முனைவர் பா.ஸ்ரீரெங்கநாதன்
தி.தெ.மா.நா.ச.கல்லூரி
தெ.கள்ளிகுளம் &- 627113
நெல்லை மாவட்டம்
முன்னுரை:
சங்க காலம் முதற்கொண்டு கி.பி 19 ஆம் நூற்றாண்டின் மத்திமம் வரை மரபுக் கவிதையின் ஆட்சி அமோகமாய்த் திகழ்ந்தது. வடிவம் மரபு எனினும் பாடு பொருள் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டே விளங்கியது. ஆனால், கவிதையின் வடிவ மாற்றம் நிகழ்ந்த நூற்றாண்டில் தமிழ்ப் பண்டிதர்கள் தணல்மேல் நின்றதாய்த் தகித்துப் போனார்கள். காரணம் இவர்கள், இலக்கணம் இல்லாமல் கவிதையா? அதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்?.
மரபை உடைக்க இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? என்றக் கேள்வி வளையத்துக்குள் சிக்கியதே ஆகும். மரபுவாதிகள் இந்த அளவுக்குக் கலக்கம் அடைவதில் நியாயமும் இல்லாமல் இல்லை. சுமார் மூவாயிரம் ஆண்டுகளாய் நடைமுறையில் இருந்த ஒரு வடிவமல்லாவா?
என்றாலும்,
அவர்களது எண்ணத்தைச் சிதைக்கும் வகையில் புதிய வடிவம், புதிய அரண் அமைத்துக் கொண்டு ஆழமாய் வேர் ஊன்றிவிட்டது. கால அலையில் சிதைந்து சின்னாப் பின்னமாய்ப் போகும் என்று எண்ணிய அனைவரும் ஏமாற்றத்தையே சந்தித்தனர். புதுக்கவிதை என்ற அவ் வடிவம் நிலைபெறக் காரணம், அது கருத்துக்கும், உணர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்தமையே ஆகும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் வேரூன்றத் தொடங்கிய புதுக்கவிதை வடிவம் 20 ஆம் நூற்றாண்டின் பின்பகுதியில் பல்வேறு பரிமாணங்களாய் விரிவடைந்தது. படிமம், குறியீடு, யதார்த்தம்,
பெண்ணியம்,
தலித்தியம்,
ஹைக்கூ,
நவீனத்துவம்,
பின் நவீனத்துவம் எனப் பல்வேறு கோணங்களில் இவ்வடிவம் மாற்றம் பெற்றது.
புதுக்கவிதை என்ற புதிய வடிவம் தமிழுலகுக்குள் நுழைய மூலக் காரணமே, மரபுக் கவிதையின் பொருண்மை வறட்சி என்றால் மிகை இல்லை. அதை நிவர்த்தி செய்யத் தோன்றிய புதிய வடிவமாகிய புதுக்கவிதையிலும் அத்தகைய வறட்சியும் இருண்மையும் தோன்றாமல், பார்த்துக் கொள்வது கவிஞர்களின் தலையாயக் கடமையாய் இருக்க வேண்டும். ஆனால், புதுக்கவிதையின் பரிணாமத்தில் தோன்றிய வடிவங்களில் ஒன்றான நவீனத்துவம் சேறும், சகதியுமாய் நாற்றமடித்துக் கிடப்பது சகிக்க இயலாமலே இக்கட்டுரை எழுத முற்படுகிறேன்.
நவீனத்துவம் என்னும் போரில் ஆளாளுக்கு அடிக்கும் கூத்தும் கும்மாளமும் எதிர்காலத்தில் தமிழின் அழிவுக்குத் துணை நிற்குமோ என்ற ஐயம் என்போன்றப் பலருக்கு இல்லாமல் இல்லை. பொருண்மையற்று இருண்மை சூழ்ந்த இக்கவிதை வடிந்தால் பண்பாட்டு ரீதியான பிரச்சனைகள் கூடத் தோன்ற வாய்ப்புள்ளது என்ற கோணத்தில் இக்கட்டுரையை அமைத்துள்ளேன்.
நவீனவாதிகளும் நவீனத்தின் பொருளும்:-
ஆரம்பகாலப் புதுக்கவிதை வடிவம் மற்றும் பொருண்மை வெளிப்படுத்தும் விதம் ஆகியவற்றை ஒட்டு மொத்தமாய்ப் புறந்தள்ளி விட்டு நவீனத்துவக் கவிதைவாதிகள் புதிய வடிவ அமைப்பினையும்,
பொருள் உணர்த்தும் முறையினையும் கையாளத் தொடங்கினர்.
அவர்கள் கையாளும் கருப்பொருளும் உலகியலுக்கும், சமூகவியலுக்கும், குடும்பச் சூழலுக்கும் அப்பாற்பட்டு எதை எதையோ கூறுவது போன்று இருக்கிறது. மேலும், நாட்டை அழிக்கும் திட்டங்களோடு திரியும் தீவிரவாதிகள் போல், இவர்களும் தமிழை அழிக்கக் கங்கணம் கட்டிக் கொண்டு ஒரு கும்பலாகக் காணப்படுகின்றனர்.
மரபுக்கவிதைகள் மற்றும் ஆரம்பகாலப் புதுக்கவிதைகள் போன்றே எழுதுவோர் இன்றும் தமிழ் மண்ணில் ஏராளம்பேர் காணப்படுகின்றனர்.
ஆனால்,
ஒருவருக்கொருவர் தொடர்பும் இல்லாமலே விலகியே இருப்பர். ஆனால்,
நவீனத்துவவாதிகள் மொத்தம் ஆயிரம்பேர் இருந்தாலும் ஒருவருக்கொருவர் கனத்த உறவு வைத்துக்கொண்டு காணப்படுவர்.
அனைத்து நவீனத்துவவாதிகளும் தங்களுக்கென்று பொதுவான சில வார்த்தைகளைக் கைவசம் வைத்துள்ளனர். அவ்வார்த்தைகளை அனைவரும் பயன்படுத்தத் தவறு வதுமில்லை.
1970-க்குப் பிறகுதான் நவீனத்துவம் என்ற புதிய உத்தி புதுக்கவிதையில் காலூன்றியது. நவீனத்துவத்தில்
படைப்பாளி சுதந்திரம் முக்கியத்துவம் பெறுகின்றது. செறிவான மொழியை உருவாக்குவதாகவே நவீனத்துவக் கவிதையின் லட்சியம் தென்படும். கவிதையின் உள்ளடக்கம் சமூதாய மாற்றத்தை ஏற்படுத்த இயலாது போனதால், பொருண்மையற்ற இவ்வடிவம் தோற்றம் பெற்றது. எல்லா நவீனத்துவ வாதிகளுமே வாழ்க்கையின் மீது நம்பிக்கை இழந்த நிலையில் அதனை அபத்தமாகக் கருதினர். செறிவான வடிவம் ஒன்றே கவிதை என நம்புகின்றனர் இவர்கள் நேரடியாக சொல்லும் முறையைப் பின்பற்றாமல் பொருள் புரிதல் நிலைமையை வாசகனிடமே விட்டு விட்டனர். எழுத்தின் மூலம் சமூக மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கையை இழந்தவர்கள் இவர்கள். அதனால்தான் காற்றின் மீது படம் வரையும் முயற்சியில் முழு மூச்சாக இறங்கியுள்ளனர்.
வாசகர்களைப் பற்றி இவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. வாசகனுக்கும் தனக்கும் ஓர் இணக்கமானச் சூழ்நிலையை இவர்கள் உருவாக்க முயற்சிப்பதே இல்லை. இவர்களுக்குச் செவ்வியல் இலக்கணத்தின் மீதோ, புராணங்கள் மீதோ சிறிதளவும் நம்பிக்கை இல்லை. ஆகவே,
அவற்றை ஒரு பொருட்டாகக் கூட மதிப்பதில்லை.
இதேபோன்று நாட்டார் படைப்புகள் மீதும் மரியாதை இல்லை.
அறிவு சார்ந்த பார்வை அவசியம் என்று குரைத்துக் கொண்டு அறிவற்றவர்களாகச் செயல்படுவர்.
இவர்கள்,
அனுபவ அறிவைக் கேலிக்குரியதாகக் கருதுகிறவர்கள். அதனால்தான் அனுபவம் ஒருவனுக்கு அறிவினால் ஏற்படக்கூடியது என்று மாற்றி யோசிக்கின்றனர்.
ஆகவே தான் இவர்கள் வேரற்றவர்களாகவும், வெற்றுப் பேச்சாளர்களாகவும் விளங்குகின்றனர். சிந்திக்கவே நேரம் ஒதுக்காமல் சிந்தனை முனைப்பு அதிகம் தேவை என்று அறைகூவுவர். இவர்கள், சொல்வதைவிட சொல்லாமல் உணர்த்தவே முற்படுவர்.
செவ்வியல் கூறுகள், நாட்டார் வழக்காறுகள் போன்றவற்றையும் புறந்தள்ளிவிட்டுச் சமூக மாற்றத்தை நிகழ்த்த முடியாது என்பது இவர்களுக்கு ஏனோ விளங்கவில்லை.
எதார்த்தச் சித்திரிப்பு இல்லாமல் வாழ்வின் எதார்த்தத்தை எவர்க்கும் விளங்க வைக்க முடியாது என்பதை இவர்கள் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. அதனால்தான் இவர்களது படைப்புகளில் வறண்ட நிலை நிலவுகிறது. வாழ்க்கையைச் சொல்லாமல்,
தன்னை மட்டும் முன்னிலைப்படுத்துகின்ற சர்வாதிகாப் போக்கே இவர்களிடம் இன்றளவும் தொக்கி நிற்கின்றது.
படுகுழியில் பண்பாடு:-
இலக்கியம் என்பது சாதாரண ஒன்று அல்ல. அது இந்தச் சமுதாயத்தின் பாதுகாப்பு அரண். வாள் சாதிக்க முடியாதவற்றையும் பேனா சாதித்ததாய்ச் சரித்திரம் உண்டு. அதுமட்டுமல்ல,
பண்பாட்டு ரீதியான ஏற்றத்திற்கும்,
வீழ்ச்சிக்கும் இலக்கியங்களே பொறுப்பாகின்றன.
நமக்குக் கிடைத்திருக்கும் சங்கப் பாடல்கள் பண்பாட்டையும்,
குடும்ப வாழ்வையும் அரண்போல் காத்து வந்ததால்தான் தமிழ்ப்பண்பாடு உலக அரங்கில் இன்னும் மதிப்பும் மாண்பும் பெற்றுத் திகழ்கின்றது.
கலாச்சாரச் சீரழிவு ஏற்படாமல் தடுத்து நிறுத்தப்படுகிறது.
ஆனால்,
இன்று தமிழ்மொழியில் மேலை நாட்டுத் தாக்கத்தால் எழுதப்பட்டு வரும் நவீனத்துவக் கவிதைகள் நம் தமிழர் பண்பாட்டுக்குச் சீரழிவை ஏற்படுத்துவதோடு, தமிழ் மொழியின் அழிவுக்கும் உற்றத் துணையாய் விளங்குகிறது.
ஒரு சமுதாயத்தின் பிரதிபலிப்பாய் படைப்புகள் அமைந்தால் மட்டுமே அச்சமுதாயத்தின் அநீதிகள் பொசுக்கப்பட்டு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புக் கிடைக்கும்.
ஆனால்,
சர்வாதிகாரப் போக்கில் எழுதுவது எல்லாம் கவிதை என்று ஆணவத் திமிரில் அலைவோரின் கூட்டத்தால் பண்பாடு படுகுழியில் வீழ்ந்து அழிவது உறுதி.
“கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக்குடி” என்று தமிழ்க் குடியின் பழமையினையும் வீரத்தினையும் புறப்பொருள் வெண்பா மாலை கூறுகின்றது. நாம் வாழும் நிலப்பரப்பு உலகின் பழமையான பகுதி என்றும், மனித நாகரிகம் வளர்ந்த தொட்டில் என்றும் அறிஞர் கூறுவர். இத்தகையத் தொன்மைச் சிறப்புமிக்க பூமியில் தோன்றியத் தமிழ் மொழி உலக மொழிகளின் தாய் என்றெல்லாம் அறிஞர்கள் மதிப்பிடுவர். அத்தகையச் சிறப்புமிக்க மொழியைக் கொண்டு படைக்கப்படுகின்ற படைப்புக்கும்,
பல்வேறு சிறப்பு இருந்தது. காரணம் அப்படைப்புகள் மனித வாழ்க்கையினைச் செம்மைப்படுத்தும் சீரிய நோக்கத்துடனும்,
மக்களுக்கு நல்லொழுக்கத்தை நல்குவதாகவும் அமைந்தன. ஆகவே, பண்பாட்டினை உணர்த்தவல்ல இலக்கியங்களோ காலத்தால் நிலைத்து நிற்கும் என்பது நமக்கெல்லாம் புலனாகும் உண்மை ஆகும். ஆனால், இன்றைய நவீனத்துவக் கவிதைகள் பண்பாட்டுச் சீர்கேடுக்கு எந்தெந்த வகையில் துணை நிற்கின்றது என்பதைப் பார்ப்போம்.
நவீனத்தின் தற்கால நிலை:-
“செல்லரித்த நெஞ்சின்
சிறகொடிந்த கற்பனைகள்;
இடுப்பொடிந்த சந்தத்தில்
இடறிவிழும் வார்த்தைகளில்
ஊரில் பவனி”
புதுமைப்பித்தன் அவர்களின் இக்கவிதை, இன்றைய நவீனத்துவக் கவிதைகளின் போக்கை அப்படியே படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
“எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொதுஜனங்கள்; விரும்பும் மெட்டு இவற்றினை உடைய காவியம் ஒன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான்”
- என்ற பாரதியாரின் விருப்பம் நிறைவேறும் வகையிலேயே புதுக்கவிதை தமிழ் மண்ணைத் தழுவி இருக்க வேண்டும். ஆனால்,
இன்றைய நிலையோ வேறு. புரியாத சொற்கள், எழுதியவருக்கே தெரியாத நடை, விபரீத சந்தங்கள்,
எவர்க்கும் புரியாத ஏகாந்த பொருள் வெளிப்பாடு இவற்றாலானக் கவிதைகளைச் செய்து தர வல்லவர்கள் நம் நவீனத் தமிழ்ப் புலவர்கள்.
“மேற்கே ரொமாண்டிசம்
நாச்சுரலிசம்
அப்பால்
இம்பிரசனிசம்
என் மனைவிக்குத்
தக்காளி ரசம்”
என்ன ஒரு மேதாவித்தனம்?
இத்தகைய கவிதைக்கு உரிமை உடையவரான, சுந்தர ராமசாமி போன்றோரைத் தோளில் தூக்கிச் சுமக்க ஒரு கூட்டம் அலைகிறது
“மனித மலங்கள் தங்க ஒட்டியாணம்போல்
கரையோரங்களில் மின்னுகின்றன”
இது,
சுந்தர ராமசாமியின் தலைசிறந்த கவிதை என அவரது சீடர் பட்டாளங்களால் பாரட்டைப் பெற்றக்கவிதை” இதிலிருந்தே பார்த்துக் கொள்ளுங்களேன், நவீனக் கவிதைகளின் லட்சணத்தை!
தமிழ்,
இனிமையும் நீர்மையும் மிகுந்த மொழி. இம்மொழியில் படைக்கப்பட்ட பண்டைய இலக்கியங்கள் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த உன்னதமிக்கவை! அத்தகைய மொழியும்,
மொழி சார்ந்தப் படைப்புகளும் நிகழ்ந்த இடத்தில் சாக்கடை கலந்தாற்போல் நவீனத்துவம் நாற்றமடிக்கச் செய்கிறது. அப்படியெனில் அது பண்பாட்டின் சீர்குலைவுக்கும் துணை நிற்கும் என்பதில் யாதொரு ஐயமும் இல்லை.
“நான் சுத்தமானவன்
நான் உயர்குடியில் பிறந்தவன்
கோத்திரம் நட்சத்திரம் தெரியுமா?
கேட்பவனிடம்
- உன்
உடலில் வெளியேறும்
மல அசிங்கத்தைக் கை வைத்து
நீதான் கழுவணும்
தெரியுமோ என்றால்
சுத்தம் சத்தமில்லாமல்
செத்துவிடுகிறது!”
தமிழுக்கு ஏற்பட்ட பரிதாப நிலையென்றே எண்ணி, கவலைப்பட வைக்கிறது இக்கவிதை!
தொகுப்புரை:-
நவீனக் கவிதையின் எதிர்கால நிலை எப்படி இருக்கும் என்பதையே இக்கட்டுரையின் தொகுப்புரையாகத் தருகிறேன்.
‘தமிழ்மொழியில் எழுதப்பட்டுள்ள, ‘மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியம் போன்று உலகின் எந்த மொழியிலும் இதுவரைப் படைப்புகள் எழுதப்படவில்லை.
இதைப்போன்று காப்பியங்கள், நீதிநூற்கள் போன்றவையும் தோன்றி, தமிழ்மொழிக்குச் செம்மொழி தகுதியைப் பெற்றுக் கொடுத்துள்ளது. இந்நூற்கள் அனைத்துமே தமிழ் மக்களின் பண்பாட்டோடு தொடர்புடைய பழம்பெரும் இலக்கியங்கள்!
இப்படி கண்ணில் ஒற்றிக் கொள்ளும் அளவுக்குத் தகுதியான இலக்கியங்களைத் தந்தவர் கள் நம் முன்னோர்கள்.
ஆனால்,
இன்றோ சாக்கடைகளையும், சகதிகளையும், இலக்கியங்கள் வழி வாரி இறைக்கிறார்கள் நவீனத்துவவாதிகள்!
இனிவரும் காலத்தில் இவர்களின் அடிவருடிகளாய் வருபவர்கள் இதைவிடக் கேவலமானக் கவிதைகளைத் தரமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்? எனவே, படைப்புகள் செய்பவர்கள், தமிழ்மொழிக்கு இருக்கும் கற்பு நிலையிலிருந்து பிசகாமல், உயர்வானப் படைப்புகளைத் தர முன்வர வேண்டும். இல்லையேல் இவர்களால்தான்
‘தமிழினிச் சாகும்’ என்று சத்தியம் செய்து தருகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக