த அழகு பொது மொழியில், எழுத்து மொழியில் கிடைக்கப் பெறாது. ஒரு வட்டாரத்தின் சிறப்பு என்பது நிலம் சார்ந்த, வாழும் முறை சார்ந்த, செய்யும் தொழில் சார்ந்த, ஆறுகள்,
ஏரிகள் கோவில்கள், உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் சார்ந்து மட்டுமல்ல, அந்த வட்டாரத்தில் பயன்படுத்தப்படும் மொழிசார்ந்தும் தான் உருவாகிறது.
உணவு சார்ந்த சொற்கள்
வட்டார மொழி பேசும் மக்கள், உணவுப் பொருட்களின் பெயரை, வாழும் இடத்திற்கு ஏற்ப, சூழலுக்கு ஏற்ப வெவ்வேறு விதமாகப் பயன்படுத்துகின்றனர். ‘உளுத்தங்காடி,
உளுத்தங்காளி,
உளுத்தங்கஞ்சி,
உளுத்தஞ்சோறு’
போன்ற சொற்கள் உளுந்தை முதன்மைப் பொருளாகவும்,
அரிசியை இரண்டாம் பொருளாகவும் கொண்டு செய்யப்படும் உணவு வகையின் பெயர்களாகும். ‘தொடுகறி - கட்டியாகக் கூட்டும் குழம்புமாக இருக்கும்’, ‘புளிக்கறி - புளிக்குழம்பு,
‘வெஞ்சனம்
- குழம்பு’,
‘இளங்குழம்பு
- கோழியிலிருந்து தயாரிக்கும் இறைச்சிக் கறி’, ‘கெட்டி குழம்பு - தடிப்பாக இருக்கிற குழம்பு’,
‘சும்மா குழம்பு - குறைவான பொருளைக் கொண்டு அவசரமாகத் தயாரிக்கப்படும் குழம்பு’,
‘புளிச்சாறு
- புளிக்குழம்பு’,
‘பொரிச்ச குழம்பு - தாளித்த குழம்பு,’
‘பொன்கறி
-ஆமை,
உடும்பு ஆகியவற்றின் கறி’, ‘மீன் கொதி - மீன் குழம்பு’, போன்ற குழம்பு சார்ந்து பல சொற்கள் வழக்கத்தில் இருக்கின்றன.
இவை எழுத்து வடிவில் இருக்காது. உணவுப் பொருட்கள் ஓர் இடத்தின் காலச்சார முறையைப் பழக்கவழக்கங்களை அடையாளாப்படுத்தும்.
‘சூடுக்காட்டி
- வேக வைத்துத் தயாரிக்கும் கறி’, ‘நொறுவல் - திண்பண்டம்’, ‘பதக்கப்போடு - காய்கறிகளை வேக வைத்தல்’,
‘மனகாவலம்
- தின்பண்டம்’,
‘வெந்தயக்காடி
- உளுந்தும் அரிசியும் சேர்த்துச் செய்யப்படும் உணவு வகை’, ‘கருப்பட்டி பணியாரம் -
கருப்பட்டி பாகு சேர்த்து தயாரிக்கும் உணவுப் பொருள்’, ‘கறிக்கஞ்சி - கறிச்சோறு’, ‘குப்பக்கீர
- கீரையில் ஒரு வகை’, ‘சித்தரான்னம்
- கலவைச்சோறு’,
‘சீனிச்சேவு
- காரச்சேவு’,
‘சீர்க்கஞ்சி
- திருவிழாவில் ஊற்றப்படும் கஞ்சி’, ‘செலவுக் குழம்பு - குழந்தை பெற்ற பெண்களுக்குக் கொடுப்பது’,
‘திரளி
- உணவு பண்டம்’, ‘தீச சோறு - வாணலியில் இருக்கும் சுண்டிய குழம்பில் சோற்றைப் போட்டு புரட்டி எடுத்தல்’, ‘துவட்டல் - பொரியல்’, ‘பனிக்கூழ் - நீராகாரம்’, ‘பன்னி நெய்
- பன்றிகறியிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்’,
‘பச்சப்புளி ரசம் - ரசத்தில் ஒரு வகை’, ‘ரச வட - வடையில் ஒரு வகை’, என பல உணவுப் பொருட்கள் சார்ந்த சொற்களாக இருக்கின்றன.
இந்தச் சொற்களின் வழியாக, வட்டார மொழியின் தனித்துவமான,
குறிப்பாக உணவு சார்ந்த சொற்களைக் கண்டறிய முடிகிறது.
தொழில் தொழில் சார்ந்த வட்டாரச் சொற்கள்
மக்கள் செய்கின்ற தொழில்களின் அடிப்படையில் தொழில்முறைச் சொற்கள் உருவாகிறது.
அவ்வாறு உருவாகின்ற சொற்கள் தனித்துவமான சொற்களாக இருக்கின்றன. ஒவ்வொரு பகுதியில் செய்யப்படும் தொழிலின் அடிப்படையில் சொற்கள் இருப்பதைக் காண முடியும். பத்தமடை என்ற பகுதியில் பாய் நெசவுத்தொழில் அதிகமாக செய்வதால் அங்கு, ‘அணைக்குழல்
- பழுத்த மூங்கில் குழல்’, ‘ஈங்குச்சிக்கும் யாருக்கும் தெரியாமல்’,
‘குச்சாலி
- ஒரு முனையில் மட்டும் துளையிடப்பட்ட ஒரு கம்பாகும்’, ‘மரல் - கற்றாளையிலிருந்து பதப்படுத்தி எடுக்கப்பட்ட நார், ‘மிதிபட்டை - நூலினை மேலேயும் கீழேயும் கொண்டு செல்லும் மரப்பட்டை’,
‘வண்ணக்கோரை
- நிறங்கள் பூசப்பட்ட கோரைப்புல்’,
‘வெள்ளைக்கோரை
- நிறங்கள்’,
‘பூசப்படாத இயற்கையான நிறம் கொண்ட கோரைப்புல்’
போன்ற சொற்கள் பாய் நெசவுத் தொழிலில் மட்டுமே பயன்படுத்தக் கூடியவையாகும். ‘துள்ளல்காரர் - தையல்காரர்’,
‘அத்தகூளி
- தினக்கூலி’
என அன்றாடக் கூலித் தொழிலாளர்களை அழைப்பதற்கான சொற்களாக இருக்கின்றன.
“ஐந்தடி நீளமான பெரிய மூங்கில் ஒன்றை அறுத்துக் கொடுத்தார் ஆசாரி. அதை “அணைகுழல்” என்றாள் நாகூரம்மாள்.
அதே ஐந்தடி நீளத்தில் சிறிய மூங்கில்களை அறுத்து அதை நெருடல் இல்லாமல் இழைத்துக் கொடுத்தார் ஆசாரி. அவைகளை முன்னும்பின்னும் தறியில் நூல் போடப் பயன்படுத்திக் கொண்டாள் நாகூரம்மாள்.”(ப.63)
கழனியூரன் எழுதிய ‘வளர்பிறைகளும் தேய்பிறைகளும்’
நாவலில் வரும் வரிகளின் மூலம், மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் சொற்களாக வட்டார வழக்குச் சொற்களாக இருப்பதை அறிந்து கொள்ள முடியும்.
தாவரங்கள், மரங்கள் குறித்த வட்டாரச் சொற்கள்
தாவரங்கள்,
மரங்கள் குறித்து அறிவியல் பெயர்கள் ஒரு பக்கம் இருந்தாலும்,
ஒவ்வொரு வட்டாரத்திலும் அதற்கான வழக்குப் பெயர்கள் மாறுபடுவதைக் காண முடியும். ‘உண்ணிச்செடி, - ஒரு வகை தாவரம், பூலாத்தி, - ஒரு வகை தாவரம், பூவுக்கு ஒருமுற ஒரு பயிர், முள் கத்திரிக்கா, - முட்கள் நிறைந்த செடியில் காய்க்கும் கத்தரிக்காய், அமளை - நீரில் வாழும் தாவரம்’ ஆகிய தாவரங்களை இந்தப் பெயர்களைச் சொல்லி அழைக்கின்றனர். ‘காஞ்சரகம்பு - மரத்தின் கிளை, பேய்களை அடக்கும் கம்பு’, ‘நாட்டுக்கம்பு - கம்பில் ஒரு வகை’ இது போன்ற பல வழக்குச் சொற்கள் நடைமுறையில் இருப்பதைக் காணலாம்.
விலங்குகள் பற்றிய வட்டாரச் சொற்கள்
வீட்டில் வளர்க்கும் வளர்ப்புப் பிராணிகளில் ஒன்று பன்றி. பொதுவாக ‘பண்ணி’ என அழைத்தாலும்,
வட்டார மொழியில் ‘கட்டக்கால்’ என்று அழைக்கப்படுகிறது.
இறப்பு குறித்த வட்டாரச் சொற்கள்
இறப்பு என்பது மனித வாழ்வில் இயற்கையாக நிகழ்வது. ஒவ்வொரு சமுதாயத்தினரிடையே இறப்பு நிகழ்ந்த பிறகு, செய்யப்படும் சடங்குமுறைகள் வெவ்வேறானவை. அந்த வகையில் இறந்தவரை அடக்கம் செய்வதை, ‘காடேற்று இறந்தவரைப் புதைத்தல் ‘நீட்டிமால - ஆடம்பரமாய் அலங்காரம் செய்தல்’, நீர் மாலைக்கு இறந்தவரின் மகனுக்குச் செய்யப்படும் ஒரு வித சடங்கு’ என்று கூறுவர். இஸ்லாமியர்களின் பயன்பாட்டுச் சொற்களில், ‘கபன் - இறந்தவர்களை புதைக்கும் குழி’, ‘சந்தூக்கு இறந்தவர்களைக் கொண்டு செல்லும் பெட்டி’ போன்ற சொற்கள் வழக்கில் இருக்கின்றன.
நிலம், வீடு சார்ந்த வட்டாரச் சொற்கள்
நிலத்தைக் குறிப்பிடுவதற்காக கிராமப் புறங்களில் சில சொற்களைப் பயன்படுத்துகின்றனர்.
அந்தச் சொற்களாவன, ‘கழனிக்காடு’ - வயல்வெளி, எனவும், ‘ரெண்டாங்கட்டு’
- வீட்டின் ஒரு பகுதி, ‘வளவு’
- தெரு,
‘நாலு கட்டு வீடு’ - நான்கு அறைகளைக் கொண்ட வீடு, ‘மூணு கட்டு வீடு’ - மூன்று பகுதிகளைக் கொண்ட வீடு, ‘ஓலைப்பறை’
- பனையோலையால் வேயப்பட்ட கூடம், ‘தார்சா’
- வீட்டின் அறையின் முன்னுள்ள பகுதி, ‘லேஞ்சி’- வீட்டின் ஒரு பகுதி எனவும் வழங்கப்படுகிறது.
மக்களின் பயன்பாட்டில் சமையல் செய்யும் போதும், சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பொருட்களின் பெயர்களை குறிப்பிடுகையில்,
‘கும்பா
- சாப்பிடுகிற பாத்திரம்’, ‘சின்ன உள்ளி
- சிறிய வகை பூண்டு’, ‘தணல்
- தீக்கங்கு’,
‘வேடுகட்டி
- பானையை மூடிக்கட்டுவது’, ‘கூலப்பொருள் - குழம்புக்கு உரிய மளிகை பொருட்கள்’, ‘கொடி அடுப்பு
- இரண்டு அடுப்பு’, ‘மண்சால் - மண் பானை’, ‘மண்ட வெல்லம் - அச்சு வெல்லம்’,
‘சீனி
- வெள்ளை சர்க்கரை’, ‘வட்டில் - உணவு உண்ணும் பாத்திரம்’, ‘ஒருமுறி - உடைத்த தேங்காயின் ஒரு பகுதி’, ‘ஈராய்ங்கம் - சின்ன வெங்காயம்’,
‘ஈயப்போணி
- அலுமினியப் பாத்திரம்’, ‘சூட்டடுப்பு - அடுப்புடன் இணைந்த சிறிய அடுப்பு’, ‘சொப்பு சட்டி - செப்புப் பாத்திரம்’, ‘தூக்குச்சட்டி - கைப்பிடியுள்ள பாத்திரம்’, ‘காவட்டு - காயாக இருப்பது, சரியாக பழுக்காதது’,
‘கூப்பதினி
- கூழாகக் காய்ச்சிய கருப்புக்கட்டி’
போன்ற சொற்கள் நடைமுறை வாழ்வில் பயன்படுத்தப் பட்டு வருகின்றன.
“அடுக்களைக்குள் ஈயச்சட்டியில் இருந்த நீத்தண்ணியைப் போனியில் ஊற்றினான். உரித்து வைக்கப்பட்டிருந்த நான்கைந்து ஈராய்ங்கத்தைக் கடித்து வாயில் போட்டுக்கொண்டு குடித்தான்.
அதில் கொஞ்சம் சோத்துப் பருக்கைகளும் கிடந்தன. ஈராய்ங்கத்தை கடித்ததும் நாக்கு விர்ரென்று இருந்தது. வாயைத் துடைத்தான். நேற்று அரைத்துத் தின்றது போக, மிச்சமிருந்த புளியங்காய்த் துவையலைக் கொஞ்சம் எடுத்து நாக்கில் இழுவினான்.
புளிப்பு,
கண்களை இறுக்கி மூட வைத்தன. பின், முகத்தைத் துடைத்துக் கொண்டு வெளியே நடந்தான்.”(ப.35) என்ற ‘ஆங்காரம்’ நாவலின் குறிப்பிலிருந்து உணவுப் பொருட்களின் பெயர்களானது, குறிப்பிட்ட பகுதியில் தனித்த அடையாளங்களைத் தருவதோடு, சொற் செறிவையும் கொண்டுள்ளதை அறியலாம்.
திருவிழாக்கள் சார்ந்த வட்டாரச் சொற்கள்
கிராமத்தில் வாழும் மக்களுக்கு
‘திருவிழாக்கள்’
பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. அந்த விழாவில்,
‘சல்லடம்
- சுடலை மாடசாமி ஆடுபவர் அணியும் கருப்புநிற கால்சட்டை’, ‘அம்மங்கொடை - கோவில் திருவிழா’ ‘மொளப்பாரி - நவதானியங்களால் முளைவிடச் செய்து பயிராக வளர்ப்பது’ ‘படப்பு - படையல் சாப்பாடு’ என ஆடையையும், விழாவினையும், உணவினையும் குறிப்பதற்கு இந்தச் சொற்களைப் பயன்படுத்துகின்றனர்.
உணவுப் பொருள்கள், தாவரங்கள், மரங்கள், சமையல் பொருட்கள்,
வீடு,
திருவிழா,
தொழில்கள்,
இறப்புகள் போன்ற நிகழ்வுகளில்,
பிற துறைகளில் பயன்படுத்தப்பட்ட சொற்கள் இல்லாமல், பொதுவாக பயன்படுத்தப்படும் சொற்களும்,
அதற்குரிய பொதுப் பொருளும்.
‘நோம்பி
- விசேஷ நாள்’, ‘பௌருசம் - பெருமை’, ‘வளைவி வளையல்’, ‘வீச்சம்
- நாற்றம்,
மனம்,
வாசனை’,
‘வேலி சாடு - வேலியைத் தாண்டுதல்’,
‘அறு பெட்டி - பனை நார் பெட்டி’, ‘குமருகள் - திருமணமாகாத இளம்பெண்’,
‘கை வீக்கம் - தகுதிக்கு ஏற்றார் போல்’, ‘தலைச்சுமடு - பாரம் தூக்கும் போது தலையில் வைத்துக்கொள்ளும் துணி’,
‘தழைத்துப் பெருகு - அதிகமான வளர்ச்சி’,
‘திரடுகள்
- ஏரிக்கரை’,
‘திருநீற்று மடல் - திருநீறு வைப்பதற்கான மரத்தால் ஆன பொருள்’, ‘திரும்புகால் - திரும்பும் பொழுது’,
‘தென்னந்தட்டி
- தென்னங்கீற்றால் செய்யப்பட்ட படல்’, ‘பொசுபொசு
- மிருதுவாக’,
‘பனயோல கொட்டான் - நார்ப் பெட்டி, ‘பால் நண்டு -குஞ்சு நண்டுகள்’,
‘வீங்கப் படி - அதிகமாக படித்தல்’,
‘வீடு ஒதுங்கு - தீட்டுக்கார பெண்கள் ஒதுங்குதல்’ இதுபோன்ற வட்டார வழக்குச் சொற்கள் மொழிக்கு வலிமையையும்,
வளமையையும் சேர்க்கக்கூடியது. ஒரு வட்டார வழக்குச் சொல் மற்றொரு வட்டார வழக்கு மக்களுக்கு புரியாமல் இருக்கலாம்.
புரியாமல் இருப்பதனால் அந்த சொல் வீண் என்றோ; தேவையற்றது என்றோ சொல்ல முடியாது. ஒரு மொழிக்கு உயர் வழக்கு, புலவர் வழக்கு, இலக்கிய வழக்கு, பொது வழக்கு, எழுத்து வழக்கு எவ்வளவு முக்கியமானதோ அதே அளவுக்கு வட்டார வழக்குச் சொல்லும் முக்கியமானதாகும்.
“படைப்பாளி குறிப்பிட்ட வட்டாரப் பகுதியையே தனது களமாகத் தேர்வு செய்து, அப்பகுதியின் இன, வர்க்கப் போராட்டங்களை, வரலாற்றை, சிக்கல்களை எடுத்துக் காட்டுவதுண்டு.
குறிப்பிட்ட பகுதியின் களத்தின் நாடோடிச் செய்திகளை,
வாழ்க்கை அமைப்பை, அவ்வட்டாரத்திற்கே உரிய மொழியின் உதவியுடன் காட்டுவதுண்டு. இப்படைப்பாளிகளை
வட்டார நாவலாசிரியர்கள் என்றும் அவர்களின் படைப்புகளை வட்டார நாவல்கள் என்றும் குறிப்பர்.”(ப.66)
‘தமிழ்ப் பண்பாட்டு வரலாறு’ என்ற நூலில் செ.வைத்தியலிங்கம் எழுதியிருப்பதன் மூலம் வட்டார நாவல்களின் கதைக்களமாக தேர்வு செய்யப்படும் இடமும், பயன்படுத்துகின்ற மொழிநடையும், அந்த வட்டாரம் குறித்த காலாச்சாரப் பண்பாட்டுக் கூறுகளையும்,
பழக்கவழக்கங்களையும் உள்ளடக்கி உருவாக்கப்படும் என்பதை அறியலாம்.
வட்டார வழக்குச் சொற்கள் பண்பாட்டை, கலாச்சாரத்தை அடையாளப்படுத்துகிறது.
அதன் வழியாக அவர்களின் பழக்கவழக்கங்களை, வாழ்க்கை முறையினை,
வழிபாட்டு முறையினை, நிலத்தை, நிலம் சார்ந்த வாழ்க்கை முறையினை நம்மால் அறிந்து கொள்ள முடியும்.
‘ரெங்கு
- தேநீர்’,
‘கொமரு
- கன்னிப்பெண்’,
‘முழுத்த பிள்ளை - வயதுக்கு வந்த பெண்’, ‘பொண்ணப்பெயல - பெண் தன்மை மிக்கவன்’, ‘வௌம் - கோபம்’, ‘மந்தை - கொல்லைப்புறம்’, ‘வௌங்காடு - தோப்பு’, ‘அருதலி
- கணவனை இழந்தவள்’, ‘இருசி’ - ‘பூப்படையமால் இருக்கும் பெண்’ என்பன போன்ற சொற்களின் மூலம் வட்டார வழக்கின் அழகைக் காணலாம்.
முடிவுரை
அண்மைக் கால தமிழ் நாவல்களில் இதுவரை பட்டியலிடப்பட்டுள்ள சொற்கள் இடம் பெற்றிருப்பதை காணமுடிகிறது. அதே போன்று வட்டார வழக்கிலேயே நாவல்கள் எழுதப்படுவதும்,
சாத்தியமாகியிருக்கிறது இவற்றிற்கு உதாரணமாக, ஏக்நாத்தின்,
‘கெடைகாடு’,
‘ஆங்காரம்’
போன்ற நாவல்களைக் கூறலாம். விஞ்ஞான வளர்ச்சியினால் தொழில் நுட்பங்கள் ஏற்பட்டு, இணையம்,
வலைத்தளம் போன்றவற்றின் வாயிலாக மொழி வளர்ச்சியடைவதையும் நாம் காண்கிறோம்.
ரோஜா முத்தைய நூலகத்தில்
‘மைக்ரோ ஃபிலிம்’ கொண்டு அக்கால, இக்கால நூல்களை கொண்டு ஆவணப்படுத்திய
இலக்கியங்கள், அழியாத வகையில் சேகரித்து வைக்கப்படுவதன் மூலம் தொழில் நுட்பம் மொழியின் பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்கும் பயன்படுவதைக் காண முடிகிறது.
இதனை தொழில் நுட்பம் நுணுகி செய்த அருட்கொடையாகக் கொள்ள முடியும். தொழில் நுட்பம் மொழியை அழிக்கும் என்பது மூடத்தனம்.
பழைய காலத்தில் ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்ட இலக்கியங்கள் அழிந்து போயின. கையெழுத்தில் எழுதி வைக்கப்படும் பிரதிகள் அழிந்து போய்விடும்.
ஆனால்,
இணையத்தில் வலைத்தளம், வலைப்பூ, இ-மெயில் போன்றவற்றில் தகவல்களை ஆவணங்களாக சேமித்து வைப்பதனால் அது என்றுமே அழிவதில்லை. தொழில் நுட்ப வளர்ச்சி மொழி வளர்வதற்கு, மொழியைப் பாதுகாப்பதற்கு உதவுவதோடு உலகம் முழுவதும் கொண்டு செல்கிறது. ஆகவே தொழில் நுட்ப வளர்ச்சியினால் பிற்காலத்தில், தமிழ்மொழி செழித்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.
பயன்பட்ட நூல்கள்
1.ஏக்நாத், ஆங்காரம்,டிஸ்கவரி புக் பேலஸ், கே,கே.நகர்,
சென்னை
-78. 2015.
2. கழனியூரன்,
வளர்பிறைகளும் தேய்பிறைகளும், நேஷனல் பப்ளிஷர்ஸ்,
2,வடக்கு உஸ்மான் சாலை, தியாகராயர் நகர், சென்னை-17. 2016.
3. சமுத்திரம்,சு.,
ஒரு கோட்டுக்கு வெளியே, மணிவாசகர் பதிப்பகம், 8/7,சிங்கர் தெரு,
பாரிமுனை,
சென்னை-108.
1976
4. சமுத்திரம்,சு.,
ஊருக்குள் ஒரு புரட்சி, மணிவாசகர் பதிப்பகம், 8/7,சிங்கர் தெரு,
பாரிமுனை,
சென்னை-108.
1980
5. வல்லிக்கண்ணன்,
நினைவுச் சரம், காவ்யா பதிப்பகம்,
16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட் புரம், கோடம்பாக்கம், சென்னை-24. 1972
6. வைத்தியலிங்கன்,செ.,
தமிழ்ப் பண்பாட்டு வரலாறு, அண்ணாமலை பல்கலைக் கழக வெளியீடு, 1991.
7.வட்டார வழக்கும் எழுத்தாளர்களும், இமையம் - கட்டுரை
8. தி இந்து தீபாவளி சிறப்பு மலர் அக்டோபர் 2017 - கட்டுரைகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக