கோ.மாலினி சீதாவிஜயன்
மேல்மருவத்தூர்
தொடக்கஉரை:
செம்மொழி என்று மத்திய அரசால் 2004 ஆம் ஆண்டு தமிழ் மொழி கௌரவிக்கப்பட்டது. செம்மொழி என்பதற்குச் செம்மையாய் அமைந்த மொழி என்பது பொருள். கிளாசிக்கல் என்னும் ஆங்கிலச் சொல்லிற்கு இணையானத் தமிழ்ச்சொல் செம்மொழி.
ஒரு மொழி செம்மொழி என அறிவிக்கப்பட
11 தகுதிகள் வேண்டுமென மொழியியலாளர்கள் இலக்கணம் வகுத்துள்ளனர்.
அவை
1.தொன்மை
2.தனிச்சீர்மை
3.பொதுப்பண்பு
4.நடுவுநிலைமை
5.தாய்மைத்தன்மை
6.பண்பாடு,
கலை,
பட்டறிவு.
வெளிப்பாடு
7.பிறமொழி சார்பில்லாமல் தனித்து இயங்கும் 8.இலக்கிய வளம், தன்மை
9.உயர் சிந்தனை 10.கலை, இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடும் பங்களிப்பும்
11.மொழிக்கோட்பாடு என்பவையாகும். இவ்வளவு பெருமைகள் கொண்ட தமிழ் மொழி நாளடைவில் பின்தங்குவதன் காரணத்தைப் பதிவு செய்யவே இக்கட்டுரையைச் சமர்ப்பிக்கின்றேன்.
தமிழ் வளருமா?
மொழியியலாளர்கள் அறிவித்த 11 தகுதிகள் தமிழுக்கு இருந்ததால் செம்மொழி என அழைக்கப்பட்டது.
தமிழைச் செம்மொழியாக அறிவித்தால் மட்டும் தமிழ் வளருமா? என்ற கேள்வி சந்தேகத்துடன் எழுகின்றது.
இன்றையக் கல்வித் தளத்தில் தமிழ் மிக அதிக அளவில் பறக்கணிக்கப்பட்டு வருகிறது.
தமிழ் படிக்காமல் உயர்கல்வியைப் பெற முடியம் என்ற நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது.
இப்படி இருக்கும் பட்சத்தில் தமிழ் வளருவதற்கானச் சாத்தியக்கூறுகள் தமிழகத்தில் இருக்கிறதா? என்ற கேள்வியே உருவாகிறது.
இன்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பெருமளவு முளைத்து வருவது தமிழுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்ற சந்தேகம் தமிழ் ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது. உயர்கல்வியைத் தமிழில் நடத்த புத்தகங்கள் குறைவாகவே உள்ளன.
பேசும் தமிழ்மொழிக்கான இலக்கணம் இதுவரை வந்தபாடில்லை என்று ஒரு சாரார் கூறுகின்றனர்.
நம் முன்னோர் வகுத்துத் தந்த எழுத்துத் தமிழ்மொழியை அழியாமல் பாதுகாத்தாலே பேசும் தமிழ் வளர்ச்சி அடையும் என்பது என் கருத்து. தமிழில் படித்தவர்க்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். தமிழை ஆட்சி மொழியாக, உயர்கல்வி மொழியாக, நீதிமன்ற மொழியாக மாற்றும்பொழுதுதான் தமிழ் வளர்ச்சி அடையும்.
தேவைகள்:
பிறமொழி அறிவு
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாதப் புகழுடையப் புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
& ----பாரதியார்.
என்ற பாடலுக்கேற்பப் பிறமொழி நூல்களைத் தமிழில் மொழிப்பெயர்க்கவும்,
தமிழ் நூல்களைப் பிற மொழியில் மொழிபெயர்க்கவும் பிற மொழி அறிவு தேவைப்படுகிறது.
இதன் மூலம் தமிழின் சிறப்பை உலகறியச் செய்யலாம்.மேலும் பிற நூல்களின் சிறப்பைத் தமிழர் உணரும்வண்ணம் செய்யமுடியும். தமிழனின் புலமையையும்,
ஆற்றலையும் வெளிக்கொணரச் செம்மொழியான தமிழ் மொழியை அறியாதவர்களுக்கு, அவர்களுக்குப் புரிந்த அல்லது தெரிந்த மொழியில் மொழிபெயர்க்கப் பிற மொழிகள் தேவைப்படுகின்றன.
“மெல்லத் தமிழினிச் சாகும் -அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
என்றந்தப் பேதை உரைத்தான்-ஆ
இந்த வசையெனக் கெய்திட லாமோ
சென்றிடுவீ ரெட்டுத் திக்கும் -கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந் திங்கு சேர்ப்பீர்”
என்ற பாரதியின் வாக்கிற்கு இணங்க எட்டுத் திசையிலும் உள்ள கலைச் செல்வங்களை நம் நாட்டிற்குக் கொண்டு வருவதற்குப் பிறமொழி அறிவு தேவையாக இருக்கிறது. பாரதியாரே வடமொழி மற்றும் இந்தியில் புலமை பெற்றிருந்தார்.
ஆனாலும் தாய்மொழியானத் தமிழை மட்டும் அவர் கைவிடவே இல்லை. இதனை இன்றையத் தலைமுறையினர் புரிந்து கொள்ளவேண்டும்.
பிறமொழி அறிவு இருந்ததால்தான் உலகில் உள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளும்வண்ணம் பாரதியாரால் கவிதை இயற்றமுடிந்தது .
கணினிவழி தமிழ்க்கல்வி
‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்கும் காணோம்
பாமரராய்,
விலங்குகளாய்,
உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்வீர்
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.”
என்ற பாரதியின் கனவை மெய்ப்பிக்கும் வகையில் தமிழ்மொழியை உலகறியச் செய்ய வேண்டும். தமிழை உலகறியச் செய்வதற்குக் கணினியும் இணையமும் தேவையாக இருக்கின்றன.
ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குத் தகவல் பரிமாறிக் கொள்ள இணையம் மிகச்சிறந்த தகவல் தொழில்நுட்பமாகப் பயன்படுகிறது.
வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தமிழ் கற்க வேண்டும் என்ற ஆவலில் இருக்கும் மாணவர்கள் தமிழைக் கற்றுக்கொள்வதற்கும் பேசுவதற்கும் இணையம் உதவுகிறது.
இன்று தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகெங்கும் தமிழ் சிறந்து விளங்க கணினியும் இணையமும் மிகச்சிறந்தப் பங்கு வகிக்கின்றன.
தமிழாசிரியர்கள்:
தமிழை ஒரு மொழியாகக் கருதாத காரணத்தால் உயர்நிலைக் கல்வியில் தமிழின் தேவை என்பது கவலைக்கிடமாகவே உள்ளது. ஒரு சிலபேர்தான் தமிழ்மொழியை விரும்பித் தேர்ந்தெடுத்துக் கல்லூரிகளில் படிக்கின்றனர். ஒரு சிலபேர் கடமையே என்று தமிழைத் தேர்ந்தெடுத்துப்
படிக்கின்றனர்.
'தமிழ்’
என்ற சொல்லைப் பலரும் ‘தமில்’
என்றே கூறுகின்றனர். இவர்கள் மூலம் நல்ல தமிழ்மொழியை வளரும் இளஞ்சிறார்களுக்குப் பிழை இல்லாமல் கொடுக்க முடியுமா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
தமிழின் அழகே ‘நா நெகிழ்வுத்தன்மை”
கொண்டதாக இருப்பதே ஆகும். ழகர,
ளகர,
லகர வேறுபாடு றகர, ரகர வேறுபாடு மற்றும் ணகர, னகர வேறுபாடு தெரியாதபட்சத்தில் எதிர்காலத்தில் தமிழைப் பிழை இல்லாமல் பேசுவதும் எழுதுவதும் சவாலான ஒன்று ஆகும். சரியான உச்சரிப்பைச் சொல்லிக் கொடுக்காதத் தமிழ் ஆசிரியர்கள் மூலம் தமிழ் வளருமா? என்றால் இல்லை என்றே உறுதியாகக் கூறமுடியும். எனவே, சரியான உச்சரிப்புடன் கூடிய தமிழ்மொழியைக் கற்றுத் தருவதற்குத் தமிழை உயிர்மூச்சாகக் கொண்டிருக்கும் தமிழ் ஆசிரியர்கள் இன்றையக் காலகட்டத்தில் தேவையாக இருக்கின்றது
.
தாய்மொழிக்கல்வி
தாய்மொழி வழியில்தான் கற்றுக் கொடுத்தாக வேண்டுமா? என்றக் கேள்வியை இந்தியாவைத் தவிர வேறு எங்கும் கேட்க முடியாது. பயிற்று மொழி எதுவாக இருக்க வேண்டும் என்ற கேள்வி வளர்ந்த நாடுகளிலும், வளரும் நாடுகளிலும் கேலிக்கூத்தானக் கேள்வியாகும்.
ஏன் எனில் தாய்மொழியைத் தவிர, மக்கள் பேசும் மொழியைத் தவிர வேறு எதுவும் பயிற்று மொழியாக இருக்கக்கூடாது என்பது அவர்களின் எழுதப்படாதச் சட்டம்.
ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தமிழ்வழிக்கல்வி ஏழைக்கு மட்டுமே என்ற அவல நிலை உருவாகியுள்ளது. தாய்மொழி வழிக் கல்வியே இயற்கையானது.
கற்கும் மனதில் ஆளுமையை விரிவாக்கத் துணை நிற்பது தாய்மொழி வழிக்கல்வியே. ஜனநாயகம் வேர்விட்டுத் தழைக்கவும், அடிமட்ட மக்கள் வரையிலும் கல்வி விரிந்து பரவவும் தாய்மொழிவழிக்கல்வி அவசியமாகத் தேவைப்படுகிறது.
ஒரு குழந்தை தன் தாய்மொழியை நாள்தோறும் கேட்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளது. அதனால் குழந்தைக்குத் தாய்மொழியோடு பழக்கம் கிடைக்கிறது. ஆனால் பிற மொழியினைக் கேட்டு அம்மொழியோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பு இல்லை. அதனால் குழந்தைகளுக்கு மொழி தெரியவில்லை. எவ்வாறு பேசவேண்டும் என்று தெரியவில்லை.
இன்று தமிழ்நாட்டில் பிற மொழி அறிந்தவர்களுக்கும்,
தாய்மொழியான தமிழ்மொழியை மட்டும் அறிந்தவர்களுக்கும் இடையில் பெரும் வர்க்க வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனை மாற்ற தாய்மொழிவழிக் கல்வி தேவையாக இருக்கின்றது.
சவால்கள்:
மொழி என்பது ஒரு சமுதாய, அரசியல் கட்டுமானத்தை வெளிப்படுத்தும். ஒருவன் தான் அனுபவித்த உணர்ச்சியை அப்படியே பிறரும் அனுபவிக்கும்படி செய்யத் தூண்டும் மன வெளிப்பாடே கலை என்பர். அப்படிப்பட்ட கலை உணர்வைத் தூண்டக் கூடிய மொழியாகவே தமிழ்மொழி இன்றளவும் இருந்து வருகிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
இன்றைய சூழலில் தமிழ்வழிக் கல்வி என்பது மற்றவர்களின் ஏளனப்பார்வைக்கு அடையாளப்படுத்தப்படுகிறது. மேலும் வசதி இல்லாதவர்களின் கல்வி தமிழ்வழிக் கல்வியே என்றும் ஆணித்தரமாக மக்கள் மத்தியில் நம்பப்படுகிறது.
இந்நிலையில் எதிர்காலத் தமிழ் எப்படி இருக்கின்றது என்ற எதிர்பார்ப்பையும் தாண்டி, இன்று தமிழ்மொழி எப்படி இருக்கின்றது என்பதே ஒரு பெரிய சவாலாகும்.
இன்று தமிழ் ‘டமில்”
ஆகவே இருக்கின்றது.
மேலும் கணினிவழிக் கல்வியும்,
பிறமொழி அறிவும் தமிழ் மொழி வளருவதற்குத் தேவையாக இருக்கின்றன என்பது ஒரு புறம் இருந்தாலும்,
இவ்விரண்டாலும் தமிழ்மொழியின் இயல்பும், மாண்பும் மாறிவிடமோ என்ற ஐயமும் எழுகின்றன.
முதலாவதாகக், கணினிவழித் தமிழ் மூலம் எழுத்துகளை அல்லது சொற்களை ‘காப்பி’
செய்து
‘பேஸ்ட்’
என்ற உடன் அந்தச் சொல் வந்துவிடுகிறது.
இதன்மூலம் தேர்வுக்குத் தேவையான அடிப்படைத் திறனான எழுதுதல் என்பது முற்றிலும் குறைந்துவிடுகிறது.
இன்று தேர்வு என்பது முழுக்க முழுக்க எழுதுதல் திறனை அடிப்படையாக வைத்தே மதிப்பெண் வழங்கப்படுகிறது.
கணினியில் ஆங்கிலச் சொல்லைத் தட்டச்சுச்செய்யும் போது தவறான சொல் வந்தால் உடனே சிவப்பு வரி கோடு தவறு என்று அடையாளம் காட்டும். ஆனால் இவ்வசதி தமிழ்மொழியில் இல்லை. ஏன் எனில் தமிழ்மொழிக்கான எழுத்துப்பிழை என்னும் மென்பொருள் கணினியில் இல்லை. இதனால்தான் சமூக வலைத் தளங்களில் தமிழில் அதிகப் பிழை ஏற்படுகிறது.
தமிழறிஞர்களின் நூல்களைத் தேசிய மயமாக்குவது போலக் கணிப்பொறி தொடர்பானத் தமிழ் மென்பொருட்களைத் தேசிய மயமாக்கவேண்டும்.
சொற்களஞ்சியம் கணினியில் பாதுகாக்கப்பட வேண்டும்.
இரண்டாவதாக,
தமிழை வளர்ப்பதற்குப் பிறமொழி அறிவு என்பது உண்மைதான். ஆனால் யாராக இருந்தாலும் புதிதாக ஒன்று கற்றுக் கொள்ளும்போது அதன் மீது அதிகமான ஆசைகள் தோன்றும் என்பது இயல்பு. அப்படி இருக்கும்பட்சத்தில் பிறமொழியான இந்தி, ஆங்கிலம் போன்றப் புதிய மொழிகளைக் கற்றுக்கொள்ளும்போது அதன் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, தமிழை மறந்துவிடும் அபாயம்கூட ஏற்பட வாய்ப்புண்டு.
பிறமொழிகள் மூலம் தமிழை வளர்ப்பது மட்டுமே நம் நோக்கமாக இருக்க வேண்டும். இன்றைக்கும் நம் பெருமைமிகு தமிழ்ச் சமுதாயத்தில் அனைத்துத் தாய்மார்களும் தன் பிள்ளைகள் தன்னை ‘மம்மி”என்றே அழைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். தாயின் கருவில் இருந்து ஊட்டப்படவேண்டியது தாய்மொழித் தமிழ். ஆனால் இன்று கருவில் இருக்கும் குழந்தைகளிடம்கூட ஆங்கிலத்தில் பேசுகின்றனர்.
இத்தனைச் சூழலுக்கும் இடையில் தமிழ் மொழி நிலையாக நின்று வெற்றி பெறுவதே சவாலானச் செயல்தான்.
மேலும் அரசு ஆணைகள், அரசு அறிக்கைகள் பல நேரங்களில் ஆங்கில மொழியில்தான் வெளிவருகின்றன.
செய்தித்தாள்களில் அரசாணை அறிவிப்புகள் மொழிபெயர்க்கப்படும்போது உள்ளத் தெளிவு அரசு மொழிபெயர்க்கும் அரசாணைகளில் இருப்பதில்லை. அதனை மாற்ற எளிய நடையில் விரைவில் புரிந்து கொள்ளும்படி அரசு குறிப்புகள் இருக்க வேண்டும்.
முடிவுரை:
தாய்மொழியை வளமுறச் செய்வதற்குத் தேவையானவைத் தங்கள் தாய்மொழியில் உள்ள பற்றும் மதிப்பும்தானே தவிர; பிறமொழி அறிவுத் தேவை இல்லை. கல்வி கற்பித்தலில் செய்ய வேண்டிய முதல் வேலை அவரவர் தாய்மொழியில் பயிற்றுவிப்பதே.
இதன் மூலம் தமிழ் மொழி அமரத்தன்மை பெறும் என்பதில் எவ்விதக் கருத்து வேறுபாடு இல்லை.
‘ஆளப்போறான் தமிழன்” என்று கூறுவது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.
ஆனால் என்னுடைய நோக்கம் தமிழன் ஆள வேண்டும் என்பதல்ல. பிற மொழி குறுக்கீடு இல்லாமல் தமிழ்மொழி நம் இந்திய நாட்டை ஆள வேண்டும். குறைந்தபட்சம் நம் தமிழ்நாட்டை ஆளவேண்டும்.
அப்போது தான் மாற்றங்கள் ஏற்படும். எல்லா நுழைவுத் தேர்வுக்கும் தமிழ் மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படவேண்டும்.
தாய்மொழியில் படித்து ப்பாரதக்குடியரத்தலைவர் ஆனவர் திரு.அப்துல்கலாம் ஐயா. அதனால் தமிழர்கள் தன்னை உணரவும், தமிழர்களை இந்த உலகம் அறியவும், தமிழர்கள் பிறமொழி தேடிச் செல்லாதவாறு நம் தமிழ்நாட்டில் தமிழ்மொழி ஆட்சிமொழியாக வேண்டும் என்பது தமிழச்சியான எனது வேண்டுகோள். இதனை முறைப்படுத்தி தமிழ்மொழியைச் செம்மைபடுத்த வீறுகொண்டு ஒவ்வொரு தமிழனும் எழ வேண்டும்.
‘வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர் !
வாழிய!
பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக!”
துணைநூற்பட்டியல்
1.செம்மொழிச் சிந்தனை,
-ஆசிரியர் ஸ்ரீகுமார்
2.தமிழகத்தில் மாற்றுக்கல்வி,
- தொகுப்பு ஆசிரியர் பி.ஆர்.மகாதேவன்
3.கற்றலும் கற்பித்தலும்-,
ஆசிரியர் பேராசிரியர் சு.சுந்தரம்
4.பாரதியார் கவிதைகள்
பதிவுக்கு நன்றி..
பதிலளிநீக்குஅன்புடையீர்!,
இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
#தமிங்கிலம்தவிர்
#தமிழெழுதிநிமிர்
#வாழ்க #தமிழ்
இதுபற்றியான விரிவான தகவல்களுக்கு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
÷÷ ஙபமவழ