த.
முத்தரசன்,
இரண்டாமாண்டு இளங்கலைத் தமிழ் இலக்கியம்,
சதக்கத்துல்லாஹ்
அப்பா கல்லூரி,
ரஹ்மத் நகர்,
திருநெல்வேலி
- 627 011.
பாலைவனம் சோலைவனமாக வேண்டும். பசுங்கிளிகள் அங்கிருந்து பாட வேண்டும். சாலைகளில் பல தொழில் பெருக வேண்டும். சபைகளில் தமிழ் எழுந்து முழங்க வேண்டும் என்று பாடுகிறார் முண்டாசுக் கவிஞன் பாட்டுக்கொரு புலவன் பாரதி. ஆனால்,
இன்று தமிழ் வகுப்பில்கூட தமிழில் வருகைப்பதிவேடு எடுக்காமல் ஆங்கிலத்தில்தான் வருகைப் பதிவேடு எடுக்கப்படுகிறது. எங்கும் தமிழ்,
எதிலும் தமிழ் என்ற நிலைமாறி, எங்கும் ஆங்கிலம், எதிலும் ஆங்கிலம் என்ற நிலைதான் உருவாகிக் கொண்டிருக்கிறது. நாம் நமது மொழியைக் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி தமிழர் எனவும், மூத்த மொழி தமிழ் எனவும் பெருமை கொண்டிருக்கிறோம்.
ஆனால், அவ்வாறு பெருமை கொண்டிருக்கிற நமது மொழி வழக்காடு மொழியாக, பயன்பாட்டு மொழியாக, பண்பாட்டு மொழியாக, வழிபாட்டு மொழியாகக்கூட நமது தேசத்தில் இல்லை. ஏன்?
தமிழ் என்பது அவமானமா? ஆனால்,
இன்றும் நமது மொழி நமக்கு அடையாளமாகத் திகழ்கிறது. நாமோ நம் மொழியை அவமானமாக்கிக் கொண்டிருக்கிறோம்.
தூய தமிழில் பேசாமல் ஆங்கிலத்திலும் தமிழிலும் கலந்து பேசி இந்தக் காலகட்டத்திலேயே மெல்லத் தமிழ் சாகும் என்ற நிலையை எட்டிக் கொண்டிருக்கிறோம்.
இந்த நிலை மாற வேண்டும். ஏனென்றால் ஓர் இனத்தின் அடையாளமே மொழிதான். அந்த மொழி அழிந்துவிட்டால் அந்த இனமே அழிந்துவிடும்.
அதனால் நாம் நம் மொழியை நேசிக்க வேண்டும். மேலும் குறிப்பாக,
வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தமிழை மறக்கக் கூடாது. அதனை நமது பெருமைமிகு அடையாளமாகக் கொள்ள வேண்டும். ஆனால் இன்று நமது அடையாளமும் அழிந்துவிட்டது.
டேவிட் என்று பெயர் வைத்தால் இன்று அவன் கிறித்தவன் என்று அடையாளப்படுத்தப்படுகிறது.
சதாம் என்று பெயர் வைத்தால் அவன் இஸ்லாமியன் என்று அடையாளப்படுத்தப்படுகிறது. குமரன் என்று பெயர் வைத்தால் அவன் இந்து என்று அடையாளப்படுத்தப்படுகிறது. ஆனால், அவனை அவன் தமிழன் என்று அடையாளப்படுத்த ஏதாவது ஒன்று உள்ளதா? விபூதி அணிந்தால் அவன் இந்து. சிலுவை அணிந்தால் அவன் கிறித்தவன். குல்லா அணிந்தால் அவன் இஸ்லாமியன்.
ஆனால் நாம் தமிழன் என்பதற்கான அடையாளம் நம்மிடம் என்ன இருக்கிறது?
இந்நிலையில் தமிழ்மொழி வாழ்கிறதா? எதிர்காலத்தில் வாழுமா? என்று தமிழ் அறிஞர்கள் இலக்கியவாதிகள் மத்தியில் தலையில் தலையில் அடித்துக் கதறும் அழுகுரல் தமிழர்களைத் தொடுவதாயில்லை. ஏனென்றால் உலகமயமாக்கலின் வாசலால் ஊடகங்களில் ஆங்கிலம் தமிழ்மொழியின் உயிரைப் பறித்துக் கொண்டிருக்கிறது. தமிழர்களே வெட்கப்படுங்கள்.
கேடு கெட்டுப் போனோம். தமிழனைப் பார்த்து தமிழில் பேசு என்று சொல்லும் தலைகுனிவு நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் ஆட்சியில் இந்தி மொழி, கோயிலில் வழிபாட்டு மொழி வடமொழியான சமஸ்கிருதம்,
இசை மேடைகளில் தெலுங்கு, கல்லூரியில் ஆங்கிலம். இவ்வாறு நாம் பிற மொழிகளுக்கே முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இந்நிலை நம் மொழிக்குக் கிடைத்த வீழ்ச்சியா, இல்லையா? இந்நிலை மாற வேண்டும்.
மதச்சார்பற்ற நாட்டைப் போல் மதச்சார்பற்ற இலக்கியத்தைக் கொண்ட மொழி உலக வரலாற்றில் உண்டென்றால், அது அன்னைத் தமிழ் மொழிக்கு மட்டும்தான் அந்தப் பெருமை சாரும். தமிழ் இலக்கியத்தில் பக்தி இலக்கியமாக வைணவமும், சைவமும் திகழ்கின்றன. பகைவனையும் நேசிக்க வேண்டும் என்று கிறித்தவ இலக்கியம் திகழ்கிறது. மனிதநேயத்தின் விளக்காகவும் தன்னம்பிக்கைச் சிகரமாகவும் தியாகத்திற்கு ஈடாகவும் இஸ்லாமிய இலக்கியம் திகழ்கிறது.
பல புலவர்கள் சமயத்தை வளர்த்ததோடு பல இலக்கியங்களையும் படைத்துத் தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
மதத்தைக் கடந்து தமிழ்மொழி என்று அனைத்து சமுதாய மக்களையும் ஒன்றிணைத்தது அன்னைத் தமிழ்மொழி மட்டும்தான்.
இஸ்லாம் எங்கள் வழி, இன்பத் தமிழ் எங்கள் மொழி’ என்று உமறுப்புலவரும்,
‘இஸ்லாம் வழி நடப்போம், நாங்கள் தமிழ்மொழியைத்தான் கற்போம்’
என்று பாராளுமன்றத்தில் அறைகூவல் விட்ட கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களும் வளம்சேர்த்த மொழி நம் தமிழ் மொழி, மேலும் தமிழின் பெருமை கருதி ஆஸ்திரேலிய நாட்டில் தேசிய மொழிகளுள் ஒன்றாகத் தமிழ்மொழியை முன்மொழிந்து உள்ளது. மேலும் மலேசியாவில் தமிழ் ஆட்சிமொழியாக உள்ளது.
பல நாடுகளில் தமிழ் பேசப்படுகிறது. இந்தியாவில் இணையத்தில் மொழிபெயர்க்கப்படும் மொழிகளில் தமிழ்மொழி முதன்மை மொழியாகத் திகழ்கிறது.
மேலும் உலகத்தில் 6529 மொழிகள் உள்ளன.
அதில் பதினேழாவது இடத்தில் தமிழ் உள்ளது. மேலும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மொழிகள் இருந்தாலும் ஆறு மொழிகளுக்கு மட்டும்தான் செம்மொழித் தகுதி பெற்றிருக்கிறது.
அவ்வாறு செம்மொழித் தகுதி பெற்ற மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாகும். மேலும், தமிழின் பெருமை கருதி உலகத்தின் பொதுவான நூலான நம் திருக்குறளை அனைத்து நாடுகளும் தமது மொழிகள் மொழிபெயர்த்து வைத்துள்ளன.
அதிலும் செம்மொழித் தகுதி பெற்ற மொழியான சில மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டது தமிழுக்குக் கிடைத்த பெருமை ஆகும். மேலும்,
இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில்கூட,
தமிழில் எந்தப் பொருளையும் அடையாளப்படுத்தினால், ஆங்கிலத்தில் எழுதி வைத்து அந்தப் பொருளுக்கு அடையாளப்படுத்துவார்கள். ஆனால், சீனாவில் குடிநீர் என அனைத்து இடங்களிலும் தமிழில் பொறிக்கப்பட்டிருப்பது தமிழுக்குக் கிடைத்த பெருமையாகும். மேலும் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைந்திருப்பதும் உலகத் தமிழ் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
இவ்வாறு இத்தனைப் பெருமைகளை,
உலகில் எந்த மொழியும் கொண்டிராத பெருமையைத் தமிழ் கொண்டிருக்கிறது.
நம் தமிழ் மொழி பழமை மிக்கது என்று சொல்வதாலோ,
வளமை மிக்கது என்று சொல்வதாலோ, தனித்தியங்கவல்லது என்று சொல்வதாலோ தமிழுக்குச் சிறப்பில்லை. தமிழ் மொழி வாழ்கிறது என்று சொல்வதில்தான் தமிழின் சிறப்பு தங்கியிருக்கிறது.
எனவே,
தமிழை நாம் வாழ வைத்தால், தமிழ் நம்மை வாழ வைக்கும். தமிழ் என்பது அவமானம் இல்லை. தமிழ் என்பது அடையாளம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக