திங்கள், 18 டிசம்பர், 2017

தொல்காப்பியமும் எதிர்காலத்தமிழும்


முனைவர் சு. பேச்சியம்மாள்
      உதவிப் பேராசிரியர்
     .சு.பல்கலைக்கழகம்,
   திருநெல்வேலி,

                உலகில் உள்ள மொழிகள் அனைத்தும் அதனதன் விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்கி கொண்டிருப்பதால் தான் ஒருவர் பேசுவது இன்னொருவருக்குப் புரிகின்றது. அவ்வாறு விதிகள் இல்லாமல் இருந்தால் புரியாமலே போய்விடும். அது பேச்சுமொழியாக, எழுத்து மொழியாக இருந்தாலும் சரி எல்லாவற்றிற்கும் இலக்கண நெறிமுறை உள்ளது.

    நம் பண்பாடு கலாச்சாரம், பொருளாதாரம், சமூகம் வளர்ச்சி பெறும் போது மொழியும் வளர்ச்சி பெற்று மாற்றம் அடைந்து வருகிறது. இந்த மாற்றம் வளர்ச்சி, அல்லது தேய்வு நோக்கிய மாற்றமாக இருக்கலாம். மாற்றத்திற்கு உட்படாதது எதுவும் உலகில் இல்லை என்றே கூறலாம். இந்தக் கருத்தோட்டத்தில் பார்த்தோமானால் மொழியும் மாற்றத்திற்கு உட்பட்டது தான். மாற்றத்திற்கு உட்படவில்லையெனில் அவை வழக்கிழந்த மொழியாகிவிடும்

   எழுத்து, ஒலியமைப்பு, சொல், சொல்லமைப்பு தொடர்பு, தொடரமைப்பு, சொற்பொருள் அமைப்பிலும் மாற்றம் ஏற்பட்டு இருக்கின்ற சொற்கள் மறைந்து புதிதாக பல சொற்கள் தோன்றி மொழியில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றதைப் பார்க்கின்றோம். மொழி வளர வளர புதிய இலக்கணங்கள் தோன்றுவது நல்லது அப்படித் தோன்றாமல் போனால் மொழியில் குழப்பங்கள் மிகுதியாகிவிடும்.

தொல்காப்பியம்

    தமிழ்மொழியில் தோன்றிய மிகப் பழமையான இலக்கணம் தொல்காப்பியம். இவ்விலக்கணம் தோன்றுவதற்கு முன் ஏராளமான இலக்கண இலக்கியங்கள் இருந்திருக்க வேண்டும். ஏன் அவர் இலக்கணம் வகுத்திருக்க வேண்டும்?. ஒரு சமுதாயம் வளமும் செழுமையும் பெற்றிருப்பதோடு. வேற்று மொழியின் தொடர்பும் வேறு பண்பாட்டின் தொடர்பும் ஏற்படும்பொழுது நமது மொழியைப் பற்றியும் நமது பண்பாட்டைப் பற்றியும் சிந்தித்து வரையறை செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு சூழலில் தான் தொல்காப்பியம் எழுதியிருக்கப்பட வேண்டும். அவருக்கு இருக்கிற இலக்கியப் புலமை பொருளதிகாரம் பார்க்கும் போது தெரிகிறது.

    வடமொழிச் சொற்களைத் தமிழில் கையாளும் பொழுது எப்படிக் கையாள வேண்டும்  என்பது பற்றியும் மொழிப்பெயர்ப்பு நூற்களைப்பற்றியும் அவர் எண்ணிப் பார்த்து பொருளதிகாரத்தில் அதைப் பற்றிப் பேசுகிறார். தொல்காப்பியர் இலக்கணக் கோட்பாடுகளை உணர்ந்து கொண்டு அதே போல் விரிவாக இலக்கணத்தைப் படைத்தவர்கள் இல்லை என்று கூறலாம்.

    நன்னூலார் வாழ்ந்த காலத்தில் மொழியில் ஏற்பட்டுள்ள மாற்றம் அன்றைக்கு ஓர் இலக்கணத்தின் தேவையை வலியுறுத்துகிறது. அதனால் தான் தொல்காப்பியத்;தைப் பெரிதும் போற்றுகிறது நன்னூலார். இன்னொரு இலக்கண நூலைப் படைத்து வழங்கியிருக்கிறார். இலக்கண உலகில் மூல நூல் ஆசிரியர்கள் எப்பொழுதும் பழையனவற்றைக் கழிப்பதற்கும் புதியனவற்றை ஏற்பதற்கும் தயங்கியதே இல்லை. நன்னூலார் இதை ஒரு தனி நூற்பாவிலேயே.

                “பழையன கழிதலும் புதியன புகுதலும்
                வழுவலகால வகையினானே
என்று குறிப்பிடுகிறார்.

    தொல்காப்பியர் கூறியுள்ள சில கோட்பாடுகளை நன்னூலார் விலக்கியும் தொல்காப்பியர் விதிக்காத சில விதிகளை நன்னூலார் சேர்த்தும் இருக்கக் காரணம் அவர் காலத்தில் ஏற்பட்ட மொழி மாற்றம் தான் தொல்காப்பியர் காலத்தில் சகரம்என்ற எழுத்து மொழிக்கு முதலில் வராது என்கிறார். சங்கம், சரி, சட்டி, சவுக்கு, சலனம் முதலான சொற்கள் தொல்காப்பியர் காலத்தில் தமிழ் மொழியில் இருந்ததில்லை நன்னூலார் காலத்தில் அப்படிப்பட்ட சொற்கள் வழக்கில் வந்தால் சகரம் வரலாம் என்று ஏற்றுக் கொள்கிறார்.

                நன்னூலார் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் இடைநிலைகள் எவை என்பதை (கிறு, கின்று, ஆநின்று) கூறுகிறார். ஆனால் தொல்காப்பியர் இடைநிலைகள் இன்னின்னவை என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை. மடிந்து போன பழமைகளை நீக்கவும் புதிதாகத் தோன்றியவற்றை ஏற்கவும் நன்னூலார் தயங்கவில்லை.

                நம் பண்பாடு மாறும்பொழும் மொழியிலும் இலக்கியங்களிலும் மாற்றம் ஏற்படுகின்றன. சமூதாயம் வரலாற்றுப் போக்கானது இலக்கிய வளர்ச்சியையும் மொழி வளர்ச்சியையும் கட்டுப்படுத்துவதால் எவ்விதக் கருத்தையும் கூறமுடியாது. இந்த உண்மையை மனத்தில் கொண்டு பார்க்கும்போது 20 -ல் நாம் காணும் மொழியியலும் இலக்கியங்களிலும் மிகப்பெரிய அளவிற்கு வளர்ச்சியும் மாற்றங்களிலும் ஏற்பட்டுள்ளன, என்ற உண்மை நமக்குத் தெளிவாகவே புலப்படுகிறது. ஆனால் இந்த வளா;ச்சியையும் மாற்றங்களையும் தெரிவுபடுத்திக் காட்ட ஓர் இலக்கண நூல் தேவையாகின்றது.

இன்றையத் தமிழ்

     “செம்மொழி இல்கியங்களஎன்று குறிப்பிட்ட இலக்கியங்கள் மட்டும் ஏன் சொல்லப்பட்டது. மற்ற இலக்கியங்கள் செம்மொழி இலக்கியங்கள் என்று அங்கீகாரம் இல்லாதற்கானக் காரணம் என்ன? அவ்விலக்கியங்கள் பண்பாட்டு மாற்றத்தினால் ஏற்பட்டமொழி கலப்பினம். அதைத் தடைசெய்ய வேண்டுமெனில் ஓர் இலக்கணம் நூல் தோன்றினால் மட்டும் சாத்தியமாகும் என்பதும் கேள்விக்குரியது. அதை நடைமுறைப்படுத்தி செயல்புரிந்து மேலும் அவ்விதியின் படி இலக்கியங்கள் தோன்ற வேண்டும்.

எழுத்துகளில் மாற்றம்

   இன்று நாம் பிற நாட்டினருடன் கொண்டுள்ள தொடர்புகளின் காரணமாக பிறமொழிகளின் பெயர்கள் தமிழில் எழுத  நேர்கிறது. அவ்வாறு எழுதும் போது பழைய இலக்கணம் மாறுபடுகிறது. தொல்காப்பியரும், நன்னூலாரும் இன்னின்ன எழுத்துகள் தான் முதலில் இறுதியில் வரும் என்று கூறியுள்ளனர். ஆனால் இன்று இரயில், லண்டன் ஸ்ரீமதி என்ற பெயர்கள் கையாண்டும் ஏற்றுக் கொண்டும் வருவது வருந்தத்தக்கது.

சொல்லமைப்பில் மாற்றம்

                நன்னூலார், தொல்காப்பியர் காலத்தில் இருந்த ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என ஐந்து பால்கள் இருந்தன. “அவர் அங்குச் சென்றார்என்பது தொல்காப்பியர் கால பலர்பாலுக்குரிய தொடர். இன்றுஅவர்கள்பலர்பாலுக்குரியதாக விளங்குகிறது. அதன்பின் வேற்றுமை இலக்கணத்தைப் பொறுத்த வரையில் ஐந்தாம் வேற்றுமை உருபுஇன்இன்றையத் தமிழில் மறைந்தே போய்விட்டது. அதற்குப் பதிலாக இன்றையப் பேச்சு வழக்கில்உங்களைத் தவிர எல்லாரும் வந்தார்கள்என்பதில் உள்ள தவிர என்பதே வேற்றுமைக் கருத்தை விளக்க வந்தச் சொல்லுருபுகளாக வளர்ந்து விட்டன.

வினைச் சொல் அமைப்பு

   பழந்தமிழில்வாஎன்ற வினைச் சொல் வந்தான், வருகிறான், வருவான் என்று ஆகியவை மூன்று காலங்களுக்குப் பயன்படவில்லை. ஆனால் இன்றையத் தமிழில் வந்தான், வருகிறான், வருவான் முதலான வினைச் சொற்களோடு வந்துவிட்டான், வந்து தொலைந்தான், வந்து பார்த்தான், வந்து கொண்டிருக்கிறான், வரப்பார்த்தான், வரமுடியும், வரலாம், வரவேண்டும், வந்தாலும் வரலாம், வராமலும் இருக்கலாம். வரப்போகிறான், வருவான்னு நினைக்கிறேன் என இப்படிப்பட்டப் பல்வேறு சொல் வளர்ச்சியை நாம் இன்றையத் தமிழில் வழங்கி வருவதைப் பார்க்கின்றோம். இத்தகைய வளர்ச்சியினை ஆராய்ந்து முறைப்படுத்தி இலக்கணப் புலவர்கள் விதி வகுக்க வேண்டும். அவற்றிற்கு இலக்கணங்களில் சரியான இடம் அளித்தால் தான் மொழியில் வளர்ந்துள்ள வளர்ச்சிக் கூறுகள் நிலைபெற்று வளர்ச்சி பெற முடியும்.

                இலக்கண நூலாசிரியர் சிலர் தன்வினை பிறவினை என்னும் பாகுபாட்டைக் கூறியுள்ளனர். தன்வினை என்னும் சொல் தொல்காப்பியத்தில் (சொல்.203) இடம் பெறுகிறது என்றாலும் பிறவினை என்னும் சொல்லோ, தன்வினை, பிறவினை என்னும் நன்னூலிலும் தன்வினை என்னும் சொல் மட்டுமே இடம் பெற்றிருக்கிறது. (35) இவ்விரண்டு நூல்களுக்கும் உரை எழுதியவர்களும் தன்வினை, பிறவினை என்னும் பாகுபாட்டைக் கூறியுள்ளனர்.

                ஓரொற்றுப் பெறுவன தன்வினை என்றும் ஈரொற்றுப் பெறுவன பிறவினை என்பதும் உரையாசிரியர்களின் கருத்து தன்வினைக்கோ, பிறவினைக்கோ வரையறை சொல்லவில்லை 17 - ம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கணக் கொத்து என்னும் நூல்தான் முதன் முதலில் இப்பாகுபாட்டை விரிவாகக் கூறுகிறது. தானே செய்யும் செயல் தன்வினை என்றும் பிறர் ஒருவினைக் கொண்டு முடியும் செயல் பிறவினை என்றும் வரையறைகள் சொல்லப்படுகின்றன. ஆனாலும் தன்வினை, பிறவினைப் பாகுபாடு தமிழ் மொழியின் அமைப்பை விளக்குவதற்கு உதவாது என்பது குறிப்பிடத்தக்கது.

சொல் தொகுதியில் மாற்றம்

                நம் எல்லோருக்கும் தெரிந்த சொல் நாற்றம் என்பது பழந்தமிழில் இதற்கு நறுமணம் என்று பொருள் இருக்கிற, இன்றையத் தமிழில் நாற்றம் என்றால் சகிக்க முடியாத தீய மணம் என்ற பொருளாகிவிட்டது. இவ்வாறு சொல் தொகுதியிலும் ஏற்பட்ட மாற்றங்களையும் தெளிவாக வரையறுத்துக் குறிக்க அகராதிகள் உதவ வேண்டும்.

தொடர்நிலை மாற்றம்

                நாம் செய்வினை, செயப்பாட்டு வினையைப் பற்றிப் பேசி வருகிறோம் தொல்காப்பியர் எழுத்ததிகாரத்தில் முதல் நூற்பாவிலேயே எழுத்தெனப்படுவ என்பது செயப்பாட்டு வினைத் தொடர் வருவதை நாம் பார்க்கிறோம். வாய்மை எனப்படுவதுயாதெனின் யாதொன்றும் தீமையிலாத சொலல்என்றத் திருக்குறளிலும் செயப்பாட்டு வினைத் தொடரைப் பார்க்கிறோம். இப்படித் தொல்காப்பியர் காலம் மூன்று, இன்று வரையில் தமிழில் செயப்பாட்டு வினைத் தொடர்களைத் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி வருகிறோம். இது பற்றி விரிவாக தொல்காப்பியத்திலும் நன்னூலிலும் விதி வகுக்கப்படவில்லை ஆனால் இன்றையத் தமிழில் செய்வினையும், செய்ப்பாட்டு வினையையும் தேவைக்கேற்ப மிகச் செம்மையான முறையில் பயன்பட்டு வருகின்றன. இவற்றிற்கெல்லாம் இனி எழுதும் இலக்கணத்தில் தான் தெளிவான வரையறையை வகுத்துக் கூற வேண்டும்.

நவீன இலக்கணத்தின் தேவை

   தொல்காப்பியர் காலத்திற்கும் நன்னூலார் காலத்திற்கும் நீண்ட இடைவெளி இருந்திருக்கிறது. நன்னூலார் காலத்திற்குப் பிறகு ஆயிரம் ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த இடைவெளியில் தமிழ்ச் சமூதாயத்தில் பலமாற்றங்கள் மிகுதி ஆகவே சமுதாயத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களுக்கு ஏற்ப அந்தச் சமுதாயத்தில் வழங்கி வரும் மொழியிலும் மாற்றங்கள் ஏற்படும் என்பது மறுக்க முடியாத உண்மை.

                தொல்காப்பியர் காலத்தில் யகர உயிர்மெய்களில் யகர ஆகாரம் மொழிக்கு முதலில் வரும் யாப்பு, யாண்டு போன்ற சொற்கள் மட்டுமே அவர் காலத்தில் தமிழ்மொழியில் இருந்திருக்கின்றன. அதன் பிறகு யமன் யவனர் போன்ற சொற்கள் தமிழில் தோன்றின இதற்கு நன்னூலார் அதற்குரிய விதியை மாற்றியமைத்திருக்கிறார். தொல்காப்பியர் காலத்தில்சின்என்ற விகுதியைப் பெற்ற சொற்கள் பெரு வழக்காகவே இருந்திருக்கின்றன எனக் கருதலாம் என்றிசினோரே, வந்திசின், நுண்ணிதின், கண்டிசின் முதலான சொற்கள் அவர் காலத்தில் எளிய சொற்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால் அச்சொற்கள் பிற்காலத்தில் மறைந்த வழக்காக ஆகிவிட்டன. இவற்றைக் கருத்தில் கொண்டு தான்பழையன கழிதலும் புதியன புகுதலும்என்று எடுத்துக் கூறியிருக்கிறார்.


    யான், யாம், யாங்கள், எந்தை, நூந்தை முதலான சொற்கள் இன்றையத் தமிழில் அருகிவிட்டன. அதற்குப் பதிலாக நான், நாம், நாங்கள், என் தந்தை உன் தந்தை முதலான சொற்கள் வலிமை பெற்றனவாக விளங்குகின்றன. இன்றைய மொழி வளர்ச்சி நோக்கில் கருதி பார்த்து இன்றைய வழக்கிற்கு ஏற்ப விதிகளை அமைத்துத் தருவது இன்றைய இலக்கணப் புலவர்களின் இன்றியமையாதக் கடமையாகும்

ழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் வகுப்பதோடு நின்று விடாமல் பயன்பாட்டு நோக்கில் மொழியை எத்தகையச்சூழலில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும், இக்கால மொழி நிலைக்கும் இன்றையத் தேவைக்கும் நம்முடைய தமிழ் மக்களின் பயன்பாட்டிற்கும் ஏற்ற வகையில் ஒரு விரிவான இலக்கணம் உருவாக்கப்பட வேண்டும். உருவாக்கப்பட்டால் மட்டும் போதாது அவற்றை நடைமுறைப்படுத்தி, செயலாற்றுவதோடு நின்றுவிடாமல் தமிழ் வளர்ச்சிக்கு உறுதிணையாக இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக